You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாணவர்கள் தயாரித்த 100 செயற்கைக்கோள்கள்: கலாம் நினைவாக புதிய சாதனை
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்கள் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ராமேஸ்வரத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து மாணவர்களுக்கு செயற்கைக் கோள்களை உருவாக்கும் பயிற்சியை கடந்த 6 மாதங்களாக அளித்து வந்தன.
இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 100 பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் ஈடுபாடுடைய சுமார் 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கு இணைய வழியிலும், நேரடியாகவும் மிகச் சிறிய பெம்டோ செயற்கைக் கோள்களின் (FEMTO SATELLITE) வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கான அறிவுத் திறன்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட 100 பெம்டோ செயற்கைக்கோள்கள், (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமர் பாதம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு ஹீலியம் வாயு நிரப்பிய பலூன் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 30 கிராம் முதல் 50 கிராம் வரை எடை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளன.
செயற்கைக்கோள்களுடன் கூடிய பலூன் ஏவுதல் நிகழ்ச்சியை காணொளி காட்சி மூலம் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரமோஸ் ஏவுகணை திட்ட முன்னாள் தலைவர் சிவதாணுபிள்ளை மற்றும் மாணவர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ஹீலியம் பலூன், இலக்கை அடைந்த பின் அத்துடன் இணைக்கபட்ட செயற்கைக்கோள்கள் பாராசூட் மூலமாக பூமியை வந்தடையும். இந்த செயற்கைக் கோள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்றில் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மை, காற்றின் வேகம், வானிலை, கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விவரங்கள் கணிணிகளில் பதிவு செய்யப்பட்டு சேகரிக்கப்படும் என செயற்கைக் கோள்களை உருவாக்கிய மாணவர்கள் தெரிவித்தனர்.
'சிறிய கரங்களில் பலூன்களை வைத்து விளையாட வேண்டிய குழந்தைகள் பலூன் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை மாணவர்கள் அனுப்பி உள்ளார்கள். அப்துல் கலாமின் கனவை நனவாக்கி உள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி அடைகின்றேன்.' என காணொளி மூலம் கலந்து உரையாற்றிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட பெம்டோ செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து பிரமோஸ் ஏவுகணை திட்ட முன்னாள் தலைவர் சிவதாணுபிள்ளை பிபிசி தமிழிடம் பேசுகையில், தொலை தொடர்பு, தொலை உணர்வு (REMOTE SENSING) போன்றவற்றின் தகவல்களை பெற இன்சாட், ஐஆர்எஸ் போன்ற 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்கள் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது.
உலக நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டு பயன்பாட்டில் இல்லாத பெரிய செயற்கைக் கோள்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் அதிகளவு உள்ளது. இதன் மீது மற்ற செயற்கைக் கோள்கள் மோதும் அபாயம் உள்ளதால் இதனை தவிர்க்க சிறிய, மேக்ரோ, மைக்ரோ அளவு செயற்கைக் கோள்கள் உருவாக்கப்பட்டன.
தற்போது 1000 மாணவர்களை தேர்வு செய்து அவர்களை 10 குழுக்களாக பிரித்து 100 மிக சிறிய பெம்டோ செயற்கைக் கோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களால் உருவாக்கபட்ட இந்த பெம்டோ செயற்கைக் கோள்களால் விவசாயம், தொழில்நுட்பத்துறை, உலக வெப்பமயமாகுதல் குறித்த தகவல்களை பெறமுடியும்.
'தமிழ் வழியில் கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்களை அதிகளவு கொண்டு இந்த பெம்டோ செயற்கைக் கோள்கள் உருவாக்கபட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.'
மாணவர்களால் உருவாக்கபட்ட 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு அதனுடைய வேலைகளை செய்ய துவங்கியுள்ளது. இதனை காணும் போது டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவு இந்த இளம் மாணவர்களால் நிறைவேறியுள்ளதாக சிவதாணுபிள்ளை தெரிவித்தார்.
பெம்டோ செயற்கைக் கோள்களை உருவாக்க மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இளம் விஞ்ஞானி ஆனந்த் மகாலிங்கம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ்ஜோன் இந்தியா, தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து 1000 மாணவர்கள் உதவியுடன் இந்த 100 பெம்டோ செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளன," என்று கூறினார்..
'இந்த செயற்கைக் கோள்கள் 80 சதவீதம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் உருவாக்கபட்டது. காரணம் அரசு பள்ளி மாணவர்களாலும் அறிவியல் துறையில் செயற்கைக் கோள்களை செய்ய முடியும் என்கின்ற தன்னம்பிக்கை வளர வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது.'
விவசாயம், தீவிர கதிர்வீச்சு, காற்றின் வேகம், புவி வெப்பமடைதல், ஓசோன் குறைவு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு தேவையான தகவல் பெறும் வகையில் இந்த செயற்கைக்கோள்கள் மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தயாரித்த இந்த 100 பெம்டோ செயற்கைக்கோள்களை முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமுக்கு அர்பணிப்பதாக கூறினார் ஆனந்த் மகாலிங்கம்.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி ஜெய லட்சுமி தான் உருவாக்கிய மிகச் சிறிய செயற்கைக் கோள் குறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், பெம்டோ செயற்கைக் கோள் உருவாக்குவது குறித்து 6 நாட்கள் இணைய வழி பயிற்சி அளிக்கப்பட்டது.அந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
'அரசு பள்ளி மாணவர்களாலும் மிகச் சிறிய செயற்கைக் கோள்கள் உருவாக்க முடியும் என்கின்ற தன்னம்பிக்கை எனக்கு வந்துள்ளது. செயற்கைக் கோள்கள் கண்டு பிடிக்க எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது தேவையில்லை அறிவு, அறிவியல் ஆர்வம் இருந்தால் மட்டுமே போதுமானது. 100 பெம்டோ செயற்கைக் கோள்களில் நான் உருவாக்கிய செயற்கைக் கோள் மூலமாக காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவை அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு முன் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக இருந்தது, நான் உருவாக்கிய செயற்கைக் கோள் மூலம் அளவிட்டதில் தற்போது காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு மிகவும் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி ரேடியேசன், ஓசோன் போன்ற அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றார் மாணவி ஜெயலட்சுமி.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் அடுத்த திட்டம் என்ன? என்ன நடக்கப் போகிறது அதிமுகவில்?
- உத்தராகண்ட் பனிச்சரிவு: காணாமல் போன 170 பேர் நிலைமை என்ன?
- இலங்கை தமிழர்களின் 'அகிம்சை போராட்டம்' நிறைவடைந்தது
- சசிகலா சென்னை வருகை: அதிமுக பதற்றப்படுகிறதா?
- ''கே.வி.பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாததற்கு அதிமுக - பாஜக கூட்டணிதான் காரணம்'' - மு.க. ஸ்டாலின்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: