`ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சும் பேசுவது தி.மு.கவுக்கு கைவந்த கலையாக இருக்கிறது' என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
பெட்ரோலிய பொருள்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரும் விவகாரத்தில் தி.மு.கவின் நிலைப்பாட்டை இவ்வாறு அவர் சாடியுள்ளார்.
உ.பி மாநிலம் லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காத நிலையில், அவர் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ` கலால் வரி மற்றும் மேல் வரி விதிப்புகளில் செய்யப்பட்ட மாற்றத்தால் மத்திய அரசின் வருமானம் அதிகரித்த நிலையில், மாநிலங்கள் பெரும் அளவில் வருவாய் இழப்பை சந்திக்கின்றன.
இந்தநிலையில், ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது மாநிலங்களுக்கு மிகப் பெரிய வரி வருவாய் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அநீதியாகவும் அமையும். பெட்ரோல், டீசலுக்கான மேல் வரிகளை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்தால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த தங்களின் கருத்தை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
"மாநில சுயாட்சி, நீட் தேர்வு உள்பட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சும் பேசுவது தி.மு.கவுக்கு வாடிக்கையாக உள்ளது. அந்த வரிசையில் பெட்ரோலிய பொருள்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் அல்லது ஆயத்தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்றார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது" என்கிறார் ஓ.பி.எஸ்.மேலும், "ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்திலும், ` பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பெட்ரோலிய பொருள்களை சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலைப்பாடு மாறிவிட்டது. லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டிக்கான 45வது கவுன்சில் கூட்டத்தில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெட்ரோல், டீசலை சரக்குகள் மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் பரிசீலிக்கப்பட்டது. இதனை பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்ததால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.இதில், தி.மு.க சார்பில் நிதி அமைச்சர் பங்கேற்காவிட்டாலும், மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதாவது, ஜி.எஸ்.டியின்கீழ் பெட்ரோலிய பொருள்கள் வருவதை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய தி.மு.கவின் நிலைப்பாடாக இது உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதன் காரணம், எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதால்தான் என்ற ஐயம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு பெட்ரோலிய பொருள்களை சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் கொண்டு வந்து தேர்தலுக்கு முந்தைய தி.மு.கவின் நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார் ஓ.பி.எஸ்.