|
கோவையில் செம்மொழி மாநாடு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு புதன்கிழமை கோவை என அழைக்கப்படும் கோயமுத்தூரில் துவங்கும் நிலையில் நகரமே விழாக் கோலம் பூண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வண்ணமயமான விளக்குகள், வரவேற்புத் தோரணங்கள். மாநாட்டை ஒட்டி, நகரமே புத்தாடை உடுத்தியது போல பொலிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் புதனன்று காலை துவக்கி வைக்கிறார். அதற்காக, சற்று நேரத்துக்கு முன்னதாக அவர் கோவை நகருக்கு வந்து சேர்ந்திருக்கிறார். தமிழக முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார்கள். இந்த மாநாட்டை ஒட்டி, முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் திங்களன்றே கோவை நகருக்கு வந்துவிட்டார். மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், மாநாட்டு அரங்கை நேற்றிரவு சென்று இரண்டு மணி நேரம் பார்வையிட்டார்.
இந்த மாநாட்டில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கலந்துகொள்கிறார்கள். இலங்கையிலிருந்து சிவத்தம்பி உள்ளிட்ட மூத்த அறிஞர்கள் பங்கேற்கிறார்கள். மாநாட்டை ஒட்டி, முதல்வர் கருணாநிதி பெயரில் உருவாக்கப்பட்டுள்ள, கருணாநிதி செம்மொழி விருது, பின்லாந்து நாட்டு அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்கப்பட உள்ளது. மாநாட்டின்போது, 1020 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. 23 ஆய்வரங்கங்கள் நடைபெற உள்ளன. ஆய்வரங்கங்கள் நடைபெறும் அரங்குகளுக்கு தமிழ் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. ஆய்வரங்கத்தை முதல்வர் கருணாநிதி வியாழனன்று துவக்கி வைக்கிறார். உலக நாடுகளில் தமிழும், தமிழரும், - உலகமயமாதல் சூழலில் தமிழ், - சிந்துவெளி எழுத்துச் சிக்கல் - தமிழ் செம்மொழியின் தனித்தன்மை என்பது உள்பட பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டின்போது, தமிழ் இணையதள மாநாடும் நடைபெற உள்ளது. அதில், தமிழ் மொழியை இணையப் பயன்பாட்டில் மேலும் வளப்படுத்துவது எப்படி என்பது உள்பட பல விவாதங்கள் நடைபெற உள்ளன. மாநாட்டை ஒட்டி, 35 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், தமிழர் வரலாறு, பாரம்பரியம், வாழ்க்கை முறை, சிந்துவெளி நாகரிகம் உள்பட 700 க்கும் மேற்பட்ட பொருள்களில் கண்காட்சி இடம்பெற உள்ளது. அதுதவிர, ஏற்கனவே, கைவினைப் பொருட்கள் கண்காட்சியும், புத்தகக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. துவக்க நாளான நாளை மாலை 4 மணிக்கு, எழிலார் பவனி அல்லது இனியவை 40 என்று அழைக்கப்படும் அலங்கார வாகன அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. தமிழர்களின் இசை, இலக்கியம், பண்பாடு உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் அந்த அணிவகுப்பு இடம்பெறும். இரண்டு வாகனங்களில் லேசர் விளக்குக் காட்சிகளும் இடம்பெற உள்ளன. அதில் பங்கேற்க 2000 கலைஞர்கள் கோவையில் கூடியிருக்கிறார்கள். வ.உ.சி மைதானத்தில் துவங்கி மாநாடு நடைபெறும் கொடிசியா மைதானம் வரை 11 கி.மீ. தூரத்துக்கு நடைபெறும் இந்த ஊர்வலத்தை குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் பர்னாலா முதலமைச்சர் உள்பட பல்வேறு தலைவர்கள் பார்வையிட உள்ளனர். செம்மொழி மாநாட்டுக்கு முன்னோட்டமாக, கடந்த மூன்று தினங்களாக கோவை நகரில் 11 இடங்களில் செம்மொழிக் கலைவிழா நடைபெற்று வருகிறது. மாநாட்டு வளாகத்தைப் பார்வையிட பொதுமக்கள் ஏராளமான அளவில் கடந்த மூன்று தினங்களாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டை ஒட்டி, கோவை நகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மத்திய சிறை அமைந்துள்ள இடத்திலிருந்து அது அகற்றப்பட்டு, 165 ஏக்கரில் உலகத் தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களிலும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||