நாட்டில் அமைதி நிலவ இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோரிக்கை

இலங்கையில் இனமோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றும் இங்குள்ள கிரிக்கெட் நட்சத்திரங்கள் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார மற்றும் மஹில ஜயவர்த்தன ஆகியோர் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.

இலங்கையை பொறுத்தவரை ஏனைய விளையாட்டுக்களை விட சர்வதேச மட்டத்தில் வெற்றியை ஈட்டித்தரும் கிரிக்கெட் ஆட்டத்துக்கே இளைஞர்கள் மத்தியில் மௌசு அதிகம். அதனால் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அர்ச்சுனா ரணதுங்க போன்றோர் அரசியலிலும்கூட வெற்றிகரமாகத் திகழ்கிறார்கள்.

அந்த நிலையில் தனது அடுத்த தலைமுறை உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்படுவதை தான் விரும்பவில்லை என்று மஹில ஜயவர்த்தன கூறியுள்ளார்.

25 வருடம் தொடர்ந்த ஒரு போருக்கு உள்ளாகவே தான் வளர்ந்ததாகக் கூறும் ஜயவர்த்தன, அண்மைய வன்செயல்களை தான் கடுமையாக கண்டிப்பதுடன், அதற்கு காரணமானவர்கள் நீதிமுன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னைய அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய. இலங்கையில் மாத்திரமல்லாமல் கிரிக்கெட் ஆடப்படும் நாடுகள் எல்லாவற்றிலும் இவருக்கு இன்றும் ரசிகர்கள் அதிகம். இந்த வன்முறைகளால் தான் மனம் நொந்துபோனதாக அவர் கூறுகிறார். கடுமையான காலங்களில் இலங்கை மக்கள் தயவுடனும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நாட்டில் வன்செயலுக்கும் இனவாதத்துக்கும் இடமில்லை என்று கூறுகிறார் மற்றுமொரு முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும், சிறந்த ஆட்டக்காரருமான குமார் சங்கக்கார. எந்த ஒருவரும் அவரது இனத்துக்காகவும், மதத்துக்காகவும் இலங்கையில் ஓரங்கட்டப்படவோ, அச்சுறுத்தப்படவோ ஆபத்துக்குள்ளாகவோ கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

அன்பும், நம்பிக்கையும், ஏற்றுக்கொள்ளலும் ஒரு நாட்டின் மக்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு

இதற்கிடையே இன மோதல்களால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நாளை பிற்பகல் 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு வேளையில் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் தவிர்ந்த எந்தவொரு பொதுமக்களும் பொதுஇடங்களில் நடமாடக்கூடாது என்று போலிஸாரின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது வீடுகளில் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

பள்ளிக்கூடங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :