டென்னிஸ் உலகில் கூடுதலான ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆளுமை செலுத்திய பத்து பிரபலங்கள்-படங்களில்
படக்குறிப்பு, உலகளவில் இதுவரை அதிகப்படியான டென்னிஸ் ஆட்டங்களில் வென்றுள்ளவர் என்கிற பெருமை அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸையே சாரும். இதுவரை 1253 ஆட்டங்களில் வென்றுள்ள அவர் இல்லினாயிலுள்ள பெல்வில்லேயில் பிறந்தவர். 1970 ஆம் ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 16 பட்டங்களை வென்று 1996 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
படக்குறிப்பு, 8 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள இவான் லெண்டல் 1071 ஆட்டங்களில் வென்று இரண்டாவது இடத்தில் உள்ளார். செக் நாட்டில் பிறந்த இவர், பின்னர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். 1994-ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் பயிற்சியாளராக மாறினார். அவரது பயிற்சியின் கீழேயே பிரிட்டனின் ஆண்டி மர்ரி தனது முதல் கிராண்ட் ஸ்லாம், விம்பிள்டன் பட்டங்களையும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
படக்குறிப்பு, பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் மிலோஸ் ரவோனிக்கை வென்றதன் மூலம் ஃபெடரர் தனது 1000ஆவது ஆட்டத்தில் வென்ற பெருமையைப் பெற்றார். 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.
படக்குறிப்பு, அர்ஜெண்டினாவின் கில்லர்மோ விலாசும் இந்த மூவருக்கும் சளைத்தவரில்லை. ஃபெடரரை விட சற்றுகுறைவான ஆட்டங்களில் அவர் வென்றுள்ளார். ஆதாவது 929 ஆட்டங்களில். களிமண் ஆடுகளங்களில் அவர் தொடர்ச்சியாக பெற்றிருந்த 54 வெற்றிகளை பின்னர் ரஃபேல் நடால் முறியடித்தார்.
படக்குறிப்பு, அதிக ஆட்டங்களை வென்றவர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் ஜான் மெக்கென்ரோ. அவர் 875 ஆட்டங்களில் வென்றுள்ளார். அவர் பதின்பருவத்தில் இருந்தபோது, 1977 ஆம் ஆண்டு தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். அந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் ஆட்டத்திலேயே முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை மெக்கென்ரோ வென்றார்.
படக்குறிப்பு, இருபது ஆண்டுகள் டென்னிஸ் உலகில் வலம் வந்த அமெரிக்காவின் ஆண்ட்ரே அகாசி 870 ஆட்டங்களில் வென்றுள்ளார். அவர் 60 ஏடிபி பட்டங்களையும், 8 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார்.
படக்குறிப்பு, நான்கு முறை டேவிஸ் கோப்பையை வென்றவரும், உலகத் தரப்பட்டியலின் முதலிடத்தில் முன்னர் இருந்தவருமான ஸ்வீடனின் ஸ்டெஃபான் எட்பர்க் 801 ஆட்டங்களில் வென்றுள்ளார்.
படக்குறிப்பு, ருமேனியாவின் இலி நாஸ்டாஸே வென்ற ஆட்டங்கள் 779. டென்னிஸ் உலகில் மிகவும் கோபப்படுபவர் என்று முதலாவதாகக் கருதப்பட்டவர் அவர்தான். மிகவும் கலகலப்பானவரான அவர் சில சமயம் கோபத்தில் கொந்தளிப்பதும் உண்டு.
படக்குறிப்பு, கடந்த 2002 ஆம் ஆண்டு பீட் சாம்ப்ராஸின் டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவர் 14 ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்திருந்தார். 762 ஆட்டங்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார். மிக இள வயதில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற பெருமை அவருக்கு உண்டு. 1990 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை அவர் வென்றபோது அவருக்கு 19 வயது.
படக்குறிப்பு, அதிக ஆட்டங்களை வென்ற முதல் பத்து பேரில் கடைசி இடத்தில் இருப்பவர் ஜெர்மனியின் போரிஸ் பெக்கர். 713 ஆட்டங்களை வென்றுள்ள அவர் 1967 ஆம் ஆண்டு ஜெர்மனியில் லைமென் நகரில் பிறந்தார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை 17 வயதே முடிந்திருந்த நிலையில் 1985 ஆம் ஆண்டு வென்றார். அந்தப் போட்டியை மிகவும் குறைந்த வயதில் வென்ற பெருமை அவருக்கு உண்டு. ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உட்பட 49 ஏடிபி ஒற்றையர் பட்டங்களை போரிஸ் பெக்கர் வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு உலகத் தரப்பட்டியலின் முதலிடத்தில் அவர் இருந்தார்.