You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிமார்போஸ் சிறுகோள் மீது மோதிய நாசாவின் டார்ட் விண்கலம்;10,000 கி.மீ தூரத்திற்கு விண்ணில் சிதறல்கள் - விண்வெளி அறிவியல் அதிசயம்
- எழுதியவர், நாதன் வில்லியம்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
சில நாட்களுக்கு முன் விண்ணில் உள்ள சிறுகோள் ஒன்றின் மீது வேண்டுமென்றே நாசாவின் டார்ட் விண்கலம் மோதவைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இதனால் தற்போது பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு சிதறல்கள் தடம் பதித்ததைக் காட்டும் புதிய படங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பெரிய பாறையின் பின் வால் நட்சத்திரம் போன்று புகை பரவுவதை சிலியில் உள்ள தொலைநோக்கியில் படம்பிடிக்கப்பட்டது.
பூமியை அச்சுறுத்தும் விண்வெளிப் பாறைகளை பாதுகாப்பாக, வேறு வழிக்கு திசைமாற்ற முடியுமா என்பதை சோதிக்க இந்த மோதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை வெற்றி அடைந்ததா என்பதையும் சிறுகோளின் பாதை மாறியமைக்கப்பட்டதா என்பதையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த அபாரமான புகைப்படம் மோதலுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு சிலியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்டது.
இதற்காக, 'சோர்' எனப்படும் சதன் ஆஸ்ட்ரோ பிசிக்கல் ரிசர்ச் தொலைநோக்கியை அவர்கள் பயன்படுத்தினர்.
இதுமூலம் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும். இந்த சிதறல்கள் சிறுகோளில் இருந்து முழுவதுமாக வெளியானபின் விண்வெளியில் மேலும் சில ஆயிரம் கிலோ மீட்டர் வரை இந்தத் தடத்தைப் பார்க்க முடியும்.
"இந்த மோதலுக்கு பிறகு ஏற்படும் விளைவை நாம் தெளிவாகக் கண்காணிக்க இயல்வது மிக அருமையான ஒரு விஷயம்" என கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் ஒருவரான டெட்டி கரேட்டா தெரிவித்தார்.
இந்தக் குப்பை அடுத்து வரக்கூடிய மாதங்களிலும் கண்காணிப்படும் என அமெரிக்க நேவல் ஆராய்ச்சி ஆய்வகத்தை சேர்ந்த மைகல் நைட் தெரிவித்தார்.
தங்கள் சோதனை முறையாகப் பலனளித்ததா என்பதை நாசா தலைமையிலான இந்த ஆய்வில் பங்கேற்ற விஞ்ஞானிகள் உறுதியாக அறிய இன்னும் சில வாரங்கள் ஆகும். ஆனால் குறிப்பிடத்தக்க ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக நாசாவின் கோள்கள் அறிவியல் பிரிவின் இயக்குநரான டாக்டர் லோரி கிளேஸ் தெரிவித்துள்ளார்.
"மனிதகுலத்தின் ஒரு புதிய சகாப்தத்தை நாம் தொடங்குகிறோம். ஆபத்தான மற்றும் அபாயகரமான வகையில் ஏற்பட வாய்ப்புள்ள சிறுகோள் மோதலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனைக் கொண்ட ஒரு சகாப்தத்தினுள் நாம் நுழைகிறோம். இதற்கு முன் இப்படி ஒரு திறன் இருந்ததில்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த மோதலுக்கு பின் டிடிமோஸ் (Didymos) எனப்படும் மற்றொரு சிறுகோளைச் சுற்றி, டிமார்போஸ் சிறுகோள் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதன் மூலம் டார்ட் திட்டத்தின் வெற்றியை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிப்பார்கள்.
பூமியில் உள்ள தொலைநோக்கி இரண்டு பாறைகளில் துல்லியமான அளவுகளை காட்டும். Double Asteroid Redirection Test என்பதன் சுருக்கமே DART ஆகும். இரட்டை சிறுகோள்களை திசைமாற்றும் பரிசோதனை என்பது இதன் பொருள்.
எதிர்காலத்தில் பூமியை நோக்கி சிறுகோள் ஏதேனும் வந்தால் இந்த தொழில்நுட்பம் அப்போது பயன்படுத்தப்படலாம்.
இது "ஓர் எளிமையான யோசனை" என விவரிக்கும் இந்த திட்டத்தின் தலைவர் ஆண்டி ரிவ்கின், நீங்கள் எந்த கோள் குறித்து கவலை கொள்கிறீர்களோ அதன்மீது விண்கலத்தை ஏவி விடவேண்டும் என்கிறார்.
"விண்கலத்தின் எடை மற்றும் வேகத்தை பயன்படுத்தி, நீங்கள் எந்தக் கோளின் மீது மோத விரும்புகிறீர்களோ அதன் சுற்று வட்டப் பாதையை மாற்ற முடியும். எனவே அதன் பூமியை நோக்கிய பயணம் மாறுபடும்," என விளக்குகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்