டெல்லியில் 'இந்தியா' கூட்டணி பேரணியின் முக்கிய நிகழ்வுகள் - என்ன நடந்தது?
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்தினர். இந்திய உச்ச நீதிமன்றம் நோக்கி சென்ற அவர்கள், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்துள்ளனர். இந்த பேரணியில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா மற்றும் பிற செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.
இந்த பேரணி குறித்து ஊடகங்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ், நாங்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராடுகிறோம் என்றார்.
காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் கூறும் போது, இது வெறும் ஆரம்பம்தான். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும் போது பாஜக ஆட்சியை விட்டு அகற்றப்பட்டால் மட்டுமே ஜனநாயகம் நிலைத்திருக்கும் என கடுமையாக விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டத்தை பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
பாஜக எம்.பி. அனுராக் தாகூர் கூறும் போது, "ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், ராகுல் காந்தி பழி சுமத்த அல்லது குறிவைக்க ஒரு பலிகடாவை தேடுகிறார்; சில சமயங்களில் தேர்தல் ஆணையம், சில சமயங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சில சமயங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர்" என விமர்சித்தார்.
பேரணிக்கு மத்தியில் பிபிசி தமிழிடம் பேசிய சிலர் தாங்கள் போராட்ட களத்துக்கு வந்தது ஏன் என விளக்கினர்.
முழு விவரம் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



