அமெரிக்க தேர்தல்: பென்சில்வேனியாவில் பைடன் முன்னிலை, ஜோர்ஜாவில் மறு எண்ணிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்றான ஜோர்ஜாவில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த அதிபர் டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நெவாடாவிலும் பைடன் முன்னிலை அதிகரிப்பு

    இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத, இன்னும் வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கிற சில மாநிலங்களில் நெவாடாவும் ஒன்று.

    இங்கு தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனே முன்னிலை பெற்று வந்தாலும், டிரம்புக்கும் அவருக்குமான இடைவெளி மிக சன்னமாகவே இருந்துவந்தது.

    ஆனால், தற்போது பைடனின் முன்னிலை அதிகரித்து வலுப்பெற்றுள்ளது.

    சமீபத்தில் வெளியான தரவுகளின்படி நெவாடாவில் பைடன் டிரம்பைவிட 22,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    91 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன.

    மொத்த வாக்குகளில் 76 சதவீதம் இந்த மாநிலத்தில் அஞ்சல் வழியாகவே போடப்பட்டன.

    வாக்காளர்கள் அனைவருக்கும் அஞ்சல் வாக்குச்சீட்டுகளை அனுப்பிவைத்த சில மாநிலங்களில் நெவாடாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி அனைவருக்கும் வாக்குச்சீட்டுகளை அனுப்பிவைக்கும் முறையால் முறைகேடுகள் நடக்கும் என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

    ஆனால், இப்படி முறைகேடுகள் எங்கும் நடந்ததாக ஆதாரம் ஏதும் இல்லை.

    clash between trump and biden supporters

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே பைடன் ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள்.
  2. பென்சில்வேனியா, பைடன் முன்னிலை அதிகரிப்பு

    பென்சில்வேனியா மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெற்ற முன்னிலை தற்போது மேலும் வலுவடைந்துள்ளது.

    20 தேர்தல் சபை வாக்குகளைக் கொண்டுள்ள இந்த மாநிலத்தில் பைடன் வெற்றி பெற்றால், அவர் முன்னிலையில் உள்ள மற்ற மாநிலங்களின் முடிவுகளைப் பற்றி கவலைப்படாமலே அவர் அதிபர் ஆவதற்குத் தேவையான 270 தேர்தல் சபை உறுப்பினர்கள் என்ற எல்லைக் கோட்டை அவர் தொட்டுவிட முடியும்.

    இந்நிலையில், பென்சில்வேனியாவில் அவர் பெற்றிருந்த 5,587 வாக்குகள் என்ற முன்னிலை ஒரு மணி நேரத்தில், 6,817 ஆக அதிகரித்துள்ளது.

    பிளடெல்ஃபியாவில் உள்ள தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து அஞ்சல் வாக்குகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

  3. ஜோர்ஜாவில் மறுவாக்கு எண்ணிக்கை

    அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த மாகாணங்களில் ஒன்றாக கருதப்படும் ஜோர்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அந்த மாகாண அரசு அறிவித்துள்ளது.

    இன்னும் 4,169 வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ள நிலையில், சுமார் 8,000 ராணுவ வீரர்களின் தபால் வாக்குகள் இன்னும் வர வேண்டியுள்ளதாகவும், ஆனால் இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) வரும் தபால் வாக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஜோர்ஜியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் பிராட் ரஃபென்ஸ்பெர்கர், “ஜோர்ஜியாவில் நடந்த வாக்குப்பதிவு முடிவு குறித்த ஆர்வம் எல்லைகளை கடந்து நிலவுகிறது. இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக உள்ளதால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

    வாக்குப்பதிவில் எவ்வித விதிமீறலும் இல்லையென்றாலும், வேட்பாளர்களுக்கு இடையிலான நெருக்கமான போட்டியின் காரணமாக மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  4. தேர்தல் இன்னும் முடியவில்லை: டிரம்ப் பிரசாரக் குழு

    பென்சில்வேனியாவிலும், ஜோர்ஜாவிலும் பைடன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 'தேர்தல் இன்னும் முடியவில்லை' என்று அறிக்கை விட்டுள்ளது டிரம்ப் பிரசார நிர்வாகம்.

    தேர்தல் நாள் இரவில் மில்லியன் கணக்கான வாக்குகள் எண்ணப்படாமல் இருந்த நிலையில், உள்ளூர் நேரப்படி இரவு 2.30க்கு தாம் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துக்கொண்டார் அதிபர் டொனால்டு டிரம்ப்.

    ஆதாரம் ஏதும் இல்லாமலேயே வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    ஆனால், தற்போது தேர்தல் முடிவினைத் தீர்மானிக்கும் நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடியும் தருவாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பென்சில்வேனியா, ஜார்ஜியா உள்ளிட்ட இந்த நான்கு மாநிலங்களிலும் பைடனே முன்னிலை வகிக்கிறார்.

    "இந்நிலையில் இன்னும் இறுதி முடிவுக்கு நீண்டதூரம் இருக்கிற நான்கு மாநில முடிவுகளை அடிப்படையாக கொண்டு பைடன் வெற்றி முன்மொழியப்படுகிறது" என்று டிரம்ப் பிரசாரக் குழு வழக்குரைஞர் மேட் மோர்கன் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

  5. பென்சில்வேனியா ஏன் பைடனுக்கு மிக முக்கியம்?

    தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநிலங்களில் அரிசோனா, ஜோர்ஜா, நெவாடா போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே பைடன் முன்னிலை பெற்று நடைபோட்டுக்கொண்டிருந்தாலும், பென்சில்வேனியாவில் அவர் பெற்றிருக்கிற முன்னிலை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?பென்சில்வேனியாவில் அவர் வெற்றி பெற்றால் இங்குள்ள 20 தேர்தல் சபை வாக்குகளைப் பெறுவார். அதன் மூலம் அவரது தேர்தல் சபை வாக்குகள் எண்ணிக்கை 273 ஆகும். இதன் மூலம் பிற மாநிலங்களின் முடிவுகளைப் பற்றி கவலையில்லாமல் அவர் அதிபர் ஆவதற்குத் தேவையான 270 இலக்கைக் கடந்துவிடுவார்.

    ஒரு கட்டத்தில் ட்ரம்ப் லட்சக்கணக்கில் இந்த மாநிலத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அஞ்சல் வாக்குகளை எண்ணுவது தொடங்கியபின் தொடர்ந்து பைடன் அதிக வாக்குகளைப் பெற்று, ட்ரம்பின் முன்னிலையைக் குறைத்துக்கொண்டே வந்தார். தற்போது ட்ரம்பை பின்னுக்கும் தள்ளிவிட்டார்.

    இந்த முன்னிலையை அவர் தொடர்ந்து தக்கவைத்தால், பைடன் அதிபர்தான்.

  6. பென்சில்வேனியாவிலும் பைடன் முன்னிலை பெற்றார்

    ஜோர்ஜா மாநிலத்தைத் தொடர்ந்து பென்சில்வேனியாவிலும் அதிபர் ட்ரம்பை பின்னுக்குத் தள்ளி பைடன் முன்னிலை பெற்றிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுவரை அந்த மாநிலத்தில் முன்னிலையில் இருந்துவந்த அதிபர் ட்ரம்பைவிட தற்போது 5,587 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் பைடன்.

    இதுவரை 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

    பென்சில்வேனியா 20 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள மாநிலம் என்பதால் இங்கு பைடன் வென்றால் உடனடியாக அவர் அதிபர் ஆவதற்குத் தேவையான முன்னிலை வந்துவிடும்.

    அமெரிக்காவைப் பொறுத்தவரை, அங்கே ஒரு மாநிலத்தில் ஒரு அதிபர் வேட்பாளர் அதிக வாக்குகள் வென்றால், அந்த மாநிலத்துக்குரிய அனைத்து தேர்தல் சபை வாக்குகளும் அவருக்கு சென்று சேர்ந்துவிடும். இரண்டு மாநிலங்கள் மட்டுமே தங்கள் தேர்தல் சபை வாக்குகளை வென்ற வாக்குகளுக்கு ஏற்றபடி பிரித்து வழங்கும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. அமெரிக்க மாநில சட்டமன்றத்துக்கு 18 வயதில் தேர்வானவர்

    அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான நியூ ஹாம்ஷயரின் சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் தேர்வாகியிருக்கிறார் 18 வயது இளைஞர் ஒருவர்

    லாபிராஞ்சே என்ற அவர், அம்ஹெர்ஸ்ட் என்ற பகுதியின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலேயே மிகவும் வயது குறைந்தவர் இவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் நடக்கும் இழுபறிகளுக்கு மத்தியில் இந்த செய்தி கவனத்தை கவர்ந்துள்ளது.

  8. ஜோர்ஜா பைடன் முன்னிலையில் சிறிது முன்னேற்றம்

    மூன்று நாள்களாக காத்திருப்பில் வைத்திருக்கும் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளில் முக்கியமான ஒரு முன்னேற்றமாக 16 தேர்தல் சபை வாக்குகளை வைத்திருக்கும் ஜோர்ஜா மாநிலத்தில் இதுவரை முன்னிலையில் இருந்து வந்த அதிபர் டொனால்டு டிரம்பை பின்னுக்குத் தள்ளி ஜோ பைடன் முன்னிலை பெற்றார்.

    சுமார் கடைசி ஒரு சதவீத வாக்குகளே அந்த மாநிலத்தில் எண்ணாமல் மிச்சமிருக்கும் நிலையில் பைடன் பெற்ற முன்னிலை முதலில் வெறும் 917 வாக்குகள் என்றிருந்தது.

    இந்த முன்னிலை நிலவரம் தற்போது சற்று அதிகரித்து ட்ரம்பை விட பைடன் தற்போது 1096 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    ஏன் இவ்வளவு நெருக்கமாக இந்த ஒரு மாநிலம் கூர்ந்து நோக்கப்படவேண்டும் என்கிறீர்களா?

    முடிவுகள் தெரியாமல் மிச்சமிருக்கும் சில மாநிலங்களில் முடிவை எட்டும் நெருக்கத்தில் உள்ளது ஜோர்ஜா. ஒரு வேளை ஜோர்ஜாவில் பைடன் பெற்ற முன்னிலை உறுதிப்பட்டு, அவர் வெற்றி பெற்றுவிட்டால், அதிபர் தேர்தல் வெற்றிக்கு அவர் மிகவும் நெருக்கமாக இருப்பார்.

    கிட்டத்தட்ட ட்ரம்பின் வெற்றிவாய்ப்பு அரிய ஒன்றாகிவிடும். அதனால்தான் ஜோர்ஜா நிலவரம் கூர்ந்து பார்க்கப்படுகிறது.

  9. ஜோர்ஜாவில் முன்னிலை வகிக்கும் ஜோ பைடன்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னும் முடிவு தெரியவராத முக்கியமான மாகாணங்களில் ஒன்றான ஜோர்ஜாவில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முதல் முறையாக முன்னிலை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

    அந்த மாகாணத்தில் இதுவரை 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், டொனால்டு டிரம்பை விட 0.02 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று ஜோ பைடன் 49.39 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாகாணத்தில் மொத்தம் 16 தேர்தல் சபை (எலக்டோரல் காலேஜ்) வாக்குகள் உள்ளன.

  10. டிரம்பின் இறங்குமுகம் வலதுசாரி அரசியலின் முடிவா?

    டொனால்ட் டிரம்ப்

    பட மூலாதாரம், SAUL LOEB

    அமெரிக்க தேர்தலைப் பொறுத்தவரை, கடந்த பல தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அன்றைய தினமே முடிவுகள் வெளியாகிவிடும். இப்போது நடந்திருப்பது கடந்த பல வருடங்களில் நாம் காணாத ஒரு விஷயம்.

    இந்தத் தேர்தலை Consequential தேர்தல் என்று அழைக்கிறார்கள். அதாவது பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் என்கிறார்கள்.

    இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைவிட, ஜோ பைடன் - டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 20 இருக்கைகளுக்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

  11. தேர்தல் குறித்து அமெரிக்க வாழ் தமிழர்களின் கருத்து என்ன?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. ஆதாரமற்ற மோசடி குற்றச்சாட்டுகள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியாளர் தொடர்பான தகவலை பெற சற்று முன் நீங்கள் இணைந்திருந்தால், நள்ளிரவுக்குப் பிந்தைய சில முன்னேற்றங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். முறைப்படி வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டிருந்தால் தான் வெற்றி பெற்றிருப்பேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், உச்ச நீதிமன்றம்தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அவரது பதவில், தனது எச்சரிக்கை வரியை குறிப்பிட்ட ட்விட்டர் நிறுவனம், "தேர்தல் தொடர்பான தகவல் உங்களை தவறாக வழிநடத்தலாம்" என கூறியுள்ளது

    டிரம்ப் கூறுவது போல, தற்போது எண்ணப்பட்டு வரும் அஞ்சல் வழி வாக்குகள் சட்டவிரோதமானது அல்ல. அவை சட்டப்பூர்வமானவை. அஞ்சல் வழி வாக்குகள் எண்ணப்படுவதில் காணப்படும் தாமதம் நடைமுறையில் உள்ளதுதான். அஞ்சல் வழி வாக்குகள் பதிவில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

    அதிபர் டிரம்ப் பென்சில்வேனியா, ஜோர்ஜா ஆகியவற்றில் முன்னிலையில் இருக்கிறார். ஆனாலும், அஞ்சல் வழி வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் அவரது முன்னிலை நிலவரம் குறைந்து வருகிறது. அஞ்சல் வழி வாக்குகளை மோசடியான வாக்குப்பதிவு என டிரம்ப் அழைத்தாலும், அவைதான் தங்களுக்கு சாதகமான வாக்குகள் என ஜோ பைடன் தரப்பு கூறுகிறது. தேர்தல் பரப்புரையின்போதும் அமெரிக்கர்கள் பெருந்திரளாக அஞ்சல் வழி வாக்குகளில் வாக்குரிமையை பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. நெவாடாவில் வழக்கு தொடர்ந்த டிரம்பின் பிரசாரக்குழு

    தேர்தல்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, நெவாடாவில் பைடன் முன்னிலை வகித்து வரும் நிலையில், அங்குள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே, வாக்கு எண்ணிக்கை தொடர வலியுறுத்தும் பதாகையுடன் டிரம்பின் ஆதரவாளர்கள்

    அதிபர் பதவி வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய போர்க்கள மாகாணங்களில் அஞ்சல் வழி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வழக்கு தொடர்ந்த டிரம்பின் பிரசாரக்குழு, தற்போது நெவாடாவிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    ஏற்கெனவே பல மாகாண நீதிமன்றங்களில் அவர்கள் முன்வைத்த தேர்தல் விதிமீறல் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்தும் முயற்சி இது என்று ஏபிசி தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.

    தேர்தல் வாக்குப்பதிவை நிறுத்த ஆதாரங்கள் ஏதும் வழங்காமல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கிளார்க் பகுதியில் நடந்த தேர்தலில் தாமதமாக அஞ்சல் வழி வாக்குகள் செலுத்தப்பட்டதாகவும், 3,000க்கும் அதிகமான தகுதியற்ற தனி நபர் வாக்குகள் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே தேர்தல் மோசடி மற்றும் முறைகேடு புகார்களை தெரிவித்து வரும் டிரம்ப், பைடன் முன்னிலை வகிக்கும் மாகாணம் அல்லது தனது முன்னிலை நிலவரம் குறைந்து வரும் மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

    நெவாடாவில், தற்போதைய நிலவரப்படி பைடன் முன்னிலை வகிக்கிறார். தற்போதுவரை அங்கு வாக்கு எண்ணிக்கையை தொடர வலியுறுத்தி வரும் டிரம்பின் ஆதரவாளர்கள், அடுத்து எண்ணப்படும் வாக்குகளிலாவது டிரம்புக்கு சாதகமாக வாக்குகள் கிடைக்கலாம் என்று நம்புகிறார்கள்.

  14. ஜோ பைடனின் பாதுகாப்பை அதிகரிக்க தயாராகும் ரகசிய சேவை

    ஜனநாயக கட்சி அதிபர் பதவி வேட்பாளர் ஜோ பைடனின் பாதுகாப்பை அதிகரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் ஆயத்தமாகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது.

    வெள்ளிக்கிழமை காலையில், புதிய அதிபராக உரிமை கோருவது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று ரகசிய சேவை அதிகாரிகளிடம் பைடனின் பிரசாரக்குழுவினர் தெரிவித்த நிலையில், அவரது பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாளிதழ் கூறுகிறது.

    இது தொடர்பாக ரகசிய சேவை செய்தித்தொடர்பாளர் கேத்ரின் மிலோன் கருத்து தெரிவிக்க மறுத்தார். முக்கிய பிரபலங்களின் பாதுகாப்பு விவரங்கள் பற்றி வெளியே விவாதிப்பதில்லை என்று அவர் கூறினார். பைடனின் உதவியாளர்களும் இது பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.

    பைடனும் அவரது பிரசாரக்குழுவினரும் டெலவேரில் உள்ள வில்மிங்டனில் உள்ள முகாமில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

  15. அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வது எப்படி?

    1896ஆம் ஆண்டில் அப்போதைய தேர்தலில் தோல்வியடைந்த வில்லியம் ஜென்னிங்ஸ் பிரயான், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வில்லியம் மெக் கின்லீக்கு, இரண்டு நாட்களுக்கு பிறகு தந்தி (டெலிகிராம்) மூலம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். "செனட்டர் ஜோன்ஸ் சற்று முன்தான் தேர்தல் முடிவுகள் உங்களுக்கு சாதகாக வந்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார். உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் - அமெரிக்க மக்களிடம் இந்த பிரச்னையை விட்டிருந்தோம். அவர்களின் முடிவே சட்டம்," என்பதுதான் வில்லியம் ஜென்னிங்ஸ் பிரையானின் தந்தி.

    தாழ்மையுடன் தோல்வியை ஒப்புக்கொள்வதற்கான ஒரு முன்னுதாரணத்தை அவரது செயல்பாடு உணர்த்தியது. அதன் பிறகு தோல்வியைத் தழுவிய அதிபர் வேட்பாளர்கள், எதிர் போட்டியாளரிடம் இப்படி தெரிவப்பதே வழக்கமாக இருந்தது.

    தேர்தலை எவ்வளவு விரோத போக்குடன் இருந்தாலும், வாக்குப்பதிவு முடிவுக்கு வந்த ஒரு சில மணி நேரத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ளும் மரபை அவர்கள் கடைப்பிடித்தார்கள்.

    ஆனால், தேர்தல் தோல்வியை கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும் என சட்டப்பூர்வ அல்லது அரசியலமைப்பு அவசியம் ஏதுமில்லை. அப்படி செய்யாமல் போனால், முடிவை எதிர்த்து நீதிமன்றத்தின் கதவுகளை நாட வேட்பாளர்களுக்கு உரிமை உண்டு.

    2000ஆம் ஆண்டில், ஜனநாயக கட்சி வேட்பாளர் அல் கோர், ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷிடம் தோற்றபோதும், தனது பிரசாரக்குழு நினைத்ததை விட வெகு நெருக்கத்தில் அந்த வெற்றி இருந்ததால், தனக்கான உரிமையை நிலைநாட்ட அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். கடைசியில் உச்ச நீதிமன்றம் புஷ்ஷுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.

    அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், தோல்வியுறும் வேட்பாளர்கள் எவ்வாறு அதை ஒப்புக் கொண்டார்கள் என்பதை விவரிக்க, 2008ஆம் ஆண்டில் ஜான் மெக் கெய்ன், பராக் ஒபாமாவிடம் தோல்வியுற்றபோது வெளியிட்ட காணொளியை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அத்தகைய காணொளியை பிபிசி மீடியா பிரிவு ஆசிரியர் அமோல் ராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. பெரும் குழப்பத்தில் அமெரிக்க தேர்தல் முடிவுகள்?, பீட்டர் பாவ்ஸ், வட அமெரிக்க செய்தியாளர்

    பெரும் குழப்பத்தில் அமெரிக்க தேர்தல் முடிவுகள்?

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து மூன்று நாட்கள் ஆகியும்கூட இன்னும் முடிவுகள் தெரியவரவில்லை. ஒருவிதமான குழப்பமான நிலையே நீடித்து வருகிறது.

    பல மாகாணங்களில் வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருகின்றன. பல இடங்களில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முன்னிலை விவரங்கள் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன.

    வெற்றியை தீர்மானிக்கும் சில முக்கிய மாகாணங்களில் இவர்தான் வெற்றியாளர் என தற்போதே கணிப்பது கடினம். ஒரு சில இடங்களில் ஜோ பைடனுக்கும் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    தற்போது பலரின் கவனமும் பென்சில்வேனிய, ஜோர்ஜா, அரிசோனா மற்றும் நெவாடா ஆகிய மாகாணங்கள் மீதுதான் இருக்கின்றன.

    செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காத அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக மீண்டும் எந்த ஆதாரமும் இன்றி பேசி வருகிறார். வாக்காளர் மோசடியால் தாம் பாதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

    அதிக அளவில் பதிவான அஞ்சல் வாக்குகள் பெரும்பாலும் ஜோ பைடனுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

    தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று டிரம்ப் தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார். அதுவே பைடனோ, கொரோனா தொற்று காரணமாக அஞ்சல் வழியாக வாக்குகளை செலுத்துமாறு தனது ஆதரவாளர்களை வலியுறுத்தி இருந்தார்.

    இதுவே, அஞ்சல் வாக்குகள் பைடனுக்கு சாதகமாக இருக்க காரணமாக அமைந்திருக்கலாம் என டிரம்ப் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

    இந்நிலையில், தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக மிரட்டல் விடுத்திருக்கிறார் டிரம்ப்.

    இதுவே பைடன் செய்துள்ள ட்வீட்டில் தனது பிரசாரம், “வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய தேர்தல் பாதுகாப்பு முயற்சி” என பதிவிட்டுள்ளார். அதோடு, முழுமையான முடிவுகள் தெரியவரும் வரை மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

    இன்னும் இறுதி முடிவுகள் எப்போது வரும் என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால், எலக்டோரல் குழு வாக்குகள் வைத்து பார்த்தால், டொனால்ட் டிரம்பின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.

    ஒரு வேலை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றம் சென்றால், முடிவுகள் தெரிய பல வாரங்கள் ஆகலாம் என்கின்ற பதற்ற நிலையே அங்கு காணப்படுகிறது.

  17. அமெரிக்க அதிபர் தேர்தல்: சமீபத்திய அலுவல்பூர்வ முன்னணி நிலவரம்

    தேர்தல்
  18. அமெரிக்க அதிபர் தேர்தல்: வலதுசாரி அரசியலின் முடிவா?

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை பல்கலைகழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் தலைவர் ராமு மணிவண்ணனுடன் நேரலை.

  19. தேர்தல் முடிவுக்கு எத்தனை தூரத்தில் நாம் இருக்கிறோம்?

    தேர்தல்

    பட மூலாதாரம், EPA

    கடந்த வியாழக்கிழமை நடந்த வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, டொனால்ட் டிரம்ப் அல்லது ஜோ பைடனுக்கு சாதகமாக எந்த மாகாணாமும் பெரும்பான்மையை தரவில்லை. ஆனாலும், ஒப்பீட்டு அளவில் வாக்குகள் அடிப்படையில் பைடன் முன்னிலை வகிக்கிறார்.

    இப்போதைக்கு போர்க்கள மாகாணங்களான ஜோர்ஜா, நெவாடா, பென்சில்வேனியா, அரிசோனா ஆகியவற்றில்தான் கவனம் செலுத்தப்படுகிறது.

    ஜோர்ஜா: டிரம்ப்பின் இன்னும் ஓரளவு முன்னிலையில்தான் இருக்கிறார். ஆனால் அவரது முன்னணி 90% குறைந்துள்ளது - வியாழக்கிழமை அதிகாலை நிலவரப்படி 18,000 வாக்குகள் முன்னிலை வகித்த அவர், தற்போது 1,800 வாக்குகள் என்ற அளவிலேயே முன்னிலையில் இருக்கிறார். அமெரிக்க நிலவரப்படி காலை 5 மணியளவில் 15 ஆயிரம் வாக்ககுள் மட்டுமே இன்னும் எண்ணப்படவுள்ளன.

    நெவாடா: பைடன் இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது 8,000 என்ற அளவில் முன்னிலையில் இருந்து பிறகு 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

    பென்சில்வேனியா: டிரம்ப் இங்கு வியாழக்கிழமை காலையில் 1.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். ஆனால், வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்ட வேளையில், அவரது முன்னிலை 25 ஆயிரம் வாக்குகளாக குறைந்தது. இன்னும் இங்கு 2.20 லட்சம் வாக்குகள் எண்ணப்படவுள்ளது.

    அரிசோனா: டிரம்பிற்கு அரிசோனா மட்டுமே பிரகாசமான வெற்றியைத் தேடித்தரும் இடமாக உள்ளது. இங்கு பைடனின் முன்னிலை வியாழக்கிழமை சுமார் 69 ஆயிரம் முதல் 46 ஆயிரமாக குறைந்தது. மேலும் 2.20 லட்சம் வாக்குகள் இங்கு எண்ணப்படவுள்ளன.

  20. வெற்றியை தீர்மானிக்கும் 6 முக்கிய மாகாணங்களில் என்ன நிலை?

    வெற்றியை தீர்மானிக்கும் 6 முக்கிய மாகாணங்களில் என்ன நிலை?

    பட மூலாதாரம், Getty Images

    வெள்ளை மாளிகையில் அடுத்து யார் அடி எடுத்து வைக்கப்போகிறார்? உலகின் சக்தி வாய்ந்த நாட்டை ஆளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ளும் நேரம் வெகு தூரத்தில் இல்லை.

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை (எலக்டோரல் காலேஜ்) வாக்குகளில் 270 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு குடியரசு கட்சியின் வேட்பாளரும் அதிபருமான டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடனும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்திய நேரப்படி காலை 9 மணி அளவில் ஜோ பைடன் 253 தேர்தல் சபை வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகள் பெற்றுள்ளார்.

    இதை வைத்து யார் வெற்றி பெறப் போகிறார் என்ற கணிப்பு இருந்தாலும், இதை வைத்து மட்டுமே நாம் முடிவை எடுத்துவிட முடியாது.

    வெற்றியைத் தீர்மானிக்கும் சில முக்கிய மாகாணங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    பென்சில்வேனியா, அரிசோனா, ஜோர்ஜா, விஸ்கான்சின், நெவாடா, மிஷிகன் ஆகிய இந்த 6 போர்க்கள மாகாணங்களில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை செலுத்தும்.

    ஏன் இந்த 6 மாகாணங்கள் முக்கியம்? இந்த 6 மாகாணங்களில் என்ன நிலை?