மேரி கோமை தோள்களில் தூக்கிக் கொண்டாடிய பயிற்சியாளர்

காமன்வெல்த் விளையாட்டுகளில் ஒரே நாளில் இவ்வளவு பதக்கங்களை இதுவரை இந்தியா வென்றதில்லை. பத்தாவது நாளில் மட்டும் 8 தங்கப்பதக்கங்கள்.

இதனை தொடங்கி வைத்தவர் மேரி கோம். மூன்று குழந்தைகளின் தாய். தன்னை விட 16 வயது இளையவரான வட அயர்லாந்து குத்துச் சண்டை வீரர் கிரிஸ்டினாவை எதிர்த்து வெற்றி பெற்றார்.

இளம் வயது காரணமாக கிரிஸ்டினாவின் தாக்குதல் அணுகுமுறை வேகமாக இருந்தது. அவரது உயரமும் மேரியை விட அதிகம். ஆனால், தன் அனுபவத்தை பயன்படுத்தி தந்திரமாக விளையாடினார் மேரி.

மேரி வெற்றி என்ற அறிவிப்பு வந்த மறு நிமிடம், அவரிடம் ஓடிச் சென்ற அவரது பயிற்சியாளர் மேரியை தன் தோள்களில் தூக்கிக் கொண்டாடினார்.

பார்வையார்கள் காணும் வகையில் தன் தோள்களில் மேரியை தூக்கினார் அவர். அங்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் அமர்ந்து போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

ராத்தோர் மேரியை தழுவிக் கொள்ள, அரங்கில் இருந்த அனைவரும் மேரி, மேரி என்று கோஷமிட்டனர்.

மேரியை அருகில் பார்த்தபோது, அவர் முகத்தில் கீறல்கள் இருந்ததை காண முடிந்தது. இருப்பினும் அவர் மின்னல் போல புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

அவரது ஆர்வத்தை பார்க்கும்போது, டோக்யோ ஒலிம்பிக்கிலும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. பெரும்பாலும், 32 வயதிற்கு மேல் சர்வதேச குத்துச்சண்டை வீரர்கள் ஓய்வு பெறுவதை பற்றி சிந்திக்க தொடங்குவர். ஆனால், அந்த சிந்தனை துளிகூட மேரியிடம் இல்லை.

கவுரவ் சோலங்கி வென்ற தங்கப்பதக்கம்

மெலிந்த உருவம் கொண்ட கவுரவ் சோலங்கி, 52 கிலோ எடைப்பிரிவில் விளையாட வளையத்துக்குள் சென்றபோது, வட அயர்லாந்து குத்துச் சண்டை வீரருக்கு எதிராக இவருக்கு வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும் என்று அங்கு அமர்ந்திருந்த பெரும்பாலானோர் நினைக்கவில்லை. ஆனால், சில வினாடிகளிலேயே வெற்றி வாய்ப்பை தன் பக்கம் திருப்பிக் கொண்டார் கவுரவ்.

ஹரியானாவை சேர்ந்த 19 வயதான கவுரவ், முதல் இரண்டு சுற்றுகளிலும் கடுமையாக விளையாடினார்.

இரண்டாவது சுற்றில், அவர் மீது ஒரு அடி கூட விழாமல் பார்த்து கொண்ட கவுரவ், மூன்றாவது சுற்றில் சற்று தடுமாறினார். ஆனால் அவர் எடுத்த புள்ளிகள் அவர் வெற்றி பெறுவதற்கு போதுமானதாக இருந்தது.

மூன்றாவது சுற்றில் இரண்டு முறை கீழே விழுந்த அவர், 'க்ளாடியேட்டர்' போல உடனடியாக எழுந்து கொண்டார்.

வெற்றி பெற்ற கவுரவிற்கு, அவரது காதுக்கு கீழ் ரத்தம் வடிவதை பார்க்க முடிந்தது. மூன்றாவது சுற்றில் தமக்கு காயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தங்கப்பதக்கத்தை தன் தாய்க்கு சமர்பிப்பதாக கூறிய கவுரவ், டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய கொடியை ஏந்தும் போதுதான் உண்மையான வெற்றியை தாம் உணருவேன் என்று தெரிவித்தார்.

வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ராவை காணும்போது அவருக்கு 19 வயது மாதிரி இல்லை. தங்கத்தை வென்று, தேசிய கொடியை தன்மீது போற்றிக்கொண்டு செய்தியாளர்களை சந்திக்க அவர் வந்தபோது, இதில் பெரிய அனுபவம் வாய்ந்தவர் போல தெரிந்தார்.

தகுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தில் இருந்தார் நீரஜ். இதனால் நீங்கள் கலக்கம் அடையவில்லையா என்று கேட்டதற்கு, இல்லவே இல்லை என்றார்.

நான் வேண்டும் என்றே தகுதி சுற்றில் அப்படி செய்தேன். என் ஆற்றலை இறுதி சுற்றிற்காக சேமித்து வைத்தேன் என்கிறார் நீரஜ்.

தனிப்பட்ட தடகள போட்டிகளில் இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர் - மில்கா சிங், விகாஸ் கவுரா மற்றும் சீமா புனியா. தற்போது இதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் நீரஜ்.

ஹரியானாவின் காந்த்ரா கிராமத்தை சேர்ந்த இவர், விவசாயியின் மகன் ஆவார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் நீரஜ் தங்கம் வெல்வார் என்பதை எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: