You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திலினி பியமாலி: இலங்கையில் பல நூறு கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் சிக்கிய இவர் யார்?
இலங்கை பொருளாதார நெருக்கடியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், பல பில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்ததாக பேசப்படும் பெண் குறித்து தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. அவரது பெயர் திலினி பியமாலி.
கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்றதன் ஊடாக, இவர் பல பிரபல்யங்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றியதாக திலினி பியமாலி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள் மாத்திரமன்றி, பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
திலினி பியமாலி என்ற குறித்த பெண், பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியிலேயே வாழ்ந்து வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
யார் இந்த திலினி பியமாலி?
களுத்துறையில் பிறந்த திலினி பியமாலி, பாடசாலை கல்வியை கூட முழுமையாக நிறைவு செய்யாத ஒருவர் என அறிய முடிகின்றது.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு மோசடி நடவடிக்கைகளின் ஊடாகவே செல்வந்தராகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன மோசடி?
வெளிநாடுகளில் நிதி முதலீடு, வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிதி முதலீடு ஆகியவற்றுக்கு வட்டியை வழங்குவதாக கூறி பிரபல வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக திலினி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு - உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியை, பல லட்சம் ரூபா வாடகைக்கு பெற்று, அதில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்றுள்ளார்.
இவ்வாறு நடத்திச் செல்லும் நிதி நிறுவனத்தின் ஊடாகவே, நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தற்போது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
திலினி பியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக கூறப்படும் பலரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த பெண் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, கடந்த 6ம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிக்குண்ட பிரபல்யங்கள் யார்?
திலினி பியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக அரசியல்வாதிகள், பிக்குகள், கலைஞர்கள், வர்த்தகர்கள் என பலரது பெயர்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் அந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருகின்றனர்.
திலினி பியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக கூறுப்படும் தரப்பினர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த சில தினங்களாக முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கொடஹேவா, சிங்களே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, பொதுபல சேனா அமைச்சின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்துள்ளனர்.
திலினி பியமாலியின் திரிகோ குரூப் அப் கம்பனி நிறுவனத்தில் நிதி முதலீடு செய்ததாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பலர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன், திரிகோ குரூப் அப் கம்பனி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக மேலும் பலர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு போலீஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.
விளக்கமறியலில் திலினியிடம் கைபேசி
இதற்கிடையே, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலி வசமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இருவேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்டிருந்தன. திலினி பியமாலியின் சிறை கூடத்தை சோதனையிட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிறையில் கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை உள்ளபோதும் அந்த சானங்கள் அவரிடம் வந்தது எப்படி என்பது குறித்து நேற்றைய தினம் விசாரணைகள் நடத்தப்பட்டன.
கொழும்பு மேலதிக நீதவான் தலைமையிலான விசாரணை குழாமினால் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலி விசாரணைக்காக அண்மையில் உலக வர்த்தக மையத்திலுள்ள அவரது திரிகோ குரூப் அப் கம்பனி நிறுவனத்தின் அலுவலகத்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.
தைகோ குழுமம் பதில்
தமது நிறுவனம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து முழு நாடும் அறியும் எனவும், தமது நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்தும் அவ்வாறே முன்னெடுக்கப்படும் எனவும் தைகோ நிறுவனங்கள் குழும ஊடகப் பேச்சாளர் சுரங்கி கொடித்துவக்கு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
''இந்த சம்பவம் தொடர்பில் முழு நாடும் அறியும். அதனால், திரிகோ குழுமத்தில் கடமையாற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. எமது கடமைகளை நாம் அன்று முதல் தொடர்ச்சியாக செய்து வருகின்றோம். கடமைகளை அவ்வாறே முன்னெடுத்து செல்லுமாறு நிறுவனத்தின் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிறுவனம் மூடப்படவில்லை. 34வது மாடியிலுள்ள திரிகோ குழுமத்தின் நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக பிரசாரம் செய்யப்படுகின்றது. ஊழியர்கள் தவறிழைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அவ்வாறு ஒன்றும் கிடையாது" என தைகோ நிறுவனங்கள் குழுமத்தின் ஊடகப் பேச்சாளர் சுரங்கி கொடித்துவக்கு தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்