You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபேஸ்புக் மீதான புகார்களால் பயனர்கள் எண்ணிக்கை குறைந்ததா, கூடியதா?
'வளர்ச்சி முகத்தில் ஃபேஸ்புக்'
தரவுகள் கசியும் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல விமர்சனங்கள் ஃபேஸ்புக் மீது இருந்தாலும், அந்த சமூக ஊடகத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை வளர்ச்சி முகத்தில் இருக்கிறது. மாதத்திற்கு ஒரு முறையாவது ஃபேஸ்புக் கணக்கிற்குள் லாக் இன் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை 2.32 பில்லியன். அதாவது கடந்தாண்டு வளர்ச்சி 9 சதவீதம். ஃபேஸ்புக் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் அதன் வருவாய் மீது எந்த எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தரவுகள் அதன் வருவாய் 30 சதவீதம் உயர்ந்திருப்பதையே காட்டுகிறது.
'தலைமுறை காணாத கடுங்குளிர்'
துருவ சுழல் என்று அறியப்படும் வரலாற்றில் காணாத கடுங்குளிரை எதிர்கொள்ள இருப்பதால், அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளன.
ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் அமெரிக்கா முழுவதும் குறைந்தது 6 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுங்குளிர் நிலவி வருவதால், அந்த சூழலை எதிகொள்ளும் வகையில், அமெரிக்காவில் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க: அமெரிக்காவில் ‘தலைமுறை காணாத கடுங்குளிர்’: மாநிலங்களில் அவசரநிலை
முடிவுக்கு வந்தது ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டம்
தமிழ்நாட்டில் கடந்த 9 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள் தங்கள் போராட்டங்களை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளன. முதல்வரின் கோரிக்கை, தேர்வு ஆகியவற்றை மனதில் வைத்து போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
புதிய ஓய்வூதிய முறையைக் கைவிட வேண்டும், 21 மாத சம்பள உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்களை சரி செய்தல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ ஜனவரி 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது.
ஆனால், துவக்கத்திலிருந்தே இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என தமிழக அரசு கூறிவந்தது. முதலமைச்சர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு ஏற்கவில்லை.
'பில்லி சூனியம்': ஒடிசாவில் தாயும், 4 குழந்தைகளும் கொலை
சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் இன்னும் அதிகமானவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது.
மான்கிரி முண்டா என்ற பெண் மற்றும் அவரது நான்கு குழந்தைகளின் உடல்கள், அவர்களின் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் ஜனவரி 26ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
சூனியக்காரர்கள் என்று கூறி பெண்களை இலக்கு வைத்து தாக்குவது சில மாநிலங்களில் நடந்து வருகிறது.
விரிவாக படிக்க: 'பில்லி சூனியம்': ஒடிசாவில் தாயும், 4 குழந்தைகளும் கொலை
'எப்படி ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும்'
துருக்கியில், ஒழுங்கு நடத்தைகள் குறித்த படிப்பு ஒன்றில் பெண்கள் ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
"ஒரு பெண்ணாக எப்படி இருக்க வேண்டும்" என்ற பாடம், இஸ்தான்புல்லின் பழமைவாத பக்சிலர் நகராட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது. அதில், பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு ஆடை அணிய வேண்டும், நடக்க வேண்டும், பேச வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதில் கூறப்பட்ட சில பரிந்துரைகள்: பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சரியாக அமர வேண்டும், சாப்பிடும் போது குறைவாக பேச வேண்டும், காலையில் அதிக மேக்-அப் போடக்கூடாது, சொற்களை பார்த்து பயன்படுத்த வேண்டும், "ப்ரோ" போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.
பல ஆலோசனைகள் பொதுவானதாக பார்க்கப்பட்டாலும், எப்படி ஐஸ்-கிரீம் சாப்பிட வேண்டும் என்று அவர்கள் கூறியது, சமூக ஊடகவாசிகளின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :