தெள தே புயல்: 89 பேரை தேடும் பணி தீவிரம், பாதிப்பு நிலவரத்தை வான் வழியாக ஆய்வு செய்யும் பிரதமர் மோதி

குஜராத்தில் கரையை கடந்த தெள தே புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை வான் வழியாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆய்வு செய்து வருகிறார். டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோதி, குஜராத்தின் பாவ்நகரில் தரையிறங்கிய பிறகு, உனா, டியு, ஜாஃப்ராபாத், மஹுவா ஆகிய பகுதிகளில் வான் வழியாக ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையே, புயல் சீற்றத்தின்போது கடலில் அடித்துச் செல்லப்பட்ட கப்பலில் இருந்த 89 பேரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இத்துடன் இன்றைய நேரலை பக்கம் நிறைவு பெறுகிறது. bbctamil.com என்ற எங்களது இணையதளத்தில் நாளை காலை மீண்டும் புதிய நேரலை பக்கத்தில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

  2. கொரோனா சிகிச்சை: புதுச்சேரியில் புதிய சர்ச்சை

    புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லை என்றும் அங்கு சடலத்திற்கு மத்தியில் சிகிச்சை நடப்பதாகவும் கூறி வெளியான வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. அங்கு களத்தில் என்ன நடக்கிறது?

  3. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் அனுப்பி வைப்பு

    ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் அனுப்பி வைப்பு

    ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 6.34 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 13-ம் தேதி முதலாவதாக 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் முயற்சியில் ஆலையின் தொழில்நுட்ப குழுவினர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுநர்கள் குழு ஆலையில் பழுதை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து தற்போது, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜன் குளிர்விக்கப்பட்டு மருத்துவ பயன்பாட்டுக்காக ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இன்று மாலை முதல் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் அனுப்பிவைக்கப்பட்டன.

  4. பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள ஏ.ஜி. பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு அளித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்.

  5. தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி குறித்த சர்ச்சையின் பின்னணி

    பள்ளிக்கல்வி இயக்குநருக்கான அதிகாரத்தை ஆணையரிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ள சம்பவம், பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 150 ஆண்டுகளாக இருந்து வந்த பழமையான பதவியை தமிழக அரசு மாற்ற முற்படுவது ஏன்? என்ன நடக்கிறது பள்ளிக்கல்வித் துறையில்?

  6. கருப்புப் பூஞ்சையை தொற்றுநோயாக அறிவித்தது ராஜஸ்தான்

    கருப்புப் பூஞ்சை

    பட மூலாதாரம், Getty Images

    ராஜஸ்தான் மாநிலத்தில் கருப்புப் பூஞ்சையால் (மியூகோர்மைகோசிஸ்) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதை தொற்றுநோயாக அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.ராஜஸ்தான் தொற்றுநோய் சட்டம், 2020 படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையொத்த அறிவிப்பை ஹரியாணா அரசும் வெளியிட்டுள்ளது.இதுவரை இந்தியாவின் கர்நாடகா, உத்தராகண்ட், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், ஹரியாணா மற்றும் பீகாரில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கருப்புப் பூஞ்சை குறித்து மேலும் தெரிந்துகொள்ள: இந்தியாவில் கோவிட் நோயாளிகளைத் தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’

  7. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி எப்போது?

    கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவது தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி, முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு கண்டறியப்பட்டவர்கள், அந்த முடிவு வெளியான நாளில் இருந்து 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. 'கோவிட் வார் ரூம்' - அவசர உதவிக்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி இயங்குகிறது இந்த கட்டுப்பாட்டு அறை?

    CORONA

    தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், படுக்கைகளுக்கான தேவையையும் ஆக்சிஜன் தேவையையும் ஒருங்கிணைக்க கோவிட் கட்டளை அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 'வார் ரூம்' (War Room) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மையம் எப்படிச் செயல்படுகிறது?

    இது குறித்து விரிவாகப் படிக்க: கோவிட் கட்டளை அறை எப்படிச் செயல்படுகிறது?

  9. தமிழகத்தில் வாட்சாப் மூலம் 12ஆம் வகுப்பு அலகுத் தேர்வு

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    வாட்சாப் மூலம் குழுக்கள் அமைத்து மாணவர்களுக்கு வினாத்தாள்களை அனுப்பி விடைகளைப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  10. தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி

    CORONA

    பட மூலாதாரம், TWITTER

    தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 20) தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் என அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

  11. தமிழக சிறைகளில் கொரோனா தாக்கத்தின் நிலவரம் என்ன?

    தமிழக சிறைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சிறைகளில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை எனவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது தமிழக சிறைகளில்?

  12. புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்

    புதுச்சேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  13. தெள தே புயல்: 184 ஓஎன்ஜிசி ஊழியர்களுடன் கரைக்கு திரும்பிய கடற்படை கப்பல்கள், புயல் தாக்கத்தை வான் வழியாக ஆய்வு செய்யும் பிரதமர்

    தெள தே புயல் இந்திய கடற்படை

    பட மூலாதாரம், PMO

    India navy

    பட மூலாதாரம், PMO

    தெள தே புயலின்போது மூழ்கிய பி305 கப்பலில் இருந்த 89 ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

    அந்த கப்பலில் பயணம் செய்த 273 பேரில் 184 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில் புயல் வீசியபோது அந்த கப்பல் கடலில் அடித்துச் செல்லப்பட்டது.

    அது பின்னர் மும்பை அருகே மூழ்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடலில் எண்ணெய் எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த வகை பார்ஜ் கப்பல்கள் பயன்படுத்தப்படும். புயல் காரணமாக அதன் நங்கூரம் வலுவிழந்து நீங்கியதால் இந்த சம்பவம் நடந்ததாக கருதப்படுகிறது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர், பி305 கப்பலில் இருந்தவர்களில் 184 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை ஐஎன்எஸ் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய கடற்படை கப்பல்கள் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளன என்று கூறினார்.

    மீட்புப் பணிகளில் ஐஎன்எஸ் தேக், ஐஎன்எஸ் பெட்வா, ஐஎன்எஸ் பீஸ், பி8ஐ ரக சிறிய ரக விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், குஜராத் புயல் தாக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதி வான் வழியாக பார்வையிட்டு வருகிறார். குஜராத் மற்றும் டியுவிலும் அவர் ஆய்வு செய்து வருகிறார்.

    இதேவேளை, எஸ்எஸ்-3 பார்ஜ் என்ற கப்பலிலும் சாகர் பூஷண் எண்ணெய் வலய பகுதியிலும் பணியில் இருந்த சுமார் 297 ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக கடற்படைக்கு தகவல் வந்துள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பணியில் ஐஎன்எஸ் தல்வார் தயாராக உள்ளது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

    கடற்படை இந்திய பிரதமர் மோதி

    பட மூலாதாரம், PMO

    INDIA navy

    பட மூலாதாரம், PMO

  14. இலங்கையில் 1000-ஐ கடந்த கொரோனா மரணங்கள்

    இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்துடன் 1000-ஐ தாண்டியது.

    நேற்று இறுதியான 34 கோவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்திருந்தது.

    இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் 1015 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 1,47,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,21,145 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், 26,575 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  15. '10 நிறுவனங்களுக்கு தடுப்பூசி உரிமம் வழங்க வேண்டும்'

    கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான தேவை உற்பத்தியை விட அதிகமாக இருந்தால் ஒரு நிறுவனத்திற்கு பதிலாக தடுப்பூசி தயாரிக்கும் மேலும் பத்து நிறுவனங்களுக்கு உரிமமும் காப்புரிமைத் தொகையும் வழங்கப்பட வேண்டுமென்று நரேந்திர மோதி அமைச்சரவையில் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் காணொளி வாயிலாக நடந்த கூட்டம் ஒன்றின்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

    முன்னாள் ஒன்றிய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் "இதைத்தான் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆலோசனையாகக் கூறினார். ஆனால் அவரது 'பாஸ்' இதைக் கேட்கிறாரா," என்று நிதின் கட்கரியைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  16. கமல் கட்சியில் தொடரும் ராஜிநாமாக்கள்: முருகானந்தம் உள்பட பலர் விலகல்

    india

    பட மூலாதாரம், MURUGANANDHAM

    நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அதன் பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் விலகியிருக்கிறார்கள்.

    சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணி போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இதன் பிற்பாடு நடந்த கூட்டத்தில் மகேந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு உள்பட பலரும் ராஜிநாமா செய்தனர்.

    இதில் பதவி விலகிய மகேந்திரன் கமல்ராஜன் ஜனநாயக முறையில் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    இதைத்தொடர்ந்து மகேந்திரனை துரோகி என்று கமல் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜிநாமா செய்து விட்டதாகவும் கட்சியை சீரமைக்கும் அதிகாரம் கமலிடம் கட்சி வழங்கியுள்ளதாக அதன் துணைத் தலைவர் பொன்ராஜ் சமீபத்தில் கூறினார்.

    இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாகக் கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கமல்ஹாசன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் ஜனநாயக முறையில் கட்சி செயல்படாததால் பதவி விலகுவதாகவும் முருகானந்தம் கூறியிருக்கிறார்.

    முருகானந்தம் மட்டுமின்றி, கட்சியின் மாநில செயலாளர் வீரசக்தி, மாநில துணை செயலாளர் அய்யனார், பி.ஏ. விஸ்வநாத், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் உள்பட 15 பேரும் தங்களுடைய அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.

    இவர்கள் அனைவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மண்டலத்தை சேர்ந்தவர்கள். தங்களுடன் சேர்ந்து திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 414 வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்ட கிளை செயலாளர்களில் சுமார் 200 பேர், 2000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,200 பேரும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக முருகானந்தம் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  17. அரவிந்த் கேஜ்ரிவால் பதிவுக்கு சிங்கப்பூர் ஆட்சேபம்

    "சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் திரிபு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் இது மூன்றாம் அலையாக அது வரக்கூடும்."

    இதன் காரணமாக சிங்கப்பூர் உடனான விமான போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

    ஆனால் இந்தியத் தூதரை இன்று அழைத்த சிங்கப்பூர் அரசு, கொரோனா திரிபை சிங்கப்பூர் உடன் தொடர்பு படுத்துவதற்கு தமது கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்தது.

    இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லி முதலமைச்சர் இந்தியாவுக்காக பேசுபவர் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். பொறுப்பற்ற கருத்துகள் நீண்ட நாட்களாக இருக்கும் உறவுகளை பாதிக்கும் என்றும் அவர் அரவிந்த் கேஜ்ரிவாலைத் தாக்கியுள்ளார். சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் வலுவான கூட்டாளிகளாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    ஆலையில் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள டேங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது.

    அரசின் வழிகாட்டுதலின் படி மருத்துவப் பயன்பாட்டிற்கு தேவையான இடங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட உள்ளது என ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  19. கொரோனா குறையும் 200 இந்திய மாவட்டங்கள்

    தொடர்ந்து 13 வார காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த சுமார் 200 இந்திய மாவட்டங்களில், கடந்த இரண்டு வார காலமாக தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    பரிசோதனை செய்யப்படுபவர்களுள் தொற்று இருப்பது உறுதிசெய்யப்படுபர்களின் விகிதமும் குறைந்து வருவதாக இந்திய கோவிட்-19 நடவடிக்கை குழுவின் தலைவர் மருத்துவர் வி.கே. பால் கூறுகிறார்

  20. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

    விஜயகாந்த்

    பட மூலாதாரம், TWITTER

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.