You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆசிய கோப்பை இந்திய கிரிக்கெட் அணி குறித்து எழும் கேள்விகள்
- எழுதியவர், சந்திரசேகர் லூத்ரா
- பதவி, மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக
ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலம் இந்திய கிரிக்கெட் பிரியர்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். பல நாடுகளுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவது மட்டுமின்றி, ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்கிறது.
ஆசிய கோப்பை 2022, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும். இந்தப்போட்டிக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விராட் கோலி ஒரு இடைவேளைக்குப் பிறகும்,கேஎல் ராகுல் காயத்திற்குப் பிறகும் திரும்பியுள்ளனர்.
மறுபுறம், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார்கள். இருவரும் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பெற முயற்சித்து வருகின்றனர்.
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் ஆசிய கோப்பை அணியில் இடம் பெறவில்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர், வேகப்பந்து வீச்சாளர் தீபக் செஹர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் ஆகியோர் தேவைப்பட்டால் அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் அவேஷ் கான் ஆகியோருக்கு பதிலாக விளையாடுவதற்காக ஸ்டாண்ட் பை வீரர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் கோலி விளையாடவில்லை.
தற்போது அவர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் இந்த வருகை குறித்தே அதிக கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கோலி திரும்புவது குறித்த விவாதம்
தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே உடற்தகுதி உச்சத்தில் உள்ள வீரர்களில் கோலியும் ஒருவர். ஆனால் இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கிற்குப் பிறகு இந்தியா 22 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 17 போட்டிகளில் கோலிஅணியில் சேர்க்கப்படவில்லை.
டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு அவரது சராசரி 20.25 ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஸ்ட்ரைக் ரேட்டும் முன்பை ஒப்பிடும்போது 128 ஆகக் குறைந்துள்ளது. இதையும் மீறி தேர்வுக்குழுவினர் கோலி மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உடற்தகுதி மட்டுமின்றி கோலியின் சாதனைகளும் அபாரமானவை. இதுவரை விளையாடியுள்ள 99 டி20 போட்டிகளில், கோலி சராசரியாக 50.12 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பையில், கோலியின் சராசரி 76.81 ஆக உள்ளது.
ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க கோலி கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக காத்திருக்கிறார் என்பதும் உண்மைதான். கடைசியாக 2019 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக அவர் சதம் அடித்தார். அவர் 2022 ஜூலை 17 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசியாக விளையாடினார்.
இதற்குப் பிறகு, அவர் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் எட்டு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் ஆகஸ்ட் 18 முதல் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று ஒருநாள் பந்தயங்களிலும் அவர் பங்கேற்கவில்லை.
கோலி நீண்ட நாட்களாக சதம் அடிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவரது திறன் அவரைவிட்டுச்செல்லவில்லை. டி20 போட்டிகளில் சில அரைசதங்களை அவர் அடித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் வரும் நாட்களில் கோலி பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என தேர்வாளர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கும் என்பதும் உண்மைதான்.
ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்களும் சர்வதேச கிரிக்கெட்டில் இதே போன்ற நிலையைக்கடந்து தற்போது பெரிய இன்னிங்ஸை விளையாடி வருகின்றனர். ஆனால் கேள்வி என்னவென்றால், கோலிக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் வேறு எந்த கிரிக்கெட் வீரருக்காவது கிடைக்குமா?
சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் பற்றிய கேள்வி
இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து கவனித்து வருபவர்கள், கோலிக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தனர். 2015 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான பிறகு சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே தொடர்ந்து மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஆனால் தேர்வாளர்கள் ரிஷப் பந்தை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளனர். அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இரண்டாவது விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் இந்த தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை. இது அவரது சமூக ஊடக கணக்குகளில் ரசிகர்களின் கருத்துகளில் பிரதிபலிக்கிறது.
கேரளாவைச் சேர்ந்த இந்த இளம் கிரிக்கெட் வீரரின் ஃபார்மைப் பார்க்கும்போது அவர் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றே தோன்றியது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கு ஸ்டாண்ட் பை வீரர் இடம்கூடக் கிடைக்கவில்லை. மற்ற இரண்டு வழக்கமான டி20 வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற முடியவில்லை.
