You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் 'ரன்மழை' : இந்தியாவுக்கு 339 இலக்கு
லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய இறுதிப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் மட்டைவீச்சாளர்கள் நன்கு அடித்தாடினர். தொடக்க ஆட்டக்காரர்கள் அஸார் அலி மற்றும் பஃர்கார் ஜமான் ஆகிய இருவரும் அரைச்சதம் அடித்த நிலையில், அஸ்வின் வீசிய 23-ஆவது ஓவரில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் அஸார் அலி மற்றும் பஃர்கார் ஜமான் ஆகியோரின் தவறான கணிப்பால், தன்னை நோக்கி வந்த பந்தை பீஃல்டர் பூம்ரா விக்கெட்கீப்பர் தோனியை நோக்கி வீச, அவர் அஸார் அலியை ரன் அவுட் செய்தார்.
106 பந்துகளில், 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் விளாசி, தனது முதலாவது ஒருநாள் சதத்தை பாகிஸ்தான் தொடக்க வீரர் பஃக்கார் ஜமான் பெற்றார். 114 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியாவின் பந்துவீச்சில் பஃக்கார் ஜமான் ஆட்டமிழந்தார்.
தனது நான்காவது ஒருநாள் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி பஃக்கார் ஜமான் சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அனுபவம் மிருந்த ஸோயீப் மாலிக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், களமிறங்கிய முகமது ஹஃபிஸ் தனது அதிரடி ஆட்டத்தால், 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
மட்டைவீச்சுக்கு சாதகமாக கருதப்படும் ஓவல் மைதானத்தில், பாகிஸ்தான் அணியின் மட்டைவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடி 339 என்ற இமாலய இலக்கை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா
முன்னதாக, இன்றைய போட்டியில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்திய அணி முதலில் பீஃல்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால், இதே வேளையில் அரையிறுதி போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், சென்ற போட்டியில் விளையாடிய ரூமான் ராயிஸ் அணியில் இடம்பெறவில்லை.
லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியை, கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலகெங்கும் தொலைக்காட்சியில் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றதன் மூலம், இதுவரை சாம்பியன்ஸ் கோப்பையில் நான்கு இறுதியாட்டங்களில் விளையாடிய ஒரே அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
அதே வேளையில், சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் முதல் இறுதிப்போட்டி, ஞாயிறுக்கிழமையன்று இந்தியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியாகும்.
தொடர்பான செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்