யுக்ரேனின் கார்கிவ், செரீனிஹிவ் பகுதிகளில் குண்டுமழை - கடும் சண்டை

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஐந்தாம் நாள் தாக்குதலின்போது கார்கிவ், செரீனிஹிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படையினர் குண்டு மழையை பொழிந்து வருகின்றனர். ரஷ்ய படையினருக்கு யுக்ரேனிய படையினரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. பிப்ரவரி 28ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிப்ரவரி 28, திங்கட்கிழமை வெளியான யுக்ரேன் போர் தொடர்பான நேரலைப் பக்கம் முடிவடைந்தது.

    யுக்ரேனில் நடப்பவை குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...

    • யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
    • யுக்ரேனில் சிக்கிய இந்திய மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்கச் செல்லும் மத்திய நான்கு அமைச்சர்கள்
    • ரஷ்ய வங்கிகள் சிலவற்றை நிதி தகவல் சேவை அமைப்பான ஸ்விஃப்ட் (SWIFT Global Financial Messaging System) வலைப்பின்னலில் இருந்து நீக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு யுக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நன்றி
    • உலக அளவில் 36 நாடுகளின் விமான சேவைகளை ரஷ்யா தடை விதித்துள்ளது.
    • யுக்ரேனில் இருந்து இன்று மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை 6 விமானங்கள் மூலம் 1,400 இந்திய குடிமக்கள் வெளியே வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய துருப்புக்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடவும், உடனடியாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை தமது நாட்டுக்கு வழங்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
    • இன்று காலை கீயவ் மற்றும் கார்கீவ் பகுதியில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டது. அதே நேரத்தில் வடக்கு நகரமான செர்ன்ஹைவில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஏவுகணை தாக்குதுக்கு இலக்கானது.
    • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை பெலாரூஸில் தொடங்கியுள்ளது. இதில் இரு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
    • மெடா நிறுவனம், யுக்ரேனில் ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பிற்கு நடுவே, முக்கிய ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளரின் ஃபேஸ்புக் கணக்குகள் ஒரு ஹேக்கிங் குழுவால் குறி வைக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
    • கனடாஅரசாங்கம் யுக்ரேனுக்கு கூடுதலான 19.6 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியைச் செய்வதாக அறிவித்துள்ளது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் காலையில் மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டுவரும் இந்த நேரலைப் பக்கங்கள் இந்தப் படையெடுப்பில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் காலவரிசைப் படி பார்ப்பதற்கான ஒரு மூலாதாரமாக விளங்கும்.

    • யுக்ரேன் மீது போர் தொடுத்த ரஷ்யா: முதல் நாள் போரில் நடந்தது என்ன? - நேரலை செய்தி
    • போரில் இரண்டாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
    • போரில் மூன்றாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
    • யுக்ரேன் போரின் நான்காவது நாளில் நடப்பது என்ன? - நேரலை
  2. யுக்ரேன் மோதல்: கார்கிவ் பகுதியில் பேருந்தில் இருந்தவர்களை சுட்டுக் கொன்ற ரஷ்ய படையினர்

    யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் பேருந்துக்குள் இருந்தவர்களை ரஷ்ய படையினர் சுட்டுக் கொன்றனர்.

    அங்குள்ள நிலைமையை விவரித்த டொனெட்ஸ்க் பிராந்திய அரசு நிர்வாகத்தின் தலைவர் பாவ்லோ கிரிலென்கோ, சம்பவ பேருந்துக்குள் நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் கொல்லப்பட்டதாக கூறினார்.

    கார்கிவில் இருந்து இஸியம் நோக்கி அந்த "ஷட்டில் பஸ்" (சாம்பல் நிற ஃபோக்ஸ்வேகன்) சென்றபோது அதை ரஷ்ய படையினர் சுட்டனர் என்று கிரிலென்கோ தெரிவித்தார்.

    இந்த சம்பவம் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள வோலோகோவி கிராமத்திற்கு அருகே நடந்தது.

    "பிப்ரவரி 26 முதல் பேருந்துக்குள் இருந்த எவருடனும் எந்த தொடர்பும் இல்லாததால், அவர்கள் இறந்துவிட்டதாகவோ காணவில்லை என்றோ நிர்வாகம் கருதியதாக அவர் தெரிவித்தார்.

    வோலோகோவ் யார் என்ற பகுதியில் வசித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, பேருந்தில் இருந்தவர்கள் இறந்ததாக அந்த பிராந்திய மேயர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால், அதில் ​​​​இருந்த இரண்டு பெண்கள் உயிருடன் இருப்பதாக சிலர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டனர்.

    இருவரில் ஒருவர் இப்போது மருத்துவமனையில் இருப்பதாகவும் ஒரு பயனர் குறிப்பிட்டார். ஆனால், அந்த பேருந்து சுடப்பட்ட இடம் ரஷ்ய ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் தற்போது இருப்பதால், அவர்களின் நிலையை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பேருந்தில் சுடப்பட்டவர்களின் சடலத்தை கூட ரஷ்ய படையினர் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் டொனெட்ஸ்க் பிராந்திய தலைவர் தெரிவித்தார்.

  3. ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கு விண்ணப்பித்தார் ஸெலென்ஸ்கி

    யுக்ரேன் அதிபர்

    பட மூலாதாரம், Ukraine President Office

    படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட பிறகு அந்த ஆவணத்தை காண்பிக்கும் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.

    ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகும் விண்ணப்பத்தில் யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.

    "வரலாற்றுபூர்வ ஆவணம் இது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆவதற்கான விண்ணப்பத்தில், பிப்ரவரி 28, 2022 அன்று கியவில் யுக்ரேனிய அதிபர் கையெழுத்திட்டுள்ளார்" என்று அவரது செய்தித்தொடர்பாளர் நிகிஃபோரோவ் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

    இந்த ஆவணத்தில் யுக்ரேனிய நாடாளுமன்ற சபாநாயகர் ருஸ்லான் ஸ்டீபன்சுக் மற்றும் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

    "ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆகும் தேர்வு மற்றும் பாதுகாப்புக்காக மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளது யுக்ரேன்," என்று நிகிஃபோரோவ் குறிப்பிட்டுள்ளார்.

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் யுக்ரேன் ஒருங்கிணைவது அதன் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும் என்று அதிபர் அலுவலகம் நம்புகிறது.

    அதிபரின் கையெழுத்து நடைமுறையைத் தொடர்ந்து இனி அதை ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்வதற்கான சிறப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, கார்கிவ், செர்னீஹிவில் குண்டு மழை பொழியும் ரஷ்யா

    யுக்ரேனின் கார்கிவ், செர்னீஹிவில் ரஷ்ய படையினர் குடியிருப்புப் பகுதிகள், ராணுவ தளங்களை இலக்கு வைத்து குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.

    அவர்களுடன் யுக்ரேனிய படையினரும் மோதி வருவதாக தகவல்கள் வருகின்றன.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, கியவ் அருகே ப்ரோவாரியில் தாக்குதல் - பலர் படுகாயம் அடைந்ததாக மேயர் தகவல்

    யுக்ரேன் தலைநகர் கியவ் அருகே உள்ள ப்ரோவாரியில் வான் தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

    அங்கு பலர் காயமடைந்திருக்கிறார்கள்.

    இதையடுத்து "குடியிருப்புகளில் பொதுமக்கள் இருங்கள்!" என்று வான் தாக்குதல் பற்றிய தகவலை உறுதிப்படுத்திய ப்ரோவாரி மேயர் ஈகோர் சபோஷ்கோ தெரிவித்தார்.

    அங்கு ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய தகவல் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, தலைநகர் கியவில் மீண்டும் சைரன் ஒலி - பல இடங்களில் குண்டு மழை, செசீலியா மெக்காலே, பிபிசி நியூஸ்

    யுக்ரேன் ரஷ்யா தாக்குதல்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, செர்னீஹிவ் பகுதி ரஷ்ய ராணுவத்தால் இலக்கு வைக்கப்படும் முக்கிய பகுதி என்கிறது யுக்ரேனிய ராணுவம்.

    யுக்ரேன் தலைநகர் கியவில் இன்று மாலையில் ரஷ்ய துருப்புகளுக்கும் யுக்ரேனிய படையினருக்கும் இடையே புதிதாக சண்டைகள் நடப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

    செர்னீஹிவில் உள்ள ஒலெக் ஸ்விஸ்ட், பிபிசியிடம் தனது நகரம் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகக் கூறினார்.

    "எல்லா இடங்களிலிருந்தும் நான் வெடிக்கும் சத்தங்களைக் கேட்கிறேன்," என்று அவர் கூறுகிறார். அந்த சத்தம் "என்னைச் சுற்றி ஒரு வட்டம் போல" கேட்கிறது.

    "இது நான் வசிக்கும் பகுதியில் இருந்து வெகு அருகே கேட்கிறது. அதாவது அந்த இடம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள் செர்னீஹிவின் மையப் பகுதியில் குண்டு வீசுகிறார்கள்" என்று கூறுகிறார் 48 வயதான தகவல் தொழில்நுட்ப நிபுணர்.

    தனது தாய்நாட்டைக் காக்க ரஷ்ய வீரர்கள் மீது "சுட" தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

    ஒவ்வோர் 20 நிமிடங்களுக்கும் வெடிகுண்டு தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்,

    இனி தப்பி ஓடி பங்கருக்குள் மறைவதற்கு கூட அவகாசம் இல்லை என்கிறார் அவர்.

    அப்படி செய்வது "இனி சாத்தியமற்றது. யாரும் அதைச் செய்யப்போவதில்லை" என்று கூறும் அவர், மாறாக, ஆயுதங்களைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

    இவரது வீட்டிற்கு அருகில் கலாஷ்னிகோவ்ஸ் இயந்திர துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைப் பெற மக்கள் கூடும் பகுதி உள்ளதாகவும் அங்கு ஆயுதங்களை வாங்க எல்லா வயதினரும் வருவதாகவும் கூறுகிறார் ஒலெக் ஸ்விஸ்ட்.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    யுக்ரேன், ரஷ்யா இடையிலான மோதல் குறித்து மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியிருக்கிறார்.

    இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கடியான நிலை குறித்து விவாதிக்க வருமாறு அவர் தமது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஐரோப்பிய ஆணையத் தலைவர் வூர்சுலா ஃபொண்டெர்லயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ல்ஸ் மைக்கேல், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோல்ட்ஸ், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நேட்டோ செகரட்டரி ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், போலாந்து அதிபர் ஆண்டர்ஜெஸ் டூடா, ருமேனியா அதிபர் கிளாஸ் ஐஹானிஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு இந்த அழைப்பை அமெரிக்க அதிபர் பைடன் விடுத்துள்ளார்.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, கியவ் நகரில் மீண்டும் ஒலிக்கும் வான் தாக்குதல் அபாய சங்கு - பங்கர்களுக்குள் ஒளியும் பொதுமக்கள்

    யுக்ரேன் தலைநகர் கியவில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில், இன்று காலையில் ஏற்பட்டது போன்றே, வான் தாக்குதலுக்கு முந்தைய அபாய சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.

    இதையடுத்து வார இறுதிவரை பூமிக்கடியில் இருந்த பங்கர் மறைவிடங்களுக்குள் இருந்த தலைநகரவாசிகள் வெளியே கடைகளுக்கும் வீடுகளுக்கும் திரும்பி வந்தனர்.

    இந்த நிலையில், காலையில் சில நிமிடங்கள் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் மீண்டும் பங்கருக்குள் தஞ்சம் அடைந்தனர். பிறகு அமைதியான நிலைமை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அவர்கள் வெளியே வந்தனர்.

    இந்த நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு மீண்டும் வான் தாக்குதலை எச்சரிக்கும் சைரன்கள் ஒலிக்கப்படுவதாக கியவில் உல்ள பிபிசி செய்தியாளர் கிளைவ் மைரீ தெரிவித்துள்ளார்.

    "தலைநகரை அடுத்த பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலால் தாம் செய்தி வழங்கிக் கொண்டிருந்த கட்டட தளம் அதிர்ந்தது என்றும் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் கட்டட "ஜன்னல்கள் அதிர்ந்தன" என்றும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் Vs ரஷ்யா மோதல்: நிலைமை தீவிரம்தான் ஆனால், நிலையாக உள்ளது - யுக்ரேனிய உள்துறை அமைச்சர்

    யுக்ரேன் ரஷ்யா மோதல்
    படக்குறிப்பு, டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, யுக்ரேனிய உள்துறை அமைச்சர்

    யுக்ரேனில் களத்தில் உள்ள நிலைமை தீவிரமாக உள்ளது என்றாலும் அது நிலையாக உள்ளது என்று பிபிசியிடம் கூறியிருக்கிறார் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி.

    கியவ் மற்றும் பிற நகரங்கள் உட்பட யுக்ரேன் மீது மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருகிறதா என்று அவரிடம் பிபிசி குழு கேட்டது.

    அதற்கு அவர், "ஒவ்வோர் நாளும் அதிபர் என்னிடம் கேள்வி கேட்பார். நாங்கள் ஒவ்வோர் நாளும் எங்களுடைய முயற்சிகளை ஒருங்கிணைக்கிறோம். இங்கே நிலைமை நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், நிலையாக உள்ளது என்று நாங்கள் பதிலளிக்கிறோம்," என்றார் டெனிஸ்.

    "ஆம், உண்மையில், ஒவ்வொரு நாளும் எதிரி நாடு மேலும் , மேலும் படைகளை அனுப்புகிறது. ஆனால் நமது ஆயுதப் படைகள் அடிப்படையில் கியவுக்கு வரும் அனைத்தையும் அழித்து வருகின்றன. முக்கிய தாக்குதல் களமாக தலைநகர் கியவ் உள்ளது," என்றார் அவர்.

    "கியவ் உட்பட ஓவ்வோர் நாளும் நாங்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நாங்கள் என்பதில் பிராந்திய பாதுகாப்பு, ஆயுதப்படைகள், தேசிய காவலர், தேசிய போலீஸ், பாதுகாப்பு சேவை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ புலனாய்வு இயக்குநரகம் ஆகியவை அடங்கும். நாச வேலையில் ஈடுபடும் நபர்களைக் கண்டுபிடிக்க வசதியாக நாங்கள் செல்பேசியில் சில குழுக்களை உருவாக்கி வருகிறோம். பகல் நேரத்தைப் பொறுத்து இதுபோன்ற 100 குழுக்கள் வரை கியவில் செயல்படுகின்றன. நகரத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் இப்போதும் கேட்கிறது. பலர் பிடிபட்டுள்ளனர், எங்கள் நிபுணர்கள் படையினருடன் வேலை செய்கிறார்கள்," என்கிறார் டெனிஸ்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, பெலாரூஸில் முடிவுக்கு வந்தது ரஷ்யா, யுக்ரேன் பேச்சுவார்த்தை - முடிவு எட்டப்படவில்லை

    ரஷ்யா - யுக்ரேன் இடையிலான சந்திப்பு பெலாரூஸில் நிறைவடைந்தது.

    ரஷ்யா மற்றும் யுக்ரேன் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த சந்திப்பில் இரு நாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து இனி வரும் நாட்களில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை தொடரும் முன்பாக, இரு தரப்பினரும் தத்தமது தாயகத்துக்குச் சென்று மீண்டும் கூட முடிவு செய்துள்ளதாக பெலாரூஸ் செய்தி நிறுவனமான பெல்டாவின் தகவலை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இன்றைய பேச்சுவார்த்தையின் விரிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் வெளிவரும் தகவல்களின்படி யுக்ரேன் தரப்பில் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது.

    இதற்கிடையே, யுக்ரேன் முழுவதும் உள்ள ரஷ்ய படைகள் யுக்ரேனிய தரப்பின் கடுமையான எதிர்வினையை சந்தித்து வருகின்றன.

    இதேவேளை, ரஷ்யா உலக நாடுகள் பலவற்றின் பொருளாதார தடைகளுக்கு ஆளாகி பெரிய அளவில் அந்த நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, புதினுடன் பேசிய எமானுவேல் மக்ரோங் - யுக்ரேன் மீதான தாக்குதல் நிறுத்த வேண்டுகோள்

    யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, விளாதிமிர் புதின் (ரஷ்ய அதிபர்), எமானுவேல் மக்ரோங் (பிரான்ஸ் அதிபர்)

    பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசி யுக்ரேன் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதே சமயம், ரஷ்யாவின் நலன்களை கவனத்தில் கொண்டால் மட்டுமே இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றும் புதின் அவரிடம் பேசியதாக தெரிய வருகிறது.

    இந்த இரு தலைவர்கள் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து பிரான்ஸ் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உடனடி போர் நிறுத்தத்தின் அவசியத்தை எமானுவேல் மக்ரோங் புதினிடம் வலியுறுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.

    “பொதுமக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு ரஷிய அதிபரிடம் அதிபர் மக்ரோன் கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்," என்று மக்ரோங் கேட்டுக் கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கோரிக்கையை பரிசீலிக்க புதின் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  12. விளாதிமிர் புதின் என்பவர் யார்? அதிபரான உளவாளியின் அரசியலும் அந்தரங்கமும்

    காணொளிக் குறிப்பு, யார் இந்த புதின்? அதிபரான உளவாளியின் அரசியலும் அந்தரங்கமும்
  13. ஆபரேஷன் கங்கா குறித்து ஆய்வு செய்ய பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டம்

    ஆபரேஷன் கங்கா

    யுக்ரேனில் உள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்கான ஆபரேஷன் கங்காவின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டம் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று நடைபெற்றது

    அந்த கூட்டத்தில், 24 மணி நேரமும் யுக்ரேனில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்துவர அரசாங்கம் செயல்படுவதாகவும், இதற்காக நான்கு மூத்த அமைச்சர்களை சிறப்புத் தூதர்களாகப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

    மேலும், யுக்ரேனுக்கான நிவாரணப் பொருட்கள், நாளை அனுப்பி வைக்கப்படும் என்றும் உலகம் ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் பொன்மொழிக்கு ஏற்றார்போல், யுக்ரேனில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியா உதவி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  14. “தமிழ்நாடு மக்கள் எழுப்பிய குரலை நாங்கள் மறக்க மாட்டோம்” - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா நெகிழ்ச்சி

    காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா
    படக்குறிப்பு, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா
  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஐ.நாவில் யுக்ரேன்: "அணு ஆயுதங்களை தயார்நிலையில் வைக்கும் புதினின் பைத்தியக்காரத்தன முடிவு"

    யுக்ரேன் ரஷ்யா மோதல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஐ.நா பொதுச்சபை சிறப்பு அமர்வில், ஐ.நா.வுக்கான யுக்ரேனிய பிரதிநிதி

    அணு ஆயுதங்களை தயார்நிலையில் வைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறுவது பைத்தியக்காரத்தனம் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் சிறப்பு அமர்வில் யுக்ரேன் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சிறப்பு அமர்வில் பேசிய ஐ.நாவுக்கான யுக்ரேனிய பிரதிநிதி செர்கே கிஸ்லிட்ஸ்காயா, இரண்டாம் உலகப் போரின் போது இருந்த அதே அபாயத்தில் இப்போது உலக பாதுகாப்பு இருப்பதாக கூறினார்.

    "ரஷ்யாவின் அணு ஆயுதங்களை புதின் உஷார் நிலையில் வைத்திருக்கிறார். இது என்னவொரு பைத்தியக்காரத்தனம்? அவர் தன்னைத்தானே கொல்ல விரும்பினால், அவருக்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை. முன்பு ஒரு மனிதர் ஜெர்மனியில் செய்ததை போலவே இவரும் செய்ய வேண்டும் என்கிறார்.

    இரண்டாம் உலக போரில் சோவியத் படைகள் பெர்லினுக்குள் நுழைந்த பிறகு, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் ஒரு பதுங்கு குழியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

    கிஸ்லிட்ஸ்காயா தனது உரையின் போது, ​​ஒரு ரஷ்ய தாய் மற்றும் அவரது சிப்பாய் மகனுக்கு இடையேயான உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.

    இந்த உரையாடலில், யுக்ரேனிய நகரங்களில் ரஷ்யா குண்டுகளை வீசுவதாகவும், சாதாரண மக்கள் கூட இலக்கு வைக்கப்படுவதாக அந்த ரஷ்ய வீரர் தனது தாயிடம் கூறுவதாக வரிகள் இடம்பெற்றுள்ளன.

    ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வசிலி நெபென்சியாவும் இந்த சிறப்பு அமர்வில் பேசினார். அப்போது அவர், "எட்டு ஆண்டுகளாக டான்பாஸில் யுக்ரேனிய தேசியவாதிகளின் குற்றங்களை நீங்கள் புறக்கணித்து வருகிறீர்கள். டான்பாஸ் மக்களுக்காக மீண்டும் உங்களிடம் இருந்து அனுதாப வார்த்தைகள் வரவில்லை" என்று கூறினார்.

    1956ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்படுவது இது 11வது முறையாகும்.

    இதன் மூலம், யுக்ரேனிய நெருக்கடி உலகுக்கு எவ்வளவு முக்கியமானது மற்றும் மிகப்பெரிய கவலை உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    இந்த அமர்வில், பொதுச் சபையின் செகரட்டரி ஜெனரலும் பேசவிருக்கிறார். அப்போது யுக்ரேனுடனான மோதலை நிறுத்துமாறு அவர் ரஷ்யாவை கேட்டுக் கொள்ளலாம்.

    அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது' என்று இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்படலாம்.

    ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அமர்வில் 100க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் பேசவுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. விவாதம் முடிந்த பிறகு சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும் வரைவு முன்மொழிவு மீது வாக்கெடுப்பு நடைபெறும்.

    இதற்கான முன்மொழிவு வரைவு தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அமர்வு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் வேண்டுகோளை ஏற்று அழைக்கப்பட்டுள்ளது.

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகளை ஏற்பதாக அறிவித்த சுவிட்சர்லாந்து, இமோஜென் ஃபோல்க்ஸ் பிபிசி செய்தி, ஜெனிவா

    ரஷ்யாவிற்கு எதிரான அனைத்து ஐரோப்பிய ஒன்றியத் தடைகளையும் சுவிட்சர்லாந்து ஏற்க உள்ளது.

    விதிவிலக்குகள் எதுவும் இல்லாமல் அனைத்தையும் அமல்படுத்துவோம் என அந்நாடு தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவின் ஐந்து தன்னலக்குழுக்கள் ஸ்விட்சர்லாந்திற்குள் நுழைவதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி விளாதிமிர் புதின் மற்றும் செர்கே லாவ்ரோஃப் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்டியலில் உள்ள 336 பேரின் வங்கிக் கணக்குகளும் உடனடியாக முடக்கப்படும்.

    சுவிஸ் வங்கிகளில் ரஷ்யாவின் பில்லியன் கணக்கான டாலர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

    சுவிஸ் வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது விமான நிறுவனங்களும் ரஷ்யாவுக்கான சேவையை ரத்து செய்துள்ளன.

    இது சுவிட்சர்லாந்தின் செயல்பாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. இந்த நாடு எப்போதும் நடுநிலையாக இருப்பது எது என பிறரால் விமர்சிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இன்று சுவிஸ் அதிபர் இக்னேஸியோ காசிஸ், "யுக்ரேன் மீதான தாக்குதல், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்," என்றும் ஆக்கிரமிப்பை முன்னிலைப்படுத்துவது நடுநிலையானது அல்ல". ஜெனிவா உடன்படிக்கைகள் "காலடியில் மிதிக்கப்படும்போது" அமைதியாக இருப்பதும் நடுநிலையானது அல்ல," என்று கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. "தமிழ்நாடு என் ரத்தம் கலந்த மண்" - ராகுலின் உணர்ச்சிமயத்துக்கு என்ன காரணம்?

    MK STALIN

    பட மூலாதாரம், MK STALIN

    படக்குறிப்பு, உங்களில் ஒருவன் என்ற தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள்

    "தமிழ்நாட்டில் என் ரத்தம் கலந்துள்ளது," என்று சென்னையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உணர்ச்சிமயமாகப் பேசினார்.

    மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்கால அனுபவங்களை விவரிக்கும் "உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, கேரள முதல்வர் பினராயி விஜயன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, நாட்டில் நமது மக்களின் குரல் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது என்றார்.

    • "யுக்ரேனை கடந்த பிறகே உயிர் வந்தது" - தாயகம் திரும்பிய தமிழக மாணவர்கள்

      யுக்ரேன்

      யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலையடுத்து யுக்ரேனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

      `வெடிகுண்டுகள் வெடிக்கத் தொடங்கியதும் ஊர் திரும்ப முடியுமா என்ற அச்சம் இருந்தது. இந்திய தூதரக அதிகாரிகள் உதவியால் ஊர் திரும்பியுள்ளேன்' என்கிறார், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஷகீர் அபுபக்கர். தாயகம் திரும்பிய மாணவர்களின் பிரத்தியேக பேட்டியை படிக்க இங்கே சொடுக்கவும்

    • 36 நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யா தடை

      யுக்ரேன் ரஷ்யா

      பட மூலாதாரம், Reuters

      படக்குறிப்பு, விளாதிமிர் புதின், ரஷ்ய அதிபர்

      உலக அளவில் 36 நாடுகளின் விமான சேவைகளை ரஷ்யா தடை விதித்துள்ளது.

      பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கனடா ஆகிய நாடுகளின் விமான சேவைகளை ரஷ்யாவின் தடை உத்தரவுக்கு இலக்காகியுள்ளன.

      யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் தங்களுடைய உறுப்பு நாடுகளின் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்தது.

      அது தொடர்பான அறிவிப்பு வெளிவந்த நிலையில், ரஷ்யாவும் தமது பங்குக்கு 36 நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.

      முன்னதாக, ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானங்கள் தமது நாட்டில் தரையிறங்க பிரிட்டன் தடை விதித்திருந்தது. இதற்கு பதிலடியாக, பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் ரஷ்யா தடை விதித்திருக்கிறது.

    • யுக்ரேனுக்கு ஆயுதம் அனுப்பும் ஐரோப்பிய ஒன்றியம் - இனி என்ன ஆகும்?

      YouTube பதிவை கடந்து செல்ல
      Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

      இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

      எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

      YouTube பதிவின் முடிவு