இலங்கைக்கு ரஷ்ய பிரதிநிதிகள் வருகை - எரிபொருள் விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தை
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்கின்றமை குறித்து, ரஷ்ய பிரதிநிதிகள், இலங்கை உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ.பி.எஸ் தரப்பின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வரும் 11ஆம் தேதி பொதுக் குழுவுக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுத்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், பிரதமராக இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வார் என்றும் தெரிகிறது.
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்கின்றமை குறித்து, ரஷ்ய பிரதிநிதிகள், இலங்கை உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,930 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக் குழுவிற்குத் தடைகோரிய வழக்கில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி இ.பி.எஸ் தரப்பிற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை நாளை ஒத்திவைத்துள்ளது.
கோயம்புத்தூர் அதிமுக பிரமுகர் வடவள்ளி சந்திரசேகர் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
அ.தி.மு.க. பொதுக் குழுவுக்குத் தடைகோரிய வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு
ஜூலை 11ஆம் தேதி
நடக்கவுள்ள அ.தி.மு.க. பொதுக் குழுவிற்குத் தடை விதிக்கக்கோரி, தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படி
உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வெள்ளிக் கிழமைக்கு
ஒத்திவைத்துள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடக்கவுள்ள அ.இ.அ.தி.மு.கவின்
பொதுக் குழுவிற்குதடைவிதிக்க வேண்டுமென அ.தி.மு.கவின்
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் பொதுக் குழு உறுப்பினர் ஒருவரும் சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (வியாழக்கிழமை)
விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமியின் சார்பில் ஆஜரான
வழக்கறிஞர் வாதிடும்போது, "அரசியல் கட்சி விவகாரங்களில்
நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதால்,
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று தெரிவித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார்,
"வரும் 11ஆம்
தேதி பொதுக்குழு கூடலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் வேறுநிவாரணங்களைப் பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது.
அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவின் நகல்களை தாக்கல் செய்யும்படி கூறி, விசாரணையை
பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
பிற்பகலில் மீண்டும் வழக்கின் விசாரணை தொடங்கியது. அப்போது,
"ஜூலை 11ஆம் தேதி பொதுக்
குழுவைக்கூட்டஅனுப்பப்பட்ட அழைப்பு செல்லுமா என்பதை
விவாதிக்க வேண்டும். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை
ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமியும்தேர்வு
செய்யப்பட்டதற்கான தகவல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.மேலும்,
எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு
மனுவிலும், பிரமாணப் பத்திரத்திலும் தன்னை அ.தி.மு.கவின்
இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளார்.ஒருங்கிணப்பாளருக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது"
என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதற்குப் பிறகு வாதிட்ட எடப்பாடி கே. பழனிசாமி
தரப்பு வழக்கறிஞர், "ஒரு கட்சி தனது பொதுக் குழுவை நடத்தும்
உரிமை எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.வரும்
பொதுக் குழுவில் தற்காலிக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.
பின்னர் நடத்தப்படும் பொதுச் செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட யார்
வேண்டுமானாலும் போட்டியிடலாம். தற்போதைய சூழலில் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளரோ,
இணை ஒருங்கிணைப்பாளரோ கிடையாது.பொதுக்
கூழுவை நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும், ஜூலை 11ம் தேதி நடக்கவிருப்பது சிறப்பு பொதுக் குழு என்றும்கடந்த பொதுக் குழுவின் நீட்சி அல்ல" என்றும்
வாதிட்டார்.
இதற்குப் பிறகு நீதிபதி, "பொதுக்
குழு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், நாங்கள்
என்ன செய்ய முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தற்போது அதிகாரம் ஏதும் இல்லையென்றால்
பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் படைத்தவர் யார்? ஒருங்கிணைப்பாளர்,
இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதா? பொதுக் குழுவுக்கான அறிவிப்பில் கையெழுத்திடுவது யார்? பொதுக் குழு கூடுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வழங்க
வேண்டும்? பொதுக் குழுவை கூட்ட தலைமைக் கழக
நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?" என்பது உள்ளிட்ட
பத்துக் கேள்விகளை எழுப்பினார்.
இந்தக் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு விரிவான பதில்களைத்
தாக்கல்செய்ய வேண்டுமெனக் கூறிய நீதிபதி, வழக்கை நாளைக்கு
ஒத்திவைத்தார்.
கடும் குளிர் எச்சரிக்கை எதுவுமில்லை: சமூக வலைதள செய்தி தவறானது - வானிலை ஆய்வு மையம்
கடும் குளிர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும்செய்தி தவறானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக வலைதளத்தில் தவறான செய்தி பரவுகிறது. .
அப்படி எந்த எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு கடும் குளிர் அலை எச்சரிக்கை ஏதுமில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், INDIA METEOROLOGICAL CENTRE
தமிழ்நாடு ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி மாற்றம்
பட மூலாதாரம், Getty Images
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வு பிரிவின் ஐ.ஜி பவானீஸ்வரி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜியாக துரைகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருக்கும் வந்திதா பாண்டே புதுக்கோட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் அயல் பணிக்காக மத்திய உளவு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இலங்கையின் நிலை ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை - மலேசிய முன்னாள் பிரதமர்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, மகாதீர் மொஹம்மத்
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அந்நாட்டின் கடன் சுமையும் ஆசிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மகாதீர் மொஹம்மத் இது தொடர்பாக ஆசிய நாடுகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அதிமுக பொதுக் குழு வழக்கு ஒத்திவைப்பு: இ.பி.எஸ் தரப்பிற்கு கேள்விகள் - உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?
பட மூலாதாரம், Getty Images
ஜூலை 11ஆம் தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க. பொதுக் குழுவிற்குத் தடை விதிக்கக்கோரி, தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை நாளை (வெள்ளிக் கிழமைக்கு) ஒத்திவைத்துள்ளது.
அ.இ. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் பொதுக் குழு உறுப்பினர் ஒருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜூலை 11ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "அரசியல் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று தெரிவித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குரு கிருஷ்ணகுமார், "வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் வேறு நிவாரணங்களைப் பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது. அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல்களை தாக்கல் செய்யும்படி கூறி, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
பிற்பகலில் மீண்டும் வழக்கின் விசாரணை தொடங்கியது.
அப்போது, "ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழுவைக்கூட்ட அனுப்பப்பட்ட அழைப்பு செல்லுமா? என்பதை விவாதிக்க வேண்டும். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டதற்கான தகவல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், AIADMK
படக்குறிப்பு, அதிமுக நிர்வாகிகள்
மேலும், எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிலும், பிரமாணப் பத்திரத்திலும் தன்னை அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளார். ஒருங்கிணப்பாளருக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது" என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
இதற்கு எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு வழக்குரைஞர், "ஒரு கட்சி தனது பொதுக் குழுவை நடத்தும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. வரும் பொதுக் குழுவில் தற்காலிக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். பின்னர் நடத்தப்படும் பொதுச் செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
தற்போதைய சூழலில் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ கிடையாது. பொதுக் கூழுவை நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும், ஜூலை 11ம் தேதி நடக்கவிருப்பது சிறப்பு பொதுக் குழு என்றும் கடந்த பொதுக் குழுவின் நீட்சி அல்ல" என்றும் வாதிட்டார்.
இதற்குப் பிறகு நீதிபதி, "பொதுக் குழு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், நாங்கள் என்ன செய்ய முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தற்போது அதிகாரம் ஏதும் இல்லையென்றால் பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் படைத்தவர் யார்?
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதா? பொதுக் குழுவுக்கான அறிவிப்பில் கையெழுத்திடுவது யார்? பொதுக் குழு கூடுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வழங்க வேண்டும்? பொதுக் குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?" என்பது உள்ளிட்ட 10 கேள்விகளை எழுப்பினார்.
இந்தக் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு விரிவான பதில்களைத் தாக்கல்செய்ய வேண்டுமெனக் கூறிய நீதிபதி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.
பட மூலாதாரம், AIADMK
படக்குறிப்பு, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்
இலங்கைக்கு தமிழ்நாடு காவல்துறை ரூ. 1.40 கோடி, தொழில்துறை ரூ. 1.35 கோடி நிவாரண நிதி - முதலமைச்சரிடம் வழங்கினர்
பட மூலாதாரம், CMOTamilNadu
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல் துறையினர் ரூ. 1.40 கோடி அளித்தனர். தொடர்ந்து, இந்திய தொழில் கூட்டமைப்பினர் ரூ. 1.35 கோடி வழங்கியுள்ளனர்.
இந்திய தொழிற்கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் சத்யகாம் ஆர்யா, முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.சந்திரகுமார், சென்னை மண்டல தலைவர் ஜெ.முருகவேல், பான் பியூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு. பி.லஷ்மிபதி, தமிழ்நாடு இயக்குநர் டி.துளசிராஜ், துணை இயக்குநர் எஸ்.வெங்கட்ராமன் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.
அப்போது, இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1.35 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.
இதையடுத்து, டிகே பிரஸ்டீஜ் நிறுவனத்தின் குழும இயக்குநர் கே.சங்கரன் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பட மூலாதாரம், CMOTamilNadu
இதேபோல் நேற்றைய தினம், தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் 37 மாவட்டம் மற்றும் 9 மாநகர காவலர்கள் சார்பாக ரூ. 1,34,19,643 மற்றும் இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக ரூ. 6,63,500 என மொத்தம் ரூ. 1,40,83,143 முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, முதலமைச்சரிடம் இதற்கான காசோலையை வழங்கினார்.
கள்ளர் சீரமைப்பு பள்ளி விடுதிகள் வழக்கு: ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்
கள்ளர் சீரமைப்பு விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்த சீர்மரபினர் பழங்குடியினர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 295 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் 54 கள்ளர் சீரமைப்பு விடுதிகள் உள்ளன. இவை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தன.
மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 54 கள்ளர் சீரமைப்பு விடுதிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் நிர்வகிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து கள்ளர் சீரமைப்பு விடுதிகளும் கள்ளர் சீரமைப்பு துறையால் முறையாக மேற்பார்வை செய்யப்பட்டு, சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், முறையாக நிர்வகிக்க இயலவில்லை எனக்கூறி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, கள்ளர் சீரமைப்பு விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், " கள்ளர் சீரமைப்பு விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது தொடர்பான அரசாணையை திரும்பப் பெற ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.''
இதையடுத்து வழக்கினை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கோயம்புத்தூரில் தனிப்படை இன்று விசாரணை
பட மூலாதாரம், KODANAD ESTATE
படக்குறிப்பு, கோடநாடு எஸ்டேட், முகப்பு வாயில்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கோயம்புத்தூர் தொழில் நிறுவன நிர்வாக இயக்குநரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்குகளை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கடந்த சில மாதங்களில் சென்னையிலும் கோயம்புத்தூரிலும் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளது. சசிகலா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த செந்தில் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமாரிடம் தனிப்படை காவல்துறையினர் இன்றுவிசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருடைய நிறுவனம் தான் கோடநாடு இல்லத்தின் பராமரிப்பு பணிகளை கவனித்து வந்ததுள்ளது.
ஓசூரில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் - கோப்புப் படம்
தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசனட்டி சூர்யா நகரை சேர்ந்தவர் கோபி. தனியார் நிறுவன தொழிலாளியாக உள்ளார். இவரது மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு எழுதினார். மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ சேர்க்கை கிடைக்கவில்லை.
மீண்டும் தேர்வு எழுத கடந்த ஒரு ஆண்டாக ஆன் லைனில் படித்து வந்தார். வருகின்ற 17ஆம் தேதி நீட் தேர்வு எழுத முரளி கிருஷ்ணாவுக்கு அனுமதிச் சீட்டு வந்துள்ளது. நேற்று வழக்கம் போல முரளி கிருஷ்ணாவின் பெற்றோர் வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பியுள்ளனர் . வீட்டில் முரளி கிருஷ்ணா இறந்து கிடந்துள்ளார்.
ஓசூர் சிப்காட் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ஆய்வு செய்ததில் முரளி கிருஷ்ணா தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில் ''எனக்கு நீட் தேர்வு கஷ்டமா இருக்குமா ...என்னால நீட்ல நல்ல மார்க் எடுக்க முடியாது... என்ன மன்னிச்சிடுவோமா... நான் என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணினேன்... ஆனால் மெடிக்கல் சீட் வாங்குகிற அளவுக்கு என்னால ஸ்கோர் பண்ண முடியாது... அதனால நான் இந்த முடிவை எடுத்துட்டேன்.. என்னை மன்னிச்சிரும்மா... உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா...'' என்று உருக்கமாக எழுதி இருந்தது.
இது குறித்து முரளி கிருஷ்ணாவின் உறவினர்கள் கூறுகையில், ''ஏழ்மையான நிலையில் இருந்தாலும் மகனை டாக்டர் ஆக்க வேண்டும் என்று அவனது பெற்றோர் ஆசையில் இருந்தனர்.
ஆனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா? என்ற பயத்தில் முரளி கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் இனி இதுபோல் நீட் தற்கொலைகள் தொடரவே கூடாது.'' என்று கண்ணீர் விட்டனர் .
"சீனா பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது"
பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டாக இணைந்து சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, "நம்முடைய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு நீண்ட கால பெரும் அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது" என்றும், சமீபத்திய தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களிலும் சீனா தலையிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர் மனைவி, குழந்தைகளை கொன்று, தற்கொலை - கடன் சுமையால்
கடன் சுமையால் புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மனைவி, இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(38). ஆட்டோ ஓட்டுநர். குடும்பத்துடன் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இதனிடையே கடன் சுமை காரணமாக ஆட்டோ ஒட்டவில்லை.
கடனால் அவரின் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 20 மாதங்களாக எலக்ட்ரீசன் வேலை மற்றும் கூலி தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை சுமார் 9 மணியளவில், அவரது உறவினர்களுக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, அனைவரையும் அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.
தகவலைக் கேட்ட உறவினர்கள் உடனடியாக தியாகராஜன் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தியாகராஜன், அவரது மனைவி பச்சைவாலி(வயது 34), 7 வயது பெண், மற்றும் 3 வயது ஆண் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.
இதனையடுத்து அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கணவர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் பிரேதங்களை புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உடற் கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ராமேஷிடம் கேட்டபோது, "கடன் சுமை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் இருவரைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். விசாரணை நிறைவு பெற்ற பின்னரே முழு விவரம் தெரியவரும்," என்றார்.
தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது குறித்த வழிமுறைகளை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
பட மூலாதாரம், Getty Images
அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை, இ.பி.எஸ் மீதான அவமதிப்பு வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்றம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வரும் 11ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் குழுவுக்கு தடை விதிக்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
அ.தி.மு.கவின் பொதுக் குழு கடந்த 23ஆம் தேதி கூட்டப்பட்டபோது, நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாகக் கூறி ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அதில், தமிழ்மகன் உசேன் நிரந்தரத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டது செல்லாது, அவரால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் 11ஆம் தேதி பொதுக்குழுக்கு தடைவிதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறிய எடப்பாடி கே. பழனிச்சாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி கே. பழனிச்சாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினர்.
இதனைப் பதிவுசெய்து கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், பிரதான வழக்கின் விசாரணை (தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான வழக்கு) மட்டும் தொடருமென்றும் கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் கூறினர். பிரதான மனு மீதான விசாரணை ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு வருமென்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கடந்த 28ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதோபோல, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோரும் மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்குகள் நேற்று (ஜூலை 6ஆம் தேதி) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றம் 23ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
மேலும் "அ.தி.மு.கவின் பொதுக் குழு வரும் 11ஆம் தேதி நடைபெறலாம். பொதுக் குழு கூட்டம் தொடர்பான இதர அம்சங்கள் குறித்த இடைக்கால மனுக்களை உரிமையியல் வழக்கை விசாரிக்கும் தனி நிதிபதி முன்பாக முறையிடலாம். மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறோம்" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், கூடுதல் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. பிரதான வழக்கை ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் போரிஸ் ஜான்சன்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், பிரதமராக இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வார் என்றும் தெரிகிறது.
கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். அக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் பதவிக்கு வருவார்.
போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் பதவி விலகினர்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சன் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார்.
இலங்கைக்கு ரஷ்ய பிரதிநிதிகள் வருகை - எரிபொருள் விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தை
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவின் எரிபொருள் நிறுவனங்கள் இரண்டை பிரதிநிதித்துவப்படுத்தி, இரண்டு பிரதிநிதிகள் இலங்கையை இன்று காலை வந்தடைந்துள்ளனர்.
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்கின்றமை குறித்து, ரஷ்ய பிரதிநிதிகள், இலங்கை உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதிநிதிகள் இருவரும் பஹ்ரைன் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருள் தட்டுப்பாடு மிக தீவிரமடைந்துள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதனால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர் வரிசைகளில் பெருந்திரளானோர் நாளாந்தம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, எரிபொருள் இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசாங்கம், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாகவே ரஷ்ய அதிகாரிகள் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கோயம்புத்தூர் அதிமுக பிரமுகர் சந்திரசேகர் நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை
கோயம்புத்தூர் அதிமுக பிரமுகர் வடவள்ளி சந்திரசேகர் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் வடவள்ளி சந்திரசேகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரசேகர், நமது அம்மா நாளிதழ் பதிப்பாளராகவும் உள்ளார்.
ந்திரசேகர் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான 6 வெவ்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இரவு 12.30 மணி வரை தொடர் சோதனை நடைபெற்றது.
விசாரணையில் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர். இரண்டாவது நாளாக இன்றும் கோயம்புத்தூரில் உள்ள கே.சி.பி கட்டுமான நிறுவனத்தில் வரித்துறையின் சோதனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.
இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் முகமது ஜுபைர் மனு
மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு டெல்லி காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட ‘ஆல்ட் நியூஸ்’ உண்மை கண்டறியும் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் அந்த வழக்கிலிருந்து பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு இந்த வழக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், TWITTER/ZOO_BEAR
படக்குறிப்பு, முகமது ஜுபைர்
“நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறைக்காக குரல் எழுப்புவேன்” - பி.டி. உஷா
படக்குறிப்பு, பி.டி. உஷா
நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறைக்காக குரல் எழுப்புவேன் என்று மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா தெரிவித்துள்ளார் .
மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், “எனக்கு மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் பதவி கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்திய விளையாட்டு துறைக்கு கிடைத்த பெருமையான தருணம். குறிப்பாக தடகள விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன் .
பிரதமர் விளையாட்டு துறையின் மீது தனிப்பட்ட ஆர்வம் காட்டுகிறார். வீரர்கள் போட்டிக்கு செல்லும் முன்பு அவர்களை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார். போட்டி முடிந்து திரும்பிய போதும் சந்தித்து வாழ்த்துகளை சொல்கிறார். இப்படி விளையாட்டு வீரர்களுடன் ஒன்றிணைந்து விளையாட்டு துறையை கூர்ந்து கவனித்து வருகிறார் .
இதனால் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு நிறைய பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறைக்காக குரல் எழுப்புவேன்” என்று அவர் மேலும் கூறினார்.
“நடராஜரும், நானும். இடையில் நாரதர்கள் வேண்டாமே” - தமிழிசை சௌந்தரராஜன்
பட மூலாதாரம், @DRTAMILISAIGUV/TWITTER
"காலையில் முழுமன நிறைவோடு சிதம்பரம் நடராஜரின் ஆனி திருமஞ்சனம் விழாவில் தரிசனம் செய்துவிட்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பொதுநல வேண்டுதலுடன் கோயிலின் வெளியே வந்தால் வழக்கமாக சில வதந்திகளும், புரளிகளும் வருகிறது. அந்த புரளிகளை நான் புரந்தள்ளுகிறேன்," என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் தேரோட்ட விழாவிற்கு நேற்று காலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்றிருந்தார். அவர் கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த போது தீட்சிதர்கள் வேறு இடத்தில் அமரும்படி கூறி அவமதித்ததாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழிசை என்னை வேறு இடத்தில் அமரும்படி கூறியது உண்மை தான் ஆனால் அவமதிப்பு செய்யவில்லை என்று விளக்கமளித்தார்.
இதனிடையே இந்த நிகழ்வு குறித்து தமிழிசை மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "நடராஜரும் நானும், இடையில் நாரதர்கள் வேண்டாம்," என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
அதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கோயில் நடந்த நடந்த சுவையான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.