2021 டி20 உலகக் கோப்பையின் போது ரிசர்வ் ஓப்பனராக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டார். அவரும் இந்தமுறை அணியில் சேர்க்கப்படவில்லை.
ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய தொடருக்குப் பிறகு அவர் அணியில் தொடர்ந்தார். ஆனால் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் 19 டி20 போட்டிகளில் 30.16 சராசரியிலும், 131.15 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 543 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் பந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை காரணமாக 24 வயது இளம் இஷான் கிஷனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
உலககோப்பை டி20
இப்படிப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டியில் தற்போது ஆசிய கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியுடன் இந்தியா விளையாடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இந்தக் கேள்வியைக் கருத்தில் கொள்வதற்கு முன், அணியின் தற்போதைய நிலையைப் பார்ப்பது முக்கியம். 15 வீரர்களில் குறைந்தது 12 வீரர்கள் உலக டி20 அணியில் சேர்க்கப்படலாம். ஆனால் நிச்சயமாக இரண்டு மூன்று இடங்களுக்கு இறுதி தேர்வு மீதமுள்ளது.
அணியில் இடம்பிடிக்கக்கூடிய 12 வீரர்களில் ரோஹித் ஷர்மா, கே.எல் ராகுல் மற்றும் சூர்ய குமார் யாதவ் அடங்குவர். முக்கிய பேட்ஸ்மேன்களான இந்த மூவரும் ஆசிய கோப்பையில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர். ரோஹித்தும், ராகுலும் துவக்க ஆட்டக்காரர்களின் பொறுப்பை வகிக்கின்றனர். அதேசமயம் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் பொறுப்பு சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலிக்கு உள்ளது. இதுதவிர ரிஷப் பந்த் பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் பந்தின் பேட்டிங்கைப் பார்த்தால் அணியில் அவரது இடம் உறுதியானது என்றே தோன்றுகிறது.ஆனால், தினேஷ் கார்த்திக்கின் எதிர்காலம் பற்றி அணியின் தேர்வாளர்கள் மட்டுமே பதிலளிக்க முடியும். சமீப காலங்களில் கடைசி ஓவர்களில் புயல் போல பேட்டிங் செய்ததால் கார்த்திக் பலனடைந்திருக்கலாம். ஆனால் நீண்ட கால திட்டத்தில் அவர் எங்கு பொருந்துகிறார் என்பது முக்கிய கேள்வி. தற்போது இதற்கு யாரிடமும் பதில் இல்லை. .
ஆல்ரவுண்டர்களாக ஹார்திக் பாண்டியா மற்றும் ரவீந்தர ஜடேஜா முதல் தேர்வாக உளனர். இரண்டு வீரர்களும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அபாரமாக தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹார்திக் பாண்டியா இங்கிலாந்தில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்துவீசி அசத்தினார்.
இந்தியாவின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாத நிலையில், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய் மற்றும் யுஜ்வேந்திர செஹல் ஆகியோர் மீது இந்திய ஸ்கோரைப் பாதுகாப்பதற்கும் எதிரணியை கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பு இருக்கும்.
இருப்பினும் இந்திய அணி மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் முகமது ஷமி இல்லாததன் தாக்கத்தை உணரக்கூடும். கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி டி20 அணியில் இடம்பெறவில்லை. ஆனால் ஐபிஎல் 2022ல் குஜராத் டைட்டன்ஸ் பட்டத்தை வெல்வதில் ஷமி முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஆசியக் கோப்பை அணியில் இல்லையென்றாலும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அவரைப் புறக்கணிப்பது கடினம் என்பதால், டி20 உலக கோப்பை அணியில் முகமது ஷமி இடம்பெறக்கூடும்.
ஆசிய கோப்பை
15வது ஆசிய கோப்பையில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா ஏழு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இதுவரை இந்த போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில், இம்முறை டி20 வடிவில் நடத்தப்படுகிறது. டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் அணிகளுக்கு இது உதவும் என்று நம்பப்படுகிறது.
ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் தவிர, தகுதிச் சுற்று மூலம் வரும்அணி ஏ பிரிவில் இடம் பெறும். பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் குழுநிலையில் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும் மற்றும் இரு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறும். ஆனால் போட்டியின் மிகப்பெரிய பந்தயம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆகஸ்ட் 28 அன்று நடைபெறவுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்