அமெரிக்க அதிபர்
தேர்தல் முடிந்து மூன்று நாட்கள் ஆகியும்கூட இன்னும் முடிவுகள் தெரியவரவில்லை. ஒருவிதமான
குழப்பமான நிலையே நீடித்து வருகிறது.
பல மாகாணங்களில் வாக்குகள்
இன்னும் எண்ணப்பட்டு வருகின்றன. பல இடங்களில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
முன்னிலை விவரங்கள் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன.
வெற்றியை
தீர்மானிக்கும் சில முக்கிய மாகாணங்களில் இவர்தான் வெற்றியாளர் என தற்போதே
கணிப்பது கடினம். ஒரு சில இடங்களில் ஜோ பைடனுக்கும் டொனால்டு டிரம்புக்கும் இடையே
கடுமையான போட்டி நிலவுகிறது.
தற்போது பலரின் கவனமும்
பென்சில்வேனிய, ஜோர்ஜா, அரிசோனா மற்றும் நெவாடா ஆகிய மாகாணங்கள் மீதுதான்
இருக்கின்றன.
செய்தியாளர்களின் எந்த
கேள்விக்கும் பதில் அளிக்காத அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக
மீண்டும் எந்த ஆதாரமும் இன்றி பேசி வருகிறார். வாக்காளர் மோசடியால் தாம்
பாதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
அதிக அளவில் பதிவான
அஞ்சல் வாக்குகள் பெரும்பாலும் ஜோ பைடனுக்கு சாதகமாக அமைந்துள்ளன.
தேர்தல் நாளன்று
வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று டிரம்ப் தனது
ஆதரவாளர்களை வலியுறுத்தினார். அதுவே பைடனோ, கொரோனா தொற்று காரணமாக அஞ்சல் வழியாக
வாக்குகளை செலுத்துமாறு தனது ஆதரவாளர்களை வலியுறுத்தி இருந்தார்.
இதுவே, அஞ்சல்
வாக்குகள் பைடனுக்கு சாதகமாக இருக்க காரணமாக அமைந்திருக்கலாம் என டிரம்ப் இதுவரை
ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில், தேர்தல்
தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக மிரட்டல் விடுத்திருக்கிறார் டிரம்ப்.
இதுவே பைடன் செய்துள்ள
ட்வீட்டில் தனது பிரசாரம், “வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய தேர்தல்
பாதுகாப்பு முயற்சி” என பதிவிட்டுள்ளார். அதோடு, முழுமையான முடிவுகள் தெரியவரும்
வரை மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இன்னும் இறுதி
முடிவுகள் எப்போது வரும் என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால், எலக்டோரல் குழு
வாக்குகள் வைத்து பார்த்தால், டொனால்ட் டிரம்பின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே
இருக்கிறது.
ஒரு வேலை சட்ட
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றம் சென்றால், முடிவுகள் தெரிய பல வாரங்கள்
ஆகலாம் என்கின்ற பதற்ற நிலையே அங்கு காணப்படுகிறது.