கொரோனா தோன்றிய விவகாரம்: அமெரிக்காவை சாடும் சீன வெளியுறவுத்துறை

கொரோனா வைரஸ் தோன்றிய விவகாரத்தில் முதலில் தமது நாட்டில் பதிவான வைரஸ் மாதிரிகளின் கண்டுபிடிப்புகள் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது சீன வெளியுறவுத்துறை.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இத்துடன் இன்றைய நேரலை பக்கம் நிறைவு பெறுகிறது. நாளை (ஜூன் 22, 2021) காலை தொடங்கப்படும் புதிய நேரலை பக்கத்தில் உள்ளூர் முதல் உலகம் வரை பல்வேறு செய்திகளையும் தெரிந்துகொள்ளலாம். செய்திகளை துல்லியமாக, புதிய கண்ணோட்டத்துடன் விரைவாக தெரிந்துகொள்வதற்கு பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.

  2. கொரோனா தோன்றிய விவகாரம்: அமெரிக்காவை சாடும் சீன வெளியுறவுத்துறை

    CHINA FORIEGN AFFAIRS

    பட மூலாதாரம், Lijian Zhao

    கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் தோன்றியது என்ற விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டும் முன்பு முதலில் தமது நாட்டில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பெய்ஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியாங், "2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 முதல் 16ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குறைந்தபட்சம் 39 மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்வினையாற்றும் ஆன்டிபாடிக்கள் கண்டறியப்பட்டது," என்று தெரிவித்தார்.

    ஆரம்ப காலத்தில் தோன்றிய இந்த வைரஸ் குறித்து அமெரிக்கா வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    அமெரிக்காவில் கொரோனா வைரஸை கையாளும் நடவடிக்கையில் மிகவும் மோசமாக செயல்பட்டதற்கு யாரை பொறுப்புடைமையாக்குவது? உலகிலேயே அதிமேம்பட்ட மருத்துவ வசதிகளையும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ள ஒரு நாட்டில் 30 மில்லியன் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள் என்று ட்செள லிஜியாங் கூறினார்.

    கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்த அறிக்கையை 90 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். வைரஸ் தோற்றம் தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கும் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐக்கும் இடையே நிலவும் முரண்பட்ட நிலைப்பாட்டைத் தொடர்ந்து இந்த உத்தரவை ஜோ பைடன் பிறப்பித்தார்.

  3. கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு கோரியவழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

    CORONA

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் மற்றும் மியூகோர்மைகோசிஸ் உள்ளிட்ட கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய பிரச்னைகளால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    இது தொடர்பாக வழக்கறிஞர்கள் கெளரவ் குமார் பன்சால், ரீபக் கன்சால் ஆகியோர், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12ஆவது பிரிவில், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, நிவாரணம் போன்றவற்றைத் தர தகுதி பெறும் குறைந்தபட்ச தகுதிக்கான வழிகாட்டுதல்களை பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு தர அரசிடம் போதிய நிதி வளம் இல்லை என்றும் அப்படி வழங்க நேரிட்டால் மாநில பேரிடர் நிவாரண நிதியத்திடம் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் இந்த நோக்கத்துக்காகவே செலவிடும் நிலை எழலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இழப்பீடு வழங்க பரிந்துரைக்கும் விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது தேசிய ஆணைமாக இருக்க வேண்டும். அந்த ஆணையத்துக்கே இழப்பீடு பெற தகுதி உடையவர்கள் யார் என்பதை வரையறுத்து எவ்வளவு இழப்பீடு வழங்கலாம் போன்ற அதிகாரம் உள்ளது.

    இதை பல்வேறு தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து, அரசியலமைப்பின்படி நிறைவேற்ற வேண்டிய கடமைகளில், நிதிப் பிரச்னைகளை கூறி மத்திய அரசு ஒதுங்கிக் கொள்ளக்கூடாது என்று வழக்கறிஞர் எஸ்.பி. உபாத்யாய் வாதிட்டார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அல்லது உதவித்திட்டங்கள், கொரோனாவால் இறக்கும் சடலங்களை கையாளும் மயான ஊழியர்களுக்கும் தரப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் உபாத்யாய் வாதிட்டார்.

    இதையடுத்து இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 10 அல்லது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை என பெருந்தொற்று ஏற்படும் காலகட்டத்தில் எழும் சூழல்களை எதிர்கொள்ள காப்பீடு திட்டமே சரியானதாக இருக்கும் என்று கூறினார்.

    மத்திய நிதி ஆணையமும் இதையே வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார். நிதி ஆணையத்தின் பரிந்துரைகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மீறக்கூடியதாக இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

    இதையடுத்து, நிதி ஆணைய பரிந்துரைகளும், பேரிடர் மேலாண்மை ஆணைய சட்டத்தின் 12ஆவது பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களும் வெவ்வேறானவை என்பதை விவரிக்க முடியா என்று நீதிபதி ஷா கேள்வி எழுப்பினார்.

    இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் சுமீர் சோதி, பிகார் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு தரப்படுகிறது. ஆனால், வேறு சில மாநிலங்கள் ரூ. 1 லட்சத்தை இழப்பீடாக தருகின்றன. இந்த விவகாரத்தில் எல்லா மாநில அரசுகளும் சீராக இழப்பீட்டை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    பின்னர் கொரோனாவால் இறப்பவர்களின் மரணச்சான்றிதழில் கொரோனா இறப்பு என்று கூறப்படாமல் விடுபடுவது குறித்தும் வழக்கறிஞர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து நீதிபதிகள், அத்தகைய சான்றிதழ்களில் திருத்தம் செய்து வழங்க முடியுமா என்று மத்திய அரசிடம் கேட்டனர்.

    இந்த விவகாரத்தை அரசு பரிசீலிக்கும் என்று இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனர்ல துஷார் மேத்தா கூறினார். அனைவரது வாதங்கள் மற்றும் பதில்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

  4. ஒலிம்பிக்கில் முதன்முறையாக திருநங்கை போட்டியாளர்

    ஒலிம்பிக்கில் முதன்முறையாக திருநங்கை போட்டியாளர்

    பட மூலாதாரம், REUTERS

    ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் கலந்து கொள்கிறார். லாரெல் ஹப்பார்ட் என்னும் அந்த தடகள வீர்ர் நியூசிலாந்து பெண்கள் அணியில் விளையாடவுள்ளார்.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2015ஆம் ஆண்டு திருநங்கை தடகள வீரர்களுக்கு, டெஸ்டோஸ்டெரோன் குறிப்பிட்ட அளவில் இருந்தால் அவர்கள் பெண்கள் அணியில் விளையாடலாம் என விதிகளை மாற்றியிருந்தது.

    ஹப்பர்ட் இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு ஆண்கள் அணியில் இருந்தார்.

    திருநங்கை ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது குறித்து பாராட்டுகள் ஒரு பக்கமும், அவருக்கு கூடுதல் நன்மை உள்ளது என வாதங்கள் ஒரு பக்கம் வர தொடங்கியுள்ளது. உள்ளனர்.

    43 வயது ஹப்பர்ட், பளு தூக்கும் போட்டியில் 87 எடைப்பிரிவில் கலந்து கொள்ளவுள்ளார்.

  5. தமிழக ஆளுநர் உரை ஏமாற்றம் தருகிறது: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

    EDAPPADI

    பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளில் குறிப்பிட்ட எதையும் நிறைவேற்றும் அறிவிப்புகள் ஆளும் அரசின் திட்டங்களை விவரித்த ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்பதால் அது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

    ஆளுநர் உரை முடிவில் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் முன்பு அறிவித்திருந்தார். ஆனால், நடைமுறையில் யதார்த்தத்தை மீறி அவர் செயல்பட்டுள்ளார்," என்று கூறினார்.

    விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என அதிமுக ஆட்சியில் இருந்தபோது அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 44 நாட்கள் கடந்த பிறகு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

    மழைக்காலம் வரும் நிலையில், விவசாயிகளுக்கு புதிய பயிர்க்கடன் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதவும் தெளிவாக்கப்படவில்லை. மாணவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிடம் வாங்கிய கடன் போன்றவை ரத்து செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், அதற்கான நடவடிக்கையை திமுக அரசு செய்யவில்லை. இது போல தேர்தலுக்கு முன்பு அறிவித்த பல்வேறு அறிவிப்புகளை செயல்படுத்துவது பற்றிய தமது நிலையை திமுக அரசு தெளிவுபடுத்தவில்லை. எனவே, இந்த ஆளுநர் உரை ஏமாற்றம் தருகிறது என்று பழனிசாமி குறிப்பிட்டார்.

    பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். பரப்புரையில் பேசினார்கள். ஆனால், அது பற்றியும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால், அதற்கு காரணம் கொரோனா பாசிட்டிவ் தான் என்பதை சான்றிதழில் தெரிவிக்க அரசு மறுக்கிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அதற்கான சான்றிதழ் இல்லாததால் கொரோனா இழப்பீடு பெற முடியாதவர்களாக உள்ளனர். இது தவிர கொரோனா மருத்துவ பரிசோதனைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

  6. நீட் தேர்வு பாதிப்பை தடுக்க சட்டம்: தமிழக ஆளுநர் உரை முக்கிய அம்சங்கள், நீட் தேர்வு பாதிப்பை தடுக்க சட்டம், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை - தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

    TAMIL NADU

    பட மூலாதாரம், TN GOVT

    தமிழ்நாட்டில் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் இன்று தொடங்கியது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆற்றிய உரையில், ஆளும் திமுக அரசின் நோக்கம், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அதன் முக்கிய அம்சங்கள்:

    வளர்ச்சிக்காக ஒன்றிய அரசுடன் ஆதரவு

    இந்த அரசு, தமக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்த பாரபட்சமும் இன்றி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக எப்போதும் செயல்படும். இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும். அதே நேரத்தில், ‘உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப, நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக, ஒன்றிய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும்.

    தடுப்பூசி, மருத்துவ கொள்முதலுக்கு நிதி

    ஒன்றிய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதியுதவி பல்வேறு தரப்பிலிருந்து குவிந்துள்ளது. இத்தொகையில், 141.10 கோடி ரூபாயை உடனடியாகவும், வெளிப்படையாகவும் உயிர்காக்கும் மருந்துகளையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக 50 கோடி ரூபாயும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

    மூன்றாம் அலை எச்சரிக்கை

    கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், அதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். அதற்கேற்ப, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

    11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது உள்ளிட்ட, மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிங் மருத்துவமனை வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

    மாநிலத்திலுள்ள பல அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் சேமிப்பும் உற்பத்தித் திறனும் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. திரவ மருத்துவ ஆக்சிஜனையும், அது தொடர்புடைய கருவிகளையும் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு, தனியார் முதலீட்டாளர்களுக்கு சிறப்புத் தொகுப்புச் சலுகைகளை இந்த அரசு வழங்குகிறது.

    மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, தேசிய அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்தது, அனைவருக்கும் இலவசமாக வழங்கும் கொள்கையை மீண்டும் ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசின் முடிவை இந்த அரசு வரவேற்கிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்காக போதிய அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுமாறு இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழி இணை-அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 343 இல் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசை வலியுறுத்தும்.

    செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு புத்துயிர்

    சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். இந்த நிறுவனத்தை வேறு எந்தப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்காமல், அதன் தன்னாட்சி நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.

    இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

    ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும் இந்த அரசு ஒன்றிய அரசை வற்புறுத்தும்.

    தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதே இந்த அரசின் முன்னுரிமை ஆகும். மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதான புகார்களையும் விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு புத்துயிரும் உரிய அதிகாரமும் அளிக்கப்படும்.

    முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு

    ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புப்பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு, நிலுவையிலுள்ள புகார்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும். ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும்.

    விவசாயிகள் நலனுக்கு புதிய சட்டம்

    நீர்வளங்களுக்கென ஒரு தனி அமைச்சகம் இந்த அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

    நீர்ப்பங்கீடு பிரச்னைகள்

    முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு கேரள அரசையும், ஒன்றிய அரசையும் இந்த அரசு கேட்டுக்கொள்ளும்.

    திருச்சி-கரூர் இடையே மாயனூரில் காவிரி நதியின் குறுக்கே கட்டளை கதவணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

    அத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடித்திட இந்த அரசு உறுதியாக உள்ளது.

    பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீடிந, இடைமலையாறு அணை கட்டுமானத்தை கேரள அரசு நிறைவு செய்துள்ளதையடுத்து, அதன் தொடர்ச்சியாக, ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடன் இந்த அரசு பேச்சுவார்த்தையை தொடங்கும்.

    கச்சத்தீவை மீட்க கோரிக்கை

    கச்சத்தீவை மீட்க கோரிக்கை கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட, நமது மீனவர் சமூகத்தின் நலன்களை இந்த அரசு பாதுகாக்கும்.

    இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும். கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக, மீனவர்கள் நலனிற்கான தேசிய ஆணையத்தை அமைக்குமாறு ஒன்றிய அரசிடம் இந்த அரசு கோரும்.

    சமூகநிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய, நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களது தலைமையில் ஒரு குழுவை இந்த அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைப் பெற்று, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, அத்தகைய சட்டங்களுக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற, உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.

    சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும், சென்னை பெங்களூரு தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.

    சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்தைப் பாதுகாத்திடவும் இந்த அரசு எப்போது ம் பாடுபடும். 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, காலத்தை வென்று, சமூகநீதியை உறுதி செய்துள்ளது.

    இந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீதஇடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். சென்னையில் மாநகரக் கட்டமைப்பை நவீன சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திடும் வகையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

    ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களை நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை நீக்கவும், அவை நீக்கப்படும் வரையில், தற்போதைய வருமான வரம்பினை 8 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தவும், இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும்.

    வெவ்வேறு சமூகங்களின் பின்தங்கிய நிலையை நிர்ணயிப்பதில், மாநில அரசின் அதிகாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் இந்த அரசு உறுதி செய்யும்.

    ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற மாபெரும் சமூகநீதித் தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும். ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும். அனைத்து மக்களும் சேர்ந்து ‘எமது அரசு’ என்று பெருமையோடு நெஞ்சு நிறைந்து சொல்லும் வகையில் இந்த அரசு தனது பயணத்தைத் தொடரும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7. சர்வதேச யோகா தினம்: கட்டுப்பாடுகளுடன் நடந்த நிகழ்ச்சிகள்

    சர்வதேச யோகா தினத்தின் ஏழாம் ஆண்டு நிகழ்ச்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டன. இதையொட்டி நடைபெற்ற யோகா கலை பயிற்சி நிகழ்ச்சிகள் சமூக இடைவெளி, கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டன.

    கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு, பொது முடக்க கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதால், பல இடங்களில் வழக்கமாக பிரமாண்டமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, இம்முறை கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.

  8. சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: இருவர் உயிரிழப்பு

    சிவகாசிக்கு அருகில் தாயில்பட்டி என்னும் ஊரில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

    மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. சீனாவில் 100 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து

    china

    பட மூலாதாரம், Getty Images

    சீனாவில் 100கோடிக்கும் அதிகாமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு.

    சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய பிறகு தடுப்பு மருந்து செலுத்தும் பணி மெதுவாக தொடங்கியது.

    இருப்பினும் இலவசமாக முட்டைகளை வழங்குவது, டெல்டா திரிபு பரவும் ஆபத்து ஆகியவற்றால் தடுப்பு மருந்து செலுத்தி கொள்வது வேகம் அடைந்தது.

    சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாகும் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளை வழங்குவதை இலக்காக வைத்துள்ளனர் சீன அதிகாரிகள்.

  10. “அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் இரான் குறித்து விழித்து கொள்ள வேண்டும்”

    பென்னட்

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் இரான் குறித்து“விழித்து கொள்ள வேண்டும்”என இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

    இரானின் அணு திட்டத்தை மாற்றியமைக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    நஃப்டலி பென்னட், ‘இரானின் கொடூரமாக தூக்கிலும் ஒருவரின் ஆட்சி’ அதிக அணுஆயுதங்களை விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

    இந்த குற்றச்சாட்டை இரான் மறுக்கிறது.

    இரான் அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து டிரம்பின் ஆட்சியின்போது அமெரிக்கா வெளியேறியது. எனினும் அந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து வருவதாக ராஜீய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் மேலும் சில தீர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் அதில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

    இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் எதிர்க்கிறது.

    பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும்,ஊழலை ஒழிக்கவும் தம்மால் முடியும் என்று வாதிட்டு இரானின் அதிபர் தேர்தலை சந்தித்த இப்ராஹிம் ரையீசி வெற்றிப் பெற்றதாக சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.

  11. பிபிசி நேயர்களுக்கு வணக்கம்

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலக அளவிலான செய்திகளை இந்தப் பக்கத்தில் நேரலையாக வழங்குகிறோம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.