You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ பூர்வீக இல்லம், ஆளும் கட்சி தலைவர்கள் வீடுகள் தீக்கிரை
இலங்கையில் ஆளும் கட்சி எம்.பி.க்கள், அரசு ஆதரவாளர்கள் வீடுகளுக்கு நேற்று போராட்டக்காரர்கள் தீவைத்ததால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதில், கோட்டாபய ராஜபக்ஷவின் பூர்வீக இல்லத்திற்கும் தீ வைக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று நண்பகலில் கொழும்பு காலி முகத்திடலில் ஆளும் அரசுக்கு எதிரான போராட்டக்குழுவினருக்கு போட்டியாக மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டதால் அங்கு வன்முறை சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பினார்.
காலிமுகத்திடலில் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என அறியப்படுபவர்கள் உருட்டுக்கட்டைகளுடன் போராட்டக்காரர்களை தாக்கியதாலும், போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரமும் தீக்கிரையானது.
இதையடுத்து, நேற்று மாலை முதல் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகளை போராட்டக்காரர்கள் தாக்கியதாக தகவல் வெளியானது. இதில் இலங்கையின் தென் மாகாணமான அம்பாந்தோட்டையில் உள்ள கிராமத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷக்களின் பூர்வீக வீட்டுக்கும் (தற்போது அருங்காட்சியகமாக உள்ளது) தீ வைக்கப்பட்டது.
மேலும், அலரி மாளிகைக்கு அருகிலுள்ள நுழைவாயிலுக்கும் தீவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருந்த அலரிமாளிகை இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கும் தீ வைக்கப்பட்டது. அப்போது கண்ணீர் புகைக்குண்டுகளை உபயோகித்து அவர்களை அங்கிருந்து போலீசார் கலைத்தனர்.
இதனிடையே, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு முழுமையாக தீக்கிரையாகியது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, தீக்கிரையாகியது.
இதேவேளை, மொறட்டுவை நகர சபை தவிசாளர் சமல்லால் பெர்ணான்டோவின் வீட்டுக்கு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, பின்னர் தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புப் பிரிவினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை, அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் வீட்டின் மீதும் மக்கள் தீ வைத்தனர். அத்துடன், குருநாகல் நகர சபை தவிசாளர் துஷார சஞ்ஜீவவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அரசு ஆதரவாளர்கள், ஆளும்கட்சி எம்.பிக்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நிகழ்த்தினர்.
திங்கள்கிழமை ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 190-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே, இலங்கை முழுவதும் புதன்கிழமை காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்