ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் குறித்த அறிக்கையை கோரியுள்ளது மனித உரிமைகள் ஆணையம்.
கொரொனா தொற்றால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது
பல நகரங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் மாநிலத்தின் நிலைமையைச் சீராக்கத் தவறிவிட்டது.
செவ்வாயன்று 13,417 புதிய நோய்த் தொற்றுகள் பதிவானதாக மாநில அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 26 நாட்களில் சில நாட்கள் தவிர, நாள் தோறும் மிக அதிகமான எண்ணிக்கையே பதிவாகியுள்ளது.
செவ்வாயன்று தொற்று விகிதம் 22.6% ஆக இருந்தது. அதாவது சோதனை செய்து கொண்ட நால்வரில் ஒருவருக்குத் தொற்று உறுதியானது.
இந்த மாதம் ஒவ்வொரு நாளின் பதிவும் மும்மடங்கு உயர்ந்திருந்தது. திங்களன்று இருந்த 23%-ஐ விட செவ்வாய் சற்று குறைந்திருந்தது. கடந்த சில நாட்களாக இந்த விகிதம் சற்றே குறைந்தும் வருகிறது.
செவ்வாயன்று 98 பேர் கொரொனா நோயால் உயிரிழந்தனர். இதுவரை மாநிலத்தில் 5,319 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
1,837 என்ற எண்ணிக்கையுடன் மாநிலத்திலேயே முதல் இடத்தில் இந்தோர் உள்ளது. அடுத்ததாக, 1,836 என்ற எண்ணிக்கையுடன் போபால் உள்ளது. குவாலியரில் 1,198 பேருக்கு நோய்த் தொற்று பரவியுள்ளது.
ஆனால், இது வரை 11,577 பேர் தொற்று குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது சற்றே ஆறுதலளிக்கும் செய்தி. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 4,25,812 பேர் குணமாகியுள்ளனர்.
ஏப்ரல் 27 அன்று மத்தியப்பிரதேசத்தில் 94,276 பேர் நோய் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். இதுவரை மாநிலத்தில் இந்த அளவு உயர்ந்த எண்ணிக்கை பதிவானதில்லை என்பது சற்று கவலையளிக்கிறது
நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே இந்த மாநிலத்திலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவிர் ஊசிகளுக்காகக் கடந்த சில நாட்களாகவே மக்கள் அலையும் நிலை தான் உள்ளது.
இந்தோர் நகரில் ரத்த வங்கிகளில் பிளாஸ்மா சேகரிப்பு கிட் பற்றாக்குறை இருப்பதாகவும், பிளாஸ்மா தானம் செய்ய விரும்பும் மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் மற்றொரு செய்தி பரவியது.
மருத்துவ ஆக்சிஜனை கொண்ட ஆறு டேங்கர்களைக் கொண்டு செல்லும் ரயில் செவ்வாய்க்கிழமை ஜார்க்கண்டின் பொகாரோவில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்குப் புறப்பட்டுள்ளது. இந்த டேங்கர்கள் 64 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனைக் கொண்டு வருகின்றன.
ஒரு வாரத்திற்கு முன்பு ஷாஹ்தோலில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் விநியோகத்தில் போதுமான அழுத்தம் இல்லாததால், குறைந்தது ஆறு கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாகச் செய்தி வந்தது. மருத்துவக் கல்லூரியின் டீனை மேற்கோள் காட்டி, பிடிஐ இந்தச் செய்தியை வெளியிட்டது. பின்னர் மத்திய பிரதேச மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் இந்த அறிக்கையை மறுத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இப்போது மத்திய பிரதேச மனித உரிமைகள் ஆணையம் மோரேனாவில் மூன்று கொரோனா நோயாளிகள் மற்றும் காட்னியில் இரு நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, மே 3 ஆம் தேதிக்குள் இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
திங்களன்று நடந்த இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து சுகாதார ஊழியர்களுக்கும் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.