உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கருப்புக் கொடி காட்ட வந்க விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்கள் கார் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் பதற்றம் நீடிக்கிறது.
கார் மோதிய சம்பவத்தில் விவசாயிகள் நான்கு பேரும், பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பங்களை சந்திக்க பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் ஹர்கான் என்ற இடத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட முயன்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை வழிமறுத்து காவலில் எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, தன்னை காவலில் எடுக்க வாரன்ட் உள்ளதா என்று பிரியங்கா கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அவரை காவலில் எடுப்பதாகக் கூறிய காவல்துறையினர் சீதாபூர் அரசு விருந்தினர் மாளிகையில் அவரை தடுத்து வைத்துள்ளனர்.
அங்கு பெருமளவில் விவசாயிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் திரளும்படி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பிரியங்கா காந்திக்கு ஆதரவாக அவர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் அரசு விருந்தினர் மாளிகையில் தூய்மைப்படுத்தப்படாத அறையை துடைப்பத்தால் பிரியங்கா சுத்தப்படுத்தும் காட்சியையும் ஸ்ரீனிவாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல, லக்கிம்பூருக்கு புறப்பட தயாரான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் காவல்துறையினர் அவரது வீட்டிலேயே தடுத்து வைத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரிடம் காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 75 கிமீ தொலைவில் நேபாளத்தின் எல்லையில் உள்ள திகோனியா கிராமத்தில் இதுவரை எட்டு பேர் வன்முறை மற்றும் தீக்குளிப்பில் இறந்துள்ளனர். இவர்களில் நான்கு விவசாயிகள். மற்ற நான்கு பேரில், இரண்டு பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் ஓட்டுநர்கள். இவர்களைத் தவிர, 12 முதல் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இறந்த விவசாயிகள் தல்ஜித் சிங் (35), குர்வேந்திர சிங் (18), லவ்ப்ரீத் சிங் (20) மற்றும் நக்ஷத்ரா சிங் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திகோனியாவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சாதனா நியூஸ் சேனலின் உள்ளூர் நிருபர் ரத்தன் காஷ்யப்பும் செய்தி சேகரிப்பின்போது போது இறந்துவிட்டார். கார் பலமாக மோதியதால் அவர் சாலை ஓரத்தில் உள்ள தண்ணீரில் விழுந்தார்.