தமிழ்நாட்டில் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் இன்று தொடங்கியது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆற்றிய உரையில், ஆளும் திமுக அரசின் நோக்கம், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அதன் முக்கிய அம்சங்கள்:
வளர்ச்சிக்காக ஒன்றிய அரசுடன் ஆதரவு
இந்த அரசு, தமக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்த பாரபட்சமும் இன்றி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக எப்போதும் செயல்படும்.
இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும். அதே நேரத்தில், ‘உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப, நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக, ஒன்றிய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும்.
தடுப்பூசி, மருத்துவ கொள்முதலுக்கு நிதி
ஒன்றிய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதியுதவி பல்வேறு தரப்பிலிருந்து குவிந்துள்ளது. இத்தொகையில், 141.10 கோடி ரூபாயை உடனடியாகவும், வெளிப்படையாகவும் உயிர்காக்கும் மருந்துகளையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக 50 கோடி ரூபாயும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.
கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், அதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். அதற்கேற்ப, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது உள்ளிட்ட, மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிங் மருத்துவமனை வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
மாநிலத்திலுள்ள பல அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் சேமிப்பும் உற்பத்தித் திறனும் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. திரவ மருத்துவ ஆக்சிஜனையும், அது தொடர்புடைய கருவிகளையும் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு, தனியார் முதலீட்டாளர்களுக்கு சிறப்புத் தொகுப்புச் சலுகைகளை இந்த அரசு வழங்குகிறது.
மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, தேசிய அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்தது, அனைவருக்கும் இலவசமாக வழங்கும் கொள்கையை மீண்டும் ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசின் முடிவை இந்த அரசு வரவேற்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்காக போதிய அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுமாறு இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழி இணை-அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 343 இல் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசை வலியுறுத்தும்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு புத்துயிர்
சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். இந்த நிறுவனத்தை வேறு எந்தப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்காமல், அதன் தன்னாட்சி நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை
ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும் இந்த அரசு ஒன்றிய அரசை வற்புறுத்தும்.
தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதே இந்த அரசின் முன்னுரிமை ஆகும். மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதான புகார்களையும் விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு புத்துயிரும் உரிய அதிகாரமும் அளிக்கப்படும்.
முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு
ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புப்பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு, நிலுவையிலுள்ள புகார்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும்.
‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும்.
விவசாயிகள் நலனுக்கு புதிய சட்டம்
நீர்வளங்களுக்கென ஒரு தனி அமைச்சகம் இந்த அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு கேரள அரசையும், ஒன்றிய அரசையும் இந்த அரசு கேட்டுக்கொள்ளும்.
திருச்சி-கரூர் இடையே மாயனூரில் காவிரி நதியின் குறுக்கே கட்டளை கதவணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடித்திட இந்த அரசு உறுதியாக உள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீடிந, இடைமலையாறு அணை கட்டுமானத்தை கேரள அரசு நிறைவு செய்துள்ளதையடுத்து, அதன் தொடர்ச்சியாக, ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடன் இந்த அரசு பேச்சுவார்த்தையை தொடங்கும்.
கச்சத்தீவை மீட்க கோரிக்கை
கச்சத்தீவை மீட்க கோரிக்கை
கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட, நமது மீனவர் சமூகத்தின் நலன்களை இந்த அரசு பாதுகாக்கும்.
இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும். கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக, மீனவர்கள் நலனிற்கான தேசிய ஆணையத்தை அமைக்குமாறு ஒன்றிய அரசிடம் இந்த அரசு கோரும்.
சமூகநிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய, நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களது தலைமையில் ஒரு குழுவை இந்த அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைப் பெற்று, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, அத்தகைய சட்டங்களுக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற, உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.
சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும், சென்னை பெங்களூரு தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.
சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்தைப் பாதுகாத்திடவும் இந்த அரசு எப்போது ம் பாடுபடும். 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, காலத்தை வென்று, சமூகநீதியை உறுதி செய்துள்ளது.
இந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீதஇடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். சென்னையில் மாநகரக் கட்டமைப்பை நவீன சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திடும் வகையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களை நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை நீக்கவும், அவை நீக்கப்படும் வரையில், தற்போதைய வருமான வரம்பினை 8 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தவும், இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும்.
வெவ்வேறு சமூகங்களின் பின்தங்கிய நிலையை நிர்ணயிப்பதில், மாநில அரசின் அதிகாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் இந்த அரசு உறுதி செய்யும்.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற மாபெரும் சமூகநீதித் தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும். ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும். அனைத்து மக்களும் சேர்ந்து ‘எமது அரசு’ என்று பெருமையோடு நெஞ்சு நிறைந்து சொல்லும் வகையில் இந்த அரசு தனது பயணத்தைத் தொடரும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.