ஜூலை 11ஆம் தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க. பொதுக் குழுவிற்குத் தடை விதிக்கக்கோரி, தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை நாளை (வெள்ளிக் கிழமைக்கு) ஒத்திவைத்துள்ளது.
அ.இ. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் பொதுக் குழு உறுப்பினர் ஒருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜூலை 11ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "அரசியல் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று தெரிவித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குரு கிருஷ்ணகுமார், "வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் வேறு நிவாரணங்களைப் பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது. அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல்களை தாக்கல் செய்யும்படி கூறி, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
பிற்பகலில் மீண்டும் வழக்கின் விசாரணை தொடங்கியது.
அப்போது, "ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழுவைக்கூட்ட அனுப்பப்பட்ட அழைப்பு செல்லுமா? என்பதை விவாதிக்க வேண்டும். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டதற்கான தகவல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிலும், பிரமாணப் பத்திரத்திலும் தன்னை அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளார். ஒருங்கிணப்பாளருக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது" என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
இதற்கு எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு வழக்குரைஞர், "ஒரு கட்சி தனது பொதுக் குழுவை நடத்தும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. வரும் பொதுக் குழுவில் தற்காலிக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். பின்னர் நடத்தப்படும் பொதுச் செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
தற்போதைய சூழலில் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ கிடையாது. பொதுக் கூழுவை நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும், ஜூலை 11ம் தேதி நடக்கவிருப்பது சிறப்பு பொதுக் குழு என்றும் கடந்த பொதுக் குழுவின் நீட்சி அல்ல" என்றும் வாதிட்டார்.
இதற்குப் பிறகு நீதிபதி, "பொதுக் குழு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், நாங்கள் என்ன செய்ய முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தற்போது அதிகாரம் ஏதும் இல்லையென்றால் பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் படைத்தவர் யார்?
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதா? பொதுக் குழுவுக்கான அறிவிப்பில் கையெழுத்திடுவது யார்? பொதுக் குழு கூடுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வழங்க வேண்டும்? பொதுக் குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?" என்பது உள்ளிட்ட 10 கேள்விகளை எழுப்பினார்.
இந்தக் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு விரிவான பதில்களைத் தாக்கல்செய்ய வேண்டுமெனக் கூறிய நீதிபதி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.