You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய போலீஸ் சாவடிகள்: இலங்கை திட்டம்
இலங்கையில் உள்ள சுற்றுலா மையங்களையும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்கும் வகையில் புதிய போலீஸ் சாவடிகளை அமைக்கப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது பாலியல் தாக்குதல் உட்பட சில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், வாடிக்கையாளரை ஏமாற்றும் வழிகாட்டிகள் ஆகியோரிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில் மேலும் 20 வரையிலான போலீஸ் சாவடிகளை அல்லது நிலையங்களை அமைக்கப்போவதாக போலீஸ் தரப்பு பேச்சாளர் பூஜித ஜயசுந்தர ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
ஏற்கனவே போலீஸாருக்கு அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருக்கும் நிலையில் இதற்கு மேலும் அதிகமாக ஆட்பலம் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் தென்பகுதியில் பிரபலமான மிரிஸ்ஸ கடற்கரைச் சுற்றுலாத் தலத்தில் ஒரு வெளிநாட்டு பயணி பாலியல் ரீதியாக தாக்கப்பட்டமை, மேலும் பல சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் குறித்து உள்ளூர் ஊடகங்களில் செய்தி வந்த பின்னர், இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித மத்தும பண்டாரவும், சுற்றுலா பயணிகளுக்கான போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே சில சுற்றுலா மையங்களில் போலீஸ் சாவடிகள் இருக்கும் நிலையில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாகவும், போலீஸாரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடற்கரைகளுக்கான ரோந்துகள் அதிகரிக்கப்படும் என்றும், சுற்றுலாப் பயணி எவராவது தாக்கப்பட்டது குறித்து தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோண் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மிரிஸ்ஸ பகுதியில் சில சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் வந்த செய்திகள் இங்கு சுற்றுலாத்துறையில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்செயல்களை அடுத்து இலங்கையில் சுற்றுலாத்துறை கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது. பல நாடுகள் இலங்கைக்கான பயணம் குறித்து சில பயண எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தன.
இலங்கையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறையும் கடந்த ஆண்டு எச்சரித்திருந்தது.
கடந்த மார்ச் வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு இரண்டு லட்சத்து முப்பதினாயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருக்கிறார்கள். 2018 இன் முடிவுக்குள் இருபத்தைந்து லட்சம் வெளிநாட்டு பயணிகள் வருவார்கள் என்று இலங்கை எதிர்பார்க்கிறது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியா, சீனா மற்றும் பிரிட்டிஷ்காரர்களே அதிகமாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்