You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா: சிங்கப்பூரில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு; இந்தியாவில் அண்மைய நிலை என்ன?

செவ்வாய் காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,70,042 ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. இன்றைய முக்கிய செய்திகள்

    கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவிவரும் இந்த சூழலில் கடுமையான பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐ. நாவின் உலக உணவு திட்டப் பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

    மலேசியாவில் இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 54 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தமிழ்நாட்டில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இந்திய மாநிலங்கள் இரண்டு நாட்களுக்கு ராபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    பெருவில் மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் தரப்படுவதில்லை என மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இலங்கையில் ஊரடங்குக்கு மத்தியில் முதலாம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பற்றோருக்கான நல உதவிகள் கேட்டு 517,000 பேர் விண்ணப்பித்து இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

  3. வெள்ளை மாளிகை முன் போராடும் செவிலியர்கள்

    அமெரிக்காவின் தேசிய செவிலியர்கள் ஒன்றிணைந்த சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி வெள்ளை மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முகக்கவசம் அணிந்தபடி செவிலியர் ஒருவர் அதிகாரிகளுக்கான கடிதம் ஒன்றை வாசிக்கிறார்:

    ”செவிலியர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

    நீங்கள் எங்களை பாதுகாக்கவில்லை என்றால் எங்களால் எங்கள் நோயாளிகளை பாதுகாக்க முடியாது.” என்று குறிப்பிடுகிறார் அந்த செவிலியர்.

    கொரோனா வைரஸால் உயிரிழந்த செவிலியர்களின் புகைப்படங்களை ஏந்தி அவர்கள் போராட்ட முழுக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

    இந்தச் சங்கத்தில் சுமார் ஒன்றரை லட்சம் செவிலியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அமெரிக்காவில் செவிலியர்களுக்கான மிகப்பெரிய சங்கமாக இது உள்ளது.

  4. பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்

    கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வரும் இந்த சூழலில் கடுமையான பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐ. நாவின் உலக உணவு திட்டப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த ஆண்டு 135 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 265 மில்லியன் மக்கள் உணவுத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவர் என ஐ. நாவின் உலக உணவு திட்டப்பிரிவு தெரிவித்துள்ளது.

    உலகில் உள்ள பல உணவு உற்பத்தி நிறுவனங்களும் அதன் கூட்டு நிறுவனங்களும் உணவுத்தட்டுப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டதால் ஐ.நா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பே கடந்த ஆண்டு உணவுத்தட்டுபாடு அதிகரிப்பதாக உணவு பற்றாக்குறை குறித்த சர்வதேச அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

  5. ’கோவை மாவட்டம் விரைவில் கொரோனா அற்ற மாவட்டமாக மாறும்’

    கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் இன்று சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.இதுவரை, கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133 ஆக உள்ளது. இன்றுவரை மொத்தம் 83 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இராசமணி, "கொரோனா வார்டில் தற்போது 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் குணமடைந்து ஒரு வாரத்தில் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். விரைவில், கோவை மாவட்டம் நூறு சதவிகிதம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறும், அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை ஊரடங்கு நீங்கும் வரை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

  6. அமெரிக்க அதிபர் டிரம்புடன் உரையாடும் பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

    அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க அவருடன் தொலைப்பேசி மூலம் இன்று கலந்துரையாட இருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

    தான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது தனக்கு நம்பிக்கை அளித்ததற்கு நன்றி தெரிவிக்கவும், ஜி 7 நாடுகள் கொரோனா பாதிப்பிற்கு எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்பதை குறித்து கலந்துரையாடவும் இந்த தொலைப்பேசி கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகிறது என பிரிட்டன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  7. மலேசியாவில் நிலவரம் என்ன?

    மலேசியாவில் இன்று புதிதாக57 பேருக்குகொரோனாவைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 54 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

    மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 5,482ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 3,349 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில்61.1 விழுக்காடாகும்.

    தற்போது 2,041 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொது நடமாட்டக்கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு 35 தினங்கள் ஆன நிலையில், அது திரும்பப் பெறப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர்ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

    வரும் 28ஆம் தேதியுடன் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டம் முடிவுக்கு வருகிறது. இந்த ஆணையை திரும்பப் பெறுவதற்கு முன்பு அல்லது தளர்த்தும் முன்பு ஆறு முக்கிய விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டி உள்ளதாக நூர்ஹிஷாம் கூறினார்.