|
அகதிகளை மலேசியா அனுப்ப நீதிமன்றம் தடை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகளை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கும் அரசாங்க நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. அகதிகளுக்கு ஆதரவான குழுக்களின் சார்பில் இந்த அகதிகளை பரிமாற்றம் செய்வதற்கான திட்டத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம், அது குறித்த விசாரணையை இந்த மாத பிற்பகுதியில் நடத்த தீர்மானித்துள்ளது. விசாரணைகள் முடியும் வரை அகதிகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு அது தடை விதித்துள்ளது. அடுத்த நான்கு வருடங்களில் 800 அகதிகளை மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் திட்டத்துக்கு இந்த தடை ஒரு இடையூறாக வந்திருக்கிறது. அதேவேளை மலேசியாவில் அகதிகளுக்க்கான கோரிக்கை மனுக்கள் விசாரிக்கப்பட்டு ஏற்கப்பட்ட 4000 அகதிகளை இந்தத் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளும். மலேசிய நிலைமை குறித்து விமர்சனம் ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத மலேசியாவில், அகதிகள் பெருமளவில் மோசமாக நடத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்த வழக்கில் விசாரிப்பதற்கு பல முக்கியமான விடயங்கள் இருப்பதாகக் கூறியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி கென்னத் ஹைன், அதுவரை அகதிகள் மலேசியாவுக்கு அனுப்பப்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார். இந்த உத்தரவை ஆஸ்திரேலியாவின் அகதிகளுக்கான செயலணிக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அது குறித்து பிபிசி சந்தேசியவிடம் பேசிய அந்த அமைப்பின் இணைப்பாளரான இயான் ரிண்டொவுள் அவர்கள், நீதிமன்ற முடிவு குறித்து தாம் மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு கடல் மூலமாக வரும் அகதிகள் மாத்திரமே இந்த மலேசிய உடன்படிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆனால், கடுமையான கடற்பயணத்தை மேற்கொண்டு ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||