You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசர் மற்றும் பிற செய்திகள்
ஆஸ்திரேலியாவில் 110மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசர்களின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
எல்ஃப்ரோசார் எனப்படும் அந்த டைனோசரின் பெயருக்கு லேசான பாதம் கொண்ட பல்லி என்று பொருள்.
இந்த படிமம் மெல்பர்ன் அருங்காட்சியகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமத் தேடல் நிகழ்வில் கலந்துகொண்ட தன்னார்வலர் ஜெசிகா பார்கரால் கண்டறியப்பட்டது.
அந்த படிமத்தை ஆராய்ந்தபோது அதற்கு நீண்ட கழுத்துகளும், குட்டையான கைகளும், லேசான உடல்வாகும் இருந்தது தெரியவந்தது.
மேலும் அந்த விலங்கு இரண்டு மீட்டர் நீளத்தில் இருந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்னர் டான்சானியா, சீனா, அர்ஜென்டினாவில் கிடைத்த படிமங்கள் 6 மீட்டர் நீளம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தவகையான எல்ஃப்ரோசர் டைசோனர்கள் வளர்ந்த பிறகு அதிகளவிலான இறைச்சியை உட்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் இளம் வயது டைனோசர் மண்டை ஓடுகளில் இருந்த பற்கள் வளர்ந்த விலங்குகளின் மண்டை ஓடுகளில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது குறைந்துவிட்டதா?
கொரோனா தொற்று பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா சோதனைகளை குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சிலர் ஊடகங்களில் பேசிவருவதாக தெரிவித்த அமைச்சர் அந்த விமர்சனத்தை மறுத்துள்ளார். ''மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, ஒவ்வொரு தினமும் எத்தனை நபர்கள் தமிழகம் வருகிறார்கள், தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் யார் என கண்டறிந்து சோதனைகள் செய்கிறோம். அதனால் சோதனை செய்வதில் எந்த விதத்திலும் குறைவில்லை. சென்னையில் மட்டும் 85,000 சோதனைகளை செய்துள்ளோம்.சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தாலே கொரோனா சோதனை செய்யப்படுகிறது,'' என்றார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது குறைந்துவிட்டதா? - அமைச்சர் விஜயபாஸ்கார் பதில்
சீனாவுக்கு ஏற்படும் அழுத்தம் இந்தியாவுக்கான தொழில் வாய்ப்பாக மாறுமா?
உலக நாடுகளின் உற்பத்தி மையமாக விளங்கி வந்த சீனாவின் ஆதிக்கத்தை கொரோனா வைரஸ் பாதிப்பு சீர்குலைக்கத் தொடங்கியுள்ளதால், அந்த நாடு பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
இந்த சூழ்நிலையை தனக்கான வாய்ப்பாக கருதும் அண்டை நாடான இந்தியா, சீனாவிலிருந்து வெளியேறும் தொழில் வாய்ப்புகளை கவரும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
உலக நாடுகள் மத்தியில் சீனாவின் நிலை இந்தியாவுக்கு அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக இந்தியப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார். பிரேசிலுக்கு இணையான மக்கள் தொகை கொண்ட வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், சீனாவிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ள நிறுவனங்களை ஈர்க்க ஏற்கனவே ஒரு பொருளாதார பணிக்குழுவை உருவாக்கத் தொடங்கிவிட்டது.
அதே சமயம், சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரம் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியா அணுகியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
"விடுதலைப் புலிகள் இன்றி, தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர்" -
தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்தமையினால், தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக இன்று வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரியவில்லை என கூறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, மாறாக உலகின் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவின் எவ்.பீ.ஐ (FBI) நிறுவனத்தினால் பெயரிடப்பட்ட அமைப்பிற்கு எதிராகவே யுத்தம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சாதிச்சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி வாய்ப்பை இழந்த பழங்குடி மாணவிக்கு புதிய நம்பிக்கை
"எனது கிராமத்தின் முதல் பட்டதாரி நானாக இருப்பேன் என்ற கனவு நிறைவேறுமா எனத் தெரியவில்லை" என்கிறார் சாதிச் சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி வாய்ப்பை இழந்த இந்தப் பழங்குடி மாணவி.
கோவை மாவட்டத்தில் சாதிச்சான்றிதழ் இல்லாததால் மலசர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத தன் ஊரின் நிலையையும், தனது உயர்கல்வி கனவு பற்றியும் பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
மாவட்ட நிர்வாகத்தின் கருத்தை அறிவதற்காக சங்கவி குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கவிக்கு சாதிச்சான்றிதழ் தரப்பட்டுள்ளது.
"அரசுப்பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பில் 500க்கு 447 மதிப்பெண் வாங்கினேன். சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றேன். அப்பாவின் ஆசை தான் எனது கனவும். மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காகவே அறிவியல் பாடப்பிரிவு தேர்வு செய்தேன். +2 தேர்வில் 1200க்கு 874 மதிப்பெண்கள் எடுத்தேன்" என்கிறார் சங்கவி.
மேலும் படிக்க:சாதிச்சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி வாய்ப்பை இழந்த பழங்குடி மாணவிக்கு புதிய நம்பிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: