கொரோனா வைரஸ்: கோவிட்-19 குறித்த மூட நம்பிக்கைகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்?

    • எழுதியவர், டேவிட் ரொப்சன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

எந்தவொரு நோய்த் தொற்று பரவினாலும் அதுபற்றிய தவறான தகவல்களும் பரவுகின்றன என்பது வருத்தமான உண்மை. 1980கள், 90கள், 2000வது ஆண்டுகளில் எய்ட்ஸ் பற்றி அபாயகரமான பொய்களை நாம் பார்த்திருக்கிறோம். எச்.ஐ.வி. வைரஸ் என்பது அரசு மருத்துவப் பரிசோதனை நிலையங்களில் உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி, எச்.ஐ.வி. பரிசோதனைகள் நம்பகத்தன்மை அற்றவை என்பது வரை தகவல்கள் பரவின.

வெள்ளாட்டுப் பாலின் மூலம் அதைக் குணப்படுத்த முடியும் என்று ஆதாரமற்ற தகவலும்கூட பரவியது.

இதுபோன்ற தகவல்கள், மக்களிடம் ஆபத்தான போக்குகள் அதிகரித்து, நெருக்கடியை தீவிரப்படுத்தின.

ஊறு விளைவிக்கும் சிந்தனைகள்

இப்போது புதிதாக போலிச் செய்திகள் நம்மை மூழ்கடிக்கச் செய்கின்றன - இப்போது கொரோனா வைரஸ் பற்றிய போலிச் செய்திகளாக அவை உள்ளன.

முகநூல் தொடங்கி வாட்ஸப் வரையில், தவறான தகவல்கள் அதிகம் பகிரப்படுகின்றன. நோய்த் தொற்று பரவும் தன்மையில் இருந்து, அதனால் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி என்பது வரையிலான தகவல்களாக அவை உள்ளன.

மோசமான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற கருத்துகளே அபாயகரமானவை - தொழிற்சாலையில் பயன்படுத்தும் எரிசாராயம் கோவிட்-19 வராமல் தடுக்கும் என்ற பொய்யான தகவலை நம்பி ஈரானில் ஒரு மாகாணத்தில் அதைக் குடித்த பலர் உயிரிழந்ததாக சமீபத்தில் செய்தி வெளியாகியுள்ளது. வைரஸ் தாக்கி இறக்காமல், இவர்கள் எரிசாராயம் குடித்து இறந்துள்ளனர்.

தீங்கு ஏற்படுத்தாத கருத்துகள் உங்களையும் மற்றவர்களையும் ஈர்த்து, பொய்யான ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருவதாக இருக்கும். அதனால் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் போவீர்கள். அரசின் சுகாதார அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் மீதான நம்பிக்கை உங்களுக்குக் குறையும்.

இதுபோன்ற சிந்தனைகளை மக்கள் பிடித்துக் கொள்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

``புரளி'' மற்றும் ``மனிதர்களால் உருவாக்கப்பட்ட நோய்த் தொற்று'' தகவல்கள்

கோவிட்-19 பிரச்சினை வெறும் புரளி என்று 13 சதவீத அமெரிக்கர்களும், இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட நோய்த் தொற்று என்று 49 சதவீத அமெரிக்கர்களும் நம்பியதாக 2020 மார்ச் மாதம் YouGov மற்றும் எகனாமிஸ்ட் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.

உண்மை எது, கட்டுக்கதை எது என்று அறிவாற்றல் அல்லது கல்வியால் அறிந்து கொள்ள முடியும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். படித்த பலரும் இதுபோன்ற பொய்த் தகவல்களுக்கு இரையாகி இருப்பதைக் காட்டும் பல எளிதான உதாரணங்கள் உள்ளன.

கோவிட்-19 ஒரு சதிச் செயல் என்று கூறும் பிரபல எழுத்தாளர் கெல்லி புரோகனை எடுத்துக் கொள்ளுங்கள்; அவர் எம்.ஐ.டி.யில் பட்டம் பெற்றவர். கோர்னெல் பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்றவர்.

இருந்தாலும், சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து கிடைத்த, அபாயகரமான வைரஸ் குறித்த தெளிவான ஆதாரங்களை அவர் ஏற்க மறுத்தார். கிருமி தத்துவத்தின் அடிப்படைகள் பற்றியும் கேள்விகள் எழுப்பும் நிலைக்கும் அவர் சென்றார். போலி அறிவியல் சிந்தனைகளை அவர் ஏற்றுக்கொண்டார்.

சில உலகத் தலைவர்களும் கூட - ஆதாரமற்ற புரளிகளை பகுத்தறியக் கூடியவர் என்று நீங்கள் நம்பக் கூடியவர்கள் - இந்த நோய்த் தாக்குதல் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். உடலுக்கு நல்லதைவிட அதிக கெடுதலைச் செய்யும், நிரூபிக்கப்படாத சில சிகிச்சைகளையும் அவர்கள் ஊக்குவித்துள்ளனர்.

அதன் காரணமாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மடுரோ, பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சனரோவின் பதிவுகளை ட்விட்டர் மற்றும் முகநூல் தளங்கள் நீக்கும் நிலை ஏற்பட்டது.

நல்லவேளையாக, இந்த மனப்போக்கு குறித்து உளவியல் நிபுணர்கள் ஏற்கெனவே ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டனர்.

பொய்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், இந்த தவறான தகவல் மற்றும் முட்டாள்தனமான போக்குகளில் இருந்து தப்பிக்கவும் புதிய வழிமுறைகளை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அளவுக்கு மிஞ்சிய தகவல்கள்

தகவல்களின் இயல்புகளில் இருந்தே பிரச்சினையின் ஒரு பகுதி தொடங்குகிறது.

நமக்கு ஒவ்வொரு நாளும், நாள் முழுக்க ஏராளமான தகவல்கள் வந்து குவிகின்றன. எனவே ஒரு விஷயம் உண்மையா என்பதை முடிவு செய்ய நமது உள்ளுணர்வை நாம் நம்புகிறோம்.

போலிச் செய்திகளை உருவாக்குபவர்கள், சில எளிய உத்திகள் மூலம், இந்தத் தகவல்களை ``உண்மை போன்றதாக'' ஆக்கிவிட முடிகிறது. அதனால் செய்தியின் மூல ஆதாரத்தின் நம்பகத்தன்மை போன்றவற்றை நாம் யோசிக்காமல் போகிறோம்.

``எண்ணங்கள் தடையின்றி செல்லும்போது, மக்கள் கூடவே தலையாட்டி விடுகிறார்கள்'' என்று ஓர் ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஓர் அறிக்கையின் அருகில் ஒரு படமும் இருந்தால், விஷயத்துக்கு அது தொடர்பற்றதாக இருந்தாலும், அதன் துல்லியத்தன்மை மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கிறது என தெரிய வந்துள்ளது என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எரின் நியூமேன் கூறியுள்ளார்.

ஒரு சிகிச்சை பற்றிய தகவலில், ஒரு வைரஸ் பற்றிய அடிப்படையான படம் இருந்தால், அந்தத் தகவலைப் பற்றிய நிரூபணம் ஏதும் தேவையில்லை என்று கருதப்படுகிறது. பொதுவான ஒரு காட்சியை நாம் யூகிக்க அது உதவுகிறது.

``சரளமானது போன்ற'' கருத்தை உருவாக்கினால், அது உண்மை என நம்பலாம் என்று நாம் நினைக்கிறோம்.

அதேபோன்ற காரணங்களுக்காக, தவறான தகவல்களில் விவரிப்பு மொழி நடை அல்லது வெளிப்படையான தனிப்பட்ட கதைகள் இடம் பெற்றிருக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அமைப்பின் பெயர் - போன்ற பழக்கப்பட்ட தகவல்கள் அல்லது அடையாளங்களும் அதில் இடம் பெற்றிருக்கும். ஒரு பொய்யை நம்ப வைக்கும் அளவுக்கு அது இருக்கும். நம்முடைய முந்தைய அறிவுடன் பொருந்தச் செய்வதாக அது இருக்கும்.

ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பக் கூறுவது - அதே வரிகள் அல்லது வெவ்வேறு தகவல்கள் மூலம் அது இருக்கலாம் - அந்தத் தகவலின் ``உண்மைத்தன்மையை'' அதிகரிக்கச் செய்கிறது.தெரிந்த விஷயம் என்ற உணர்வை அது ஏற்படுத்தி, உண்மைத்தன்மையை யோசிக்காமல் விட்டுவிடுகிறோம்.

எனவே, நமது பதிவுகளில் சிலவற்றை அடிக்கடி நாம் பார்க்கும்போது, அது உண்மை என்று நம்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உண்மையில் நாம் சந்தேகக் குணம் கொண்டவராக இருந்தாலும், இப்படி நம்பிவிடுகிறோம்.

யோசிக்காமல் பகிர்தல்

தவறான தகவல்களை பரப்புவோர் இந்த உத்திகளை நீண்ட காலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இப்போதைய சமூக ஊடகங்கள் நமது பலவீனத்தை அதிகரித்து இரையாக்கிவிடுகின்றன.

ஒரு தகவல் உண்மையாக இருக்குமா என்று யோசிக்காமலேயே பலரும் அதைப் பகிர்கிறார்கள் என்று சமீபத்திய ஆதாரங்கள் காட்டுகின்றன.

தவறான தகவல்கள் பரவுதல் குறித்து ஆராய்ச்சி செய்து வரும், கனடாவின் ரெஜினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கார்டன் பென்னிகுக் என்பவர், கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் பற்றிய உண்மையான மற்றும் பொய்யான தலைப்புகளைக் கொடுத்து கருத்துகள் கேட்டார்.

அதில் உள்ள விஷயங்களின் உண்மைத்தன்மை பற்றி குறிப்பிட்டுக் கேட்டதற்கு, போலியான தகவலை உண்மையான தகவல் என்று 25 சதவீத நேரங்களில் அவர்கள் கூறியுள்ளனர்.

அந்தத் தலைப்புகளை பகிர்வீர்களா என்று கேட்டதற்கு, 35 சதவீதம் பேர் போலியான தகவலை பகிர்வோம் என்று கூறினர். முந்தைய பிரிவைவிட 10 சதவீதம் அதிகம்.

``தாங்கள் பொய் என அறிந்துள்ள விஷயங்களாக இருந்தாலும் அவற்றை மக்கள் பகிர்கிறார்கள் என தெரிகிறது'' என்கிறார் பென்னிகுக்.

ஒரு விஷயம் சரியானதா என கண்டறிவதைவிட, அதற்கு அதிக `லைக்குகள்' கிடைக்குமா, அதிக அளவில் மீண்டும் ட்வீட் செய்யப்படுமா என்பதில் தான் அவர்களுடைய மூளை ஆர்வம் காட்டுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

``சமூக ஊடகங்கள் உண்மைக்கு மதிப்பு அளிப்பதில்லை. அதிக ஈடுபாட்டை ஏற்படுத்துகிறதா என்பதைப் பற்றி மட்டுமே அது யோசிக்க வைக்கிறது'' என்று பென்னிகுக் கூறினார்.

அது சரியானதா என்று தீர்மானிக்கும் பொறுப்பை அடுத்தவர் தலையில் சுமத்திவிடலாம் என்று அவர்கள் அநேகமாக நினைக்கலாம்: பலரும் ஒரு தகவலை பார்வர்டு செய்யும் போது மேலே, ``இது உண்மையா என தெரியாது, ஆனால்......'' என்ற வரிகளை சேர்த்து, தாம் பொறுப்பாளியல்ல என்பது போல குறிப்பிட்டு, பொய்யான தகவல்களைப் பகிர்கிறார்கள்.

அந்தத் தகவல் உண்மையானதாக இருந்தால் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கட்டும். உண்மையாக இல்லாவிட்டால், கெடுதல் இல்லை என்று அவர்கள் நினைக்கலாம். எனவே பகிர்தலும்கூட கேடு ஏற்படுத்தும் என்பதை உணராமல் அவர்கள் பகிர்கிறார்கள்.

வீட்டில் செய்யும் சிகிச்சை முறை பற்றியதாகவோ அல்லது அரசின் மூடிமறைப்பு முயற்சி பற்றியதாகவோ ஒரு தகவல் இருந்தால், தங்களை பின்தொடர்பவர்களின் கவனத்தை பலமாக திசை திருப்பும் வகையில் இருக்காதா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

எனவே வெளிப்படையாகத் தோன்றும் கேள்வி: அது உண்மையா?

மறுக்கச் செய்யும் எதிர்வினைகள்

மற்றவர்களின் எதிர்வினைகளைவிட சிலருடைய எதிர்வினைகள் அவற்றை மறுக்கும் வகையில் இருப்பதாக உளவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

போலி செய்திகளுக்கு சிலர் ஏன் எளிதில் இரையாகிவிடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இந்தத் தகவல் உதவிகரமாக உள்ளது.

பென்னிகுக் போன்ற ஆராய்ச்சியாளர்கள் ``அறிவாற்றல் பிரதிபலிப்புப் பரிசோதனை'' அல்லது சி.ஆர்.டி. என்ற முறையை பயன்படுத்தி, இந்தப் போக்கை மதிப்பீடு செய்கிறார்கள்.

இது எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள பின்வரும் கேள்வியை கவனியுங்கள்:

எமிலியின் தந்தைக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதல் இருவரின் பெயர் ஏப்ரல் மற்றும் மே. மூன்றாவது மகளின் பெயர் என்ன?

ஜூன் என்று நீங்கள் பதில் அளித்தீர்களா? அதுதான் உள்ளுணர்வால் பலரும் சொல்லும் பதிலாக இருக்கும் - ஆனால் எமிலி என்பதே சரியான பதில்.

அந்த முடிவுக்கு வருவதற்கு, நீங்கள் சற்று நிதானித்து ஆரம்பத்தில் தோன்றும் கருத்தின் மீது உங்கள் தாக்கத்தைச் செலுத்த வேண்டும்.

அறிவாற்றல் ``கருமிகள்'' என்பவை என்ன?

இந்தக் காரணத்துக்காக சி.ஆர்.டி. கேள்விகள் என்பவை அடிப்படை அறிவாளித்தனம் பற்றிய சோதனையாக இருக்காது - விரிவான, பகுப்பாய்வு நிலையிலான யோசனைகளின்படி, சாதாரணமான உள்ளுணர்வுக்கு ஆட்படாமல் யோசிக்கும் நிலையை பரிசோதிப்பதற்கான சோதனை முறையாக இது உள்ளது.

இவ்வாறு செய்யாதவர்கள் ``அறிவாற்றல் கருமிகள்'' என்று உளவியல் நிபுணர்களால் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களிடம் அறிவுத் திறன் இருக்கும், ஆனால் அதைச் ``செலவிட'' (பயன்படுத்த) தயக்கம் காட்டுவார்கள். அறிவாற்றல் கருமித்தன நிலைமை நம்மை, சார்பு செயல் பலவற்றுக்கு ஆட்படுத்துகிறது. ஒரு தகவல் மற்றும் தவறான தகவலை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்ற போக்கையும் அது மாற்றுகிறது.

வடக்கு கரோலினாவில் டர்ஹாமில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாத்யூ ஸ்டான்லி, கொரோனா வைரஸ் புரளிகளை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என ஆய்வு செய்தார்.

கோவிட்-19 என்பது வெறும் புரளி என்று 13 சதவீத அமெரிக்கர்கள் கூறிய கருத்துக் கணிப்பு முடிவை நினைவில் இருக்கிறதா?

``இந்த வைரஸ் வேகமாக சுற்றிக் கொண்டிருப்பதற்கு, 13 சதவீதம் என்பதே அதிகம் தான்'' என்று ஸ்டான்லி கூறுகிறார்.

YouGov/எகனாமிஸ்ட் கருத்துக் கணிப்பு முடித்துவிட்ட பங்கேற்பாளர்களிடம் உடனடியாக பரிசோதனை செய்ததில், சி.ஆர்.டி.யில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்கள், குறைகளைக் கொண்ட தகவல்களை ஏற்றுக் கொள்ளும் பலவீனம் அதிகமாக உள்ளவர்கள் என தெரிய வந்தது.

அறிவாற்றல் கருமிகள் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு கைகளைக் கழுவ வேண்டும், சமூக இடைவெளி வேண்டும் என்ற கருத்துகளை எளிதில் ஏற்காதவர்களாக இருந்தனர்.

பகிர்வதைத் தடுத்தல்

பலரும் - அறிவாளிகள் மற்றும் படித்தவர்களும் - தவறான தகவலை அதைப் பார்த்தவுடன் கண்டறிய முடியாத நிலையில் இருப்பதை அறிந்திருப்பதால், தவறான தகவல் பரவுதலைத் தடுப்பது அவசியமாகிறது.

உண்மைத்தன்மை பற்றிய கேள்வி உள்ள நிலையில் - ``எண்ணங்கள் இலகுவாகப் பயணிக்கையில் நாமும் தலையாட்டி ஆமோதிக்கிறோம்'' என்ற சிந்தனை நிலையில் - பொய்யான தகவலை அம்பலப்படுத்த முயற்சிக்கும் அமைப்புகள் அதீத ஆர்வம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

மாறாக, உண்மைகளை, முடிந்தவரை எளிதான முறையில் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். காட்சியாகப் பார்த்து புரிந்து கொள்ள வசதியாக காட்சிப் படங்கள், வரைபடங்கள் போன்றவற்றுடன் அவற்றைத் தயாரிக்கலாம்.

``அறிவைப் பிரதிபலிக்கும் வகையில், யோசிக்கத் தயாராக இல்லாதவர்களை இலக்காகக் கொண்டு நாம் தகவல் அளிப்பு முறை மற்றும் உத்திகளை பயன்படுத்த வேண்டியுள்ளது'' என்று ஸ்டான்லி கூறுகிறார்.

வலுவான வாதத்தை முன்வைத்து, அதை ஏற்பார்கள் என நம்புவது நல்லதல்ல.

திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்த்தல்

இந்தப் பிரச்சாரங்கள், அந்த மூடக் கருத்துகளையே மீண்டும் கூறுவதைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும்.

ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பக் கூறும்போது, அது பழக்கப்பட்ட விஷயம் போன்ற உணர்வை ஏற்படுத்தி, அது உண்மை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும்.

எல்லா நேரங்களிலும் இந்த சூழ்நிலை சரியாக இருக்காது தான். ஆனால், உண்மையான விஷயங்களை பிரதானப் படுத்தும் வகையில், மூடக் கருத்துகளைவிட அதிகம் மனதில் பதியும் வகையில் இந்தப் பிரச்சாரங்கள் இருக்க வேண்டும். அதனால் மக்கள் மனதில் இவை எளிதில் இடம் பிடித்துவிடும்.

அதனால் தான் இந்தக் கட்டுரையில்கூட, பொய்யான தகவல்கள் எவை என்ற விவரிப்புகளை நான் அதிகம் சேர்க்கவில்லை.

நமக்கான சரிபார்ப்புப் பட்டியல்

நமது ஆன்லைன் போக்கு பற்றி வரும்போது, ஒரு விஷயத்தின் உணர்வுப்பூர்வ அம்சத்தில் ஈடுபாடு கொள்ளாதிருக்க நாம் முயற்சிக்கலாம். அதை பார்வர்டு செய்வதற்கு முன்பு, அதன் உண்மைத்தன்மை பற்றி கொஞ்சம் யோசிக்கலாம். காதில் கேட்டதைக் கொண்டு எழுதியதா அல்லது வலுவான அறிவியல் ஆதாரம் உள்ளதா என பார்க்க வேண்டும். அதை முதலில் தயாரித்தது யார் என உங்களால் கண்டறிய முடியுமா? இப்போதைய தகவலுடன் அது எந்த அளவுக்குப் பொருந்திப் போகிறது? அதை எழுதியவர் தனது தரப்பை நியாயப்படுத்த தவறான தகவல்களை அடிப்படையாக எடுத்துக் கொண்டாரா என யோசிக்க வேண்டும்.

ஒரு பதிவு நிறைய லைக்குகளை பெற்றுத் தருமா அல்லது இது பிறருக்கு உதவிகரமாக ``இருக்க'' முடியுமா என்பதைப் பற்றி யோசிப்பதற்கு முன்பு, மேலே உள்ள கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

நடைமுறையில் இதுபோன்ற சிந்தனை இருந்தால் நாம் சிறப்பாக இருக்க முடியும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

சமூக ஊடக பயனாளர்கள் நேரடியான தலையீடுகள் செய்வது என்பதைவிட விரைவாக அவர்களை செயல்பட வைப்பதாக ஊடக தளங்களின் போக்கு உள்ளது என்று கார்டன் பென்னிகுக் கூறுகிறார்.

ஒரு விஷயத்தை ஆழமாக நம்பும் பங்கேற்பாளர்களை, மற்ற விஷயங்களை பற்றி நன்கு யோசிக்குமாறு கேட்டால், பகிர்ந்ததைக் காட்டிலும் இரு மடங்கு தயக்கம் காட்டுவது தெரிய வந்தது என்று அவருடைய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. நடைமுறையில், பகிர்தலுக்கு முன்பு இரு முறை யோசியுங்கள் என்று எப்போதாவது சமூக ஊடகத்தில் தானே வரும் தகவல்கள் வருவது போல இருந்தால், கவனமாக ஆய்வு செய்வது நம்பகமான அணுகுமுறையை உருவாக்க உதவியாக இருக்கும் என்கிறார் அவர்.

வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது என்ற நமது முயற்சியைப் போல, அபாயகரமான, அநேகமாக உயிரைப் பறிக்கும் அளவிலான தவறான தகவல்களுக்கு எதிராகவும் பலமுனை போராட்டங்களில் நாம் ஈடுபட வேண்டியுள்ளது.

நெருக்கடி தீவிரமாகும் நிலையில், இது பரவாமல் தடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.

டேவிட் ராப்சன் The Intelligence Trap என்ற புத்தகத்தின் ஆசிரியர் அறிவாளிகள் ஏன் முட்டாள்தனமாக செயல்படுகிறார்கள் என்பது பற்றியும், புத்திசாலித்தனமான முடிவுகள் எடுப்பதற்கான வழிகள் பற்றியும் அந்தப் புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: