நாடாளுமன்றத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, சாமானியர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் சிறப்பு அம்சங்களை ஒரு காணொளி மூலம் வெளியிட்டிருக்கிறார் நரேந்திர மோதி. அதில் அவர் பேசியது:
100 ஆண்டுகால பயங்கரமான பேரிடருக்கு மத்தியில் வளர்ச்சிக்கான புதிய நம்பிக்கையை இந்த பட்ஜெட் கொண்டு வந்துள்ளது.
இந்த பட்ஜெட், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், சாமானியர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
இந்த பட்ஜெட் அதிக உள்கட்டமைப்பு, அதிக முதலீடு, அதிக வளர்ச்சி மற்றும் அதிக வேலை வாய்ப்புகளின் புதிய சாத்தியங்கள் நிறைந்து காணப்படுகிறது.
இது பசுமை வேலை வாய்ப்புத் துறையில் வாய்ப்புகளை திறந்துள்ளது. கடந்த சில மணி நேரங்களாக இந்த பட்ஜெட்டுக்கு அனைத்து துறைகளிலும் வரவேற்பு கிடைத்துள்ளதையும், சாமானிய மக்களிடம் இருந்து கிடைத்துள்ள நேர்மறையான பதிலையும் பார்க்கிறேன்.
இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சம் ஏழைகளின் நலனாகும். ஒவ்வொரு ஏழைக்கும் ஒரு 'பக்கா' வீடு, குழாயில் குடிநீர், கழிப்பறை, எரிவாயு வசதி, இவை அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனுடன், நவீன இணைய இணைப்புக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக, இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு போன்ற பகுதிகளில் பர்வத்மாலா திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டம் மலைகளில் நவீன போக்குவரத்து அமைப்பை உருவாக்கும். இதன் மூலம் நமது எல்லையில் உள்ள கிராமங்கள் மேலும் உயிர்ப்புடன் இருக்கும்.
இந்திய மக்களின் நம்பிக்கையுடன், கங்கை அன்னையை சுத்தம் செய்வதோடு விவசாயிகளின் நலனுக்காகவும் ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட், உத்தரபிரதேசம், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஓடும் கங்கையை ஒட்டிய, இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
இந்த பட்ஜெட்டில், கடன் உத்தரவாதத்தில் சாதனை நிகழ்த்தும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சிறு, குறு, நடுத்தர துறையானது, உள்நாட்டுத் தொழில்துறைக்கு பாதுகாப்பு மூலதன பட்ஜெட்டில் 68% ஒதுக்குவதன் மூலம் பெரும் பலனைப் பெறும்.
மக்கள் சார்பு மற்றும் முற்போக்கான இந்த பட்ஜெட்டுக்காக நிதியமைச்சர் நிர்மலா மற்றும் அவரது அனைத்து குழுவினரையும் வாழ்த்துகிறேன். நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட் மற்றும் சுயசார்பு இந்தியா குறித்து பேச பாஜக என்னை அழைத்துள்ளது. நாளை 11 மணிக்கு பட்ஜெட் குறித்து விரிவாக பேசுகிறேன் என்று நரேந்திர மோதி கூறியுள்ளார்.