You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடல் கொள்ளையர்களிடம் சிக்கித் தவித்த தமிழரின் அனுபவங்கள்
"சோமாலிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் துப்பாக்கி முனையில் கடல் கொள்ளயைர்கள் எங்களை மடக்கினார்கள்," என்று கொள்ளையர்களிடம் பிடிபட்ட அனுபவத்தை பிபிசி தமிழிடம் விவரித்தார் இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர் சண்முகம்.
சரக்குக் கப்பல் ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு, சோமாலியக் கடல் பகுதியில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அந்தக் கப்பல், இலங்கைக் கொடியுடன் இருந்ததாகவும், அதில் மாலுமி உள்பட இலங்கையைச் சேர்ந்த எட்டுப் பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவல் வெளியானதும், இலங்கை அரசு பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு, அவர்களை மீட்டது. அதற்கு, சோமாலிய நாட்டின் ஒரு பிராந்திய நிர்வாகமும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அமெரிக்க அரசாங்கம் முன்முயற்சி எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடற் கொள்ளையர்களிடம் பிடிபட்ட அனுபவத்தை, அந்தக் கப்பல் பணியாளர்களில் ஒருவரான சண்முகம் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
"எண்ணெய் கொடுக்கப் போனோம். நடுவழியில் ஒரு மீன்பிடி படகில் வந்த கொள்ளையர்கள் எங்களைக் கைது செய்துவிட்டார்கள். பிறகு ஒர் இடத்துக்குக் கொண்டு சென்று எங்களை அடைத்து வைத்துவிட்டார்கள். எங்களால் அசையக்கூட முடியவில்லை," என்றார் சண்முகம்.
"இரண்டு மூன்று நாள் கழித்து, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் கடும் முயற்சி எடுத்து, சோமாலிய அரசாங்கத்துடனும் பேசினார்கள். அதையடுத்து அவர்கள் எங்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். இன்னும் இரண்டு நாளில் இலங்கைக்கு வந்துவிடுவோம்," என்றார்.
"முதலில் 8 கொள்ளையர்கள், துப்பாக்கிகளுடன் எங்கள் கப்பலுக்குள் வந்தார்கள். பிறகு 30-40 பேர் வந்தார்கள். நாங்கள் எட்டு பேர் இருந்தோம். அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் நாங்கள் மிகவும் பயத்துடன்தான் இருந்தோம். ஆனால், எங்களை யாரும் துன்புறுத்தவோ அடிக்கவோ இல்லை" என்று தெரிவித்தார்.
"பயந்து கொண்டே இருந்ததால், அவர்களது காவலில் எவ்வளவு நாள் இருந்தோம் என்று சரியாகத் தெரியவில்லை. ஐந்து நாட்கள் இருந்ததாக எனக்கு ஞாபகம்," என்றார் அவர்.
"கொள்ளையர்கள், ஒரு கப்பலைப் பிடித்தால் அதை விடுவிக்க பணம் கேட்பார்கள். அதை கப்பல் நிர்வாகத்தினர் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் சிறிய சம்பளத்துக்கு வந்திருக்கிறோம். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக. ஆனால், நாங்கள் எதுவும் கொடுக்காமலே எங்களை அனுப்பிவிட்டார்கள்'' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் சண்முகம்.
“துப்பாக்கி முனையில் கடல் கொள்ளயைர்கள் எங்களை மடக்கினார்கள்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்