முழு சந்திர கிரகணம்: இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி, அடுத்தது 2025இல்

கிரகணங்கள் கண்கவர் வானியல் நிகழ்வுகளாக இருக்கலாம். அவற்றைப் காண மக்கள் ஆர்வம் காட்டுவதற்கு ஒரு நல்ல காரணமும் இருக்கவே செய்கிறது.

இன்று - நவம்பர் 8ஆம் தேதி - முழு சந்திர கிரகணம் தோன்றுகிறது. இது முழு சந்திர கிரகணமாகும், இது வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் ஆசியா, ஓசியானியா ஆகிய பகுதிகளில் காணலாம். இதற்குப் பிறகு, அடுத்த முழு சந்திர கிரகணம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டுமே நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது.

உங்கள் நேர மண்டலத்தைப் பொறுத்து, கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள். இது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படுகிறது.

"ரத்த நிலவு" என்பது அறிவியல் சொல் அல்ல. சந்திரன் முழுமையாக மறையும் போது அது சிவப்பு நிறத்தில் காணப்படும்.

அமெரிக்க விண்வெளி அமைப்பானநாசாவின் இணையதள தகவலின்படி, சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாகச் சென்றதைத்தொடர்ந்து முழு சந்திர கிரகணம் தோன்றியது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நேரப்படி இது காலை 5:17 மணி முதல் 6:42 மணிக்கு இடையே நடந்தது, கிரகணத்தின் பகுதி மற்றும் பெனும்பிரல் கட்டங்கள் காலை 8:50 EST (13:50 UTC) வரை தொடர்ந்தது.

இந்தியாவில் எப்போது தெரியும்?

Timeanddate.com இணையதள தகவலின்படி, அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் "ரத்த நிலவின்" முதல் காட்சி தென்பட்டுள்ளது. இது மாலை 4:23 மணிக்கு தொடங்கி 7:26 மணிக்கு முடிவடையும். மொத்தம் 3 மணி நேரம், 3 நிமிடங்களுக்கு இது நீடிக்கும்.

இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் கிரகணம் தென்படும் உத்தேச நேரத்தை தொகுத்து வழங்குகிறோம்:

கொல்கத்தா- முழு சந்திர கிரகணம்: கொல்கத்தாவில் மாலை 04:55 மணிக்கு காணலாம். கிரகணம் மாலை 04:52 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும், இது 2 மணி 34 நிமிடங்கள் நீடிக்கும்.

டெல்லி- பகுதி சந்திர கிரகணம்: சந்திர கிரகணம் டெல்லியில் மாலை 05:31 மணிக்கு அதன் அதிகபட்ச புள்ளியை அடையும். சந்திரனில் 66 சதவீதம் நிழல் இருக்கும். கிரகண நிகழ்வு மாலை 05:28 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும், இது 1 மணி நேரம் 58 நிமிடங்கள் நீடிக்கும்.

மும்பை - பகுதி சந்திர கிரகணம்: மும்பையில் உள்ள மக்கள் சந்திர கிரகணத்தை மாலை 06:04 மணிக்கு 14 சதவீத ஒளிபுகா நிலையில் காண முடியும். நிகழ்வு மாலை 06:01 மணிக்கு தொடங்கி 07:26 மணிக்கு முடிவடையும், இது 1 மணி 25 நிமிடங்கள் நீடிக்கும்.

சண்டீகர்: பகுதி சந்திர கிரகணம் - சண்டிகரில் 1 மணி நேரம் 59 நிமிடங்கள் நீடிக்கும். மாலை 05:30 மணிக்கு அதன் அதிகபட்ச புள்ளியில் இது தெரியும்.

ஹைதராபாத்: பகுதி சந்திர கிரகணம் - ஹைதராபாதில், மக்கள் சந்திர கிரகணத்தை அதிகபட்சமாக மாலை 05:43 மணிக்கு பார்க்கலாம். கால அளவு 1 மணி நேரம் 46 நிமிடங்கள் இருக்கும்.

சென்னை: பகுதி சந்திர கிரகணம் - சென்னையில் மறைந்த சந்திரனை 1 மணி நேரம் 48 நிமிடங்கள் தெரியும். மாலை 05:42 மணிக்கு அதன் அதிகபட்ச புள்ளியை அடையும்.

ஸ்ரீநகர்: பகுதி சந்திர கிரகணம் - ஸ்ரீநகரில் மறைந்த சந்திரன் மாலை 05:31 மணிக்கு 66 சதவீத ஒளிபுகாநிலையுடன் அடிவானத்திற்கு மேலே உயரும்.

பெங்களூரு பகுதி சந்திர கிரகணம்- பெங்களூரில் அதிகபட்சமாக மாலை 05:57 மணிக்கு 23 சதவீத ஒளிபுகா நிலையில் கிரகணம் நிகழும். இது மாலை 05:49 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும், இது 1 மணி 36 நிமிடங்கள் நீடிக்கும்.

கோஹிமா - முழு சந்திர கிரகணம் - கோஹிமாவில் கிரகணம் மாலை 4:29 மணிக்கு அதன் அதிகபட்ச கட்டத்தில் இருக்கும். நிகழ்வு மாலை 04:23 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும். இது 3 மணி 2 நிமிடங்கள் நீடிக்கும்.

அகர்தலா - முழு சந்திர கிரகணம் - மாலை 04:43 மணிக்கு அதிகபட்சமாக கிரகணம் இருக்கும், இது மாலை 04:38 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும். இது 2 மணி 47 நிமிடங்கள் நீடிக்கும்.

குவாஹத்தி: முழு சந்திர கிரகணம் - குவாஹத்தியில் சந்திர கிரகணம் மாலை 4:32 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும். மொத்த கிரகணத்தின் காலம் 2 மணி 53 நிமிடங்கள் மற்றும் அதிகபட்சமாக மாலை 04:36 மணிக்கு இருக்கும்.

நொய்டா: பகுதி சந்திர கிரகணம் - நொய்டாவில் அதிகபட்சமாக மாலை 05:30 மணிக்கு கிரகணம் தெரியும். இது இரவு 07:26 மணிக்கு முடிவடையும், இது 1 மணி 59 நிமிடங்கள் நீடிக்கும்.

கிரகணம் எவ்வாறு நிகழ்கிறது?

சந்திரன் பூமியின் நிழலில் பயணம் செய்து, தனது மேற்பரப்பை ஒளிரச் செய்வதிலிருந்து அனைத்து நேரடி சூரிய ஒளியையும் தடுக்கும் போது கிரகணம் நிகழ்கிறது. சில சூரிய ஒளி இன்னும் சந்திர மேற்பரப்பை மறைமுகமாக, பூமியின் வளிமண்டலத்தின் வழியாக அடைகிறது. அப்போது சந்திரனை சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு ஒளி மறைக்கிறது.

ஆனால் இது பல வகையான கிரகணங்களில் ஒன்று மட்டுமே.

"பொதுவாக, இரண்டு வகையான கிரகணங்கள் உள்ளன: சந்திரன் மற்றும் சூரியனின் கிரகணங்கள்" என்று சிலியின் தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொடர்பு மையத்தின் வானியற்பியல் விஞ்ஞானி ஜுவான் கார்லோஸ் பீமின் தனது சமீபத்திய புத்தகமான "இல்லஸ்ட்ரேட்டட் வானியல்" இல் எழுதியிருக்கிறார்.

ஆனால் அவர் "தொழில்நுட்ப ரீதியாக இரண்டு நட்சத்திரங்களை உள்ளடக்கிய மூன்றாவது வகையும் உள்ளது," என்று குறிப்பிடுகிறார்.

அந்த மூன்று வகை மற்றும் அவற்றின் வெவ்வேறு தன்மையின் விளக்கம் இங்கே:

சந்திர கிரகணங்கள்

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து ஒளியைத் தடுக்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சந்திர கிரகணத்தின் போது, சந்திரனின் மேற்பரப்பில் பூமியின் நிழலை நாம் காண்கிறோம்.

அதாவது, சூரியனின் கிரகணங்களின் பார்வை அதை பார்ப்பவரின் புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்தது. இதுவே சந்திர கிரகணங்கள் என்றால் இதற்கு நேர்மாறானது: இந்த நிகழ்வு நமது கிரகத்தின் எந்த இடத்திலிருந்தும் சந்திரன் அடிவானத்திற்கு மேலே இருக்கும் இடத்தில் இருந்து கவனிக்கப்படுகிறது.

சூரிய கிரகணங்களைப் போல அல்லாமல், கிரகண கட்டங்களின் காணும் தன்மை, பார்வையாளரின் புவியியல் நிலையைப் பொறுத்தது. சந்திர கிரகணங்களில் இவை கவனிக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக இருக்கும்.

சந்திர கிரகணங்கள் மூன்று வகைப்படும்.

முழு சந்திர கிரகணம்

முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரனும் சூரியனும் பூமிக்கு நேர் எதிரெதிர் பக்கங்களில் இருப்பதாக நாசா விளக்குகிறது.

"சந்திரன் பூமியின் நிழலில் இருந்தாலும் - சூரிய ஒளி சிறிதளவே சந்திரனை அடைகிறது" என்று நாசா கூறுகிறது.

இந்த சூரிய ஒளி, பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது. இது பெரும்பாலான நீல ஒளியை வடிகட்டுகிறது - அதனால்தான், இந்த நிகழ்வின் போது, சந்திரன் சிவப்பு நிறமாகத் தெரிகிறது. இதைத்தான் சிலர் "ரத்த நிலவு" என்று அழைக்கிறார்கள்.

நமது கிரகத்தின் விட்டம், சந்திர விட்டத்தை விட நான்கு மடங்கு பெரியதாக இருப்பதால், அதன் நிழலும் மிகவும் அகலமானது. இதனால் சந்திர கிரகணத்தின் மொத்த அளவு 104 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

உங்கள் நேர மண்டலத்தைப் பொறுத்து நவம்பர் 8ஆம் தேதி அதைத் துல்லியமாகப் பார்க்க முடியும்.

பகுதி சந்திர கிரகணம்

பெயருக்கு ஏற்ப, சந்திரனின் ஒரு பகுதி மட்டுமே பூமியின் நிழலில் நுழையும் போது 'பகுதி சந்திர கிரகணம்' ஏற்படுகிறது.

கிரகணத்தின் அளவைப் பொறுத்து, ஒரு அடர் சிவப்பு - ஆனால் சில நேரங்களில் துருப்பிடித்த அல்லது கரி சாம்பல் நிறம் போல - நிழல் சந்திர மேற்பரப்பில் இருண்ட பகுதியில் தோன்றும்.

நிழலால் பாதிக்கப்படாத நிழலிடப்பட்ட பகுதிக்கும் பிரகாசமான சந்திர மேற்பரப்புக்கும் இடையிலான வேறுபாடு தான் இதற்குக் காரணம். நாசாவின் கூற்றுப்படி, முழு சந்திர கிரகணங்கள் அரிதான நிகழ்வுகள் என்றாலும், பகுதியளவு சந்திர கிரகணம் வருடத்திற்கு இரண்டு முறையாவது நிகழும்.

பெனும்பிரல் சந்திர கிரகணம்

பூமியின் பெனும்பிரல் நிழலின் வழியாக சந்திரன் செல்லும்போது இது நிகழ்கிறது, அதாவது மிகவும் மங்கலான நிழல்.

எனவே, இந்த கிரகணங்கள் மிகவும் நுட்பமானவை, அவை மனிதக் கண்ணுக்கு புலப்படுவது, பெனும்பிரல் பகுதிக்குள் நுழையும் சந்திரனின் பகுதியைப் பொறுத்தது: சிறியது, கவனிப்பது மிகவும் கடினம்.

இந்த காரணத்திற்காக, இந்த கிரகணங்கள் பெரும்பாலும் விஞ்ஞானிகளைத் தவிர வேறு யாரையும் நோக்கமாகக் கொண்ட காலெண்டர்களில் குறிப்பிடப்படவில்லை.

சூரிய கிரகணங்கள்

சில நேரங்களில், சந்திரன் பூமியைச் சுற்றி வரும்போது, அது சூரியனுக்கும் நமது கிரகத்திற்கும் இடையில் பயணித்து, நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியைத் தடுத்து சூரிய கிரகணத்தை ஏற்படுத்துகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பூமியின் மேற்பரப்பில் சந்திரன் அதன் நிழலைப் படரச் செய்கிறது.

ஆனால் மூன்று வகையான சூரிய கிரகணங்களும் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன - அது எந்த அளவுக்கு சந்திரன் சூரியனை மறைக்கிறது என்பதைப் பொறுத்து அமைகிறது.

முழு சூரிய கிரகணம்

சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை சூரிய ஒளியை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் நேராக ஒருங்கிணையும் போது முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது.

அப்போது சில விநாடிகள் (அல்லது சில சமயங்களில் நிமிடங்கள் கூட), வானம் மிகவும் இருட்டாகி, இரவு நேரமாகத் தோன்றும்.

நாசாவின் வார்த்தைகளில் இதை விவரிப்பதென்றால், "பூமியில் முழு சூரிய கிரகணங்கள் ஒரு வானவியல் தற்செயல் நிகழ்வால் மட்டுமே சாத்தியமாகும்": சூரியன் சந்திரனை விட 400 மடங்கு அகலமானது, ஆனால் அது 400 மடங்கு தூரத்தில் உள்ளது.

"அந்த வடிவவியலின் அர்த்தம், சரியாக சீரான பாதையில் வரும்போது, சந்திரன் சூரியனின் முழு மேற்பரப்பையும் தடுத்து, முழு சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது"

பூமியின் மேற்பரப்பில் சந்திரனின் நிழலைக் கண்டுபிடிக்கும் கோடு "மொத்த பாதை" என்று அழைக்கப்படுகிறது, மேலும் அந்த சிறிய பகுதியில்தான் இந்த முழு இருளின் காட்சி தென்படுகிறது.

இந்த பட்டையின் இருபுறமும், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு, கிரகணத்தை ஓரளவு காணலாம்.

நீங்கள் மொத்தப் பாதையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு சூரியனின் சிறிய பகுதி சந்திரனால் மூடப்படும்.

நேர அளவை சொல்வதாக இருந்தால், இது "சூரியனில் இருந்து பூமியின் நிலை, பூமியில் இருந்து சந்திரனின் நிலை மற்றும் பூமியின் எந்தப் பகுதி இருளடைகிறது" என்பதைப் பொறுத்து அமையும் என்று பீமின் குறிப்பிடுகிறார்.

"கோட்பாட்டளவில், மிக நீண்ட சூரிய கிரகணம் 7 நிமிடங்கள், 32 விநாடிகள் நீடிக்கும்" என்று சிலி வானியற்பியல் நிபுணர் கூறுகிறார்.

எத்தனை முறை தோன்றும் எனக்கோட்டால் அது நீங்கள் நினைப்பது போல் அவை அரிதானது அல்ல: ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒன்று உள்ளது.

உண்மையில் அரிதானது என்னவென்றால், மொத்த சூரிய கிரகணம் மீண்டும் அதே இடத்தில் இருந்து தெரியும், இது சராசரியாக ஒவ்வொரு 375 வருடங்களுக்கும் ஒருமுறை நடக்கும்.

அந்த வகையில் அடுத்த முழு சூரிய கிரகணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கும்.

வளைய அல்லது மோதிர கிரகணம்

சந்திரன் பூமியிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும்போது, அது "சிறியதாக" தோன்றினால், அது சூரியனின் மேற்பரப்பை முழுமையாக மறைக்காது.

எனவே சூரியனின் வளைய வடிவ சிறு பகுதி சந்திரனைச் சுற்றித் தெரியும், மேலும் இந்த நிகழ்வு வளைய சூரிய கிரகணம் அல்லது மோதிர சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு முழு சூரிய கிரகணத்தின் போது, இது "வளையத்தின் தோற்றம்" ஆக தோன்றுகிறது.

இந்த பாதையின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒரு பகுதி இப்படி தோன்றும்.

அடுத்த ஆண்டு அக்டோபரில், வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் வளைய கிரகணம் தோன்றும்.

நாசாவின் கூற்றுப்படி, இந்த கிரகணங்கள் பொதுவாக மிகவும் நீளமானவை, ஏனெனில் மோதிர வடிவ கிரகணத்தை பத்து நிமிடங்களுக்கு மேல் காணலாம், ஆனால் பொதுவாக அவை ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது.

கலப்பு கிரகணம்

கலப்பு கிரகணம் என்பது ஒரு நிகழ்வு என்கிறார் பீமின்.

"சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்கக்கூடிய தூரத்தில் இருக்கும்அதேவேளை அது முன்னேறும்போது, பூமியிலிருந்து சற்று விலகி சூரியனை மறைப்பதை பகுதியளவு நிறுத்துகிறது. அப்போது இது வளைய கிரகணமாக மாறுகிறது."

"இது ஒரு வளைய கிரகணமாகவும் தொடங்கி பின்னர் முழு கிரகணமாக மாற இன்னும் கொஞ்சம் நெருங்கலாம்" என்கிறார் பீமின்.

Instituto de Astrofísica de Canarias (IAC) தகவலின்படி கலப்பு கிரகணங்கள் மிகவும் அரிதானவை (அனைத்து சூரிய கிரகணங்களில் 4% ஆகும்).கடைசியாக 2013இல் இந்த கிரகணம் பதிவானதாக நாசா தரவு கூறுகிறது. அடுத்த முறை இந்த கலப்பு கிரகணத்தை காண 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதிவரை வரை காத்திருக்க வேண்டும். இது இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியில் தென்படும்.

நட்சத்திர கிரகணங்கள்

எல்லா கிரகணங்களும் நமது சூரியன் மற்றும் சந்திரனை உள்ளடக்குவதில்லை: தொலைதூர நட்சத்திரங்களும் கிரகணமாக தோன்றலாம்.

"50% நட்சத்திரங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திரங்களின் அமைப்புகளில் உள்ளவை" என்று பீமின் தனது "இல்லஸ்ட்ரேட்டட் அஸ்ட்ரோனமி" புத்தகத்தில் விளக்குகிறார். இது ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கிறது.

"நமது விண்மீன் மண்டலத்தில் பல நட்சத்திரங்கள் இருப்பதால், அவற்றில் சில பைனரி நட்சத்திரங்கள் [இரண்டு நட்சத்திரங்கள் அவற்றின் பொதுவான வெகுஜன மையத்தை வட்டமிடும் நட்சத்திர அமைப்பு] பூமியுடன் மிகவும் நன்றாக இணைந்திருக்கும் ஒரு வட்டத்தில் சுற்றுகின்றன.

எனவே ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதன் சுற்றுப்பாதையில், ஒரு நட்சத்திரம் மற்றொன்றுக்கு முன்னால் செல்லும்போது அதை மறைக்கிறது," என்று பீமின் மேலும் கூறுகிறார். "இந்த இரட்டை நட்சத்திரங்கள் கிரகண பைனரி நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன," என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: