You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் ப்ரீமியர் லீக்: ஸ்மிருதி மந்தனாவை ரூ. 3.4 கோடிக்கு ஏலம் எடுத்த ஆர்சிபி - முழு விவரம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்ட வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனாவை ரூ. 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
ஆடவருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.2008-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக 15 சீசன்களை கடந்துள்ளது. ஆடவர் பாணியில் பெண்களுக்கென டி20 தொடரை விமன் ப்ரீமியர் லீக் என்கிற பெயரில் இந்த ஆண்டு முதல் நடத்துகிறது இந்திய கிரிக்கெட் வாரியம். டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் அறிமுக தொடரில் களமிறங்க உள்ளன.இந்த அணிகள் தங்கள் வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் உள்நாடு, வெளிநாடு என மொத்தம் 448 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக 90 வீராங்கனைகள் வரை ஏலம் எடுக்கப்படுவர்.
அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீராங்கனை
இதுவரை நடைபெற்ற மகளிர் ப்ரீமியர் லீக் ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ. 3.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்திருக்கிறது.
26 வயதாகும் இடது கை நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தானா மும்பையை பூர்வீகமாகக் கொண்டனர்.
2013இல் இந்திய அணியில் அறிமுகமான ஸ்மிர்தி மந்தானா, இதுவரை 112 டி20 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 2651 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது அதிகபட்சம் 86 ரன்களாகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக அவர் செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாப் 5 ஏலம் இதுதான்
இன்றைய ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா முதலிடம் வகிக்கிறார். அவரைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீக் கார்ட்னரை ரூ. 3.20 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
இங்கிலாந்து வீராங்கனை நட்டாலி சீவர் பிரன்ட் ரூ. 3.2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ரூ. 2.6 கோடிக்கு இந்தியாவின் தீப்தி சர்மா உ.பி வாரியஸ் அணியிலும் 2.2 கோடி ரூபாய்க்கு ஜெமிமா ரோட்ரிகஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.
5 அணிகளும் மொத்தம் 59 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவழித்து 87 வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ், யு.பி வாரியர்ஸ் அணிகள் தங்கள் மொத்த நிதியையும் செலவழித்துள்ளனர்.
டெல்லி அணிக்கு 35 லட்ச ரூபாயும் பெங்களூருக்கு 10 லட்சம், குஜராத்திற்கு 5 லட்ச ரூபாயும் மீதம் உள்ளன. மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் ஆட்டம் மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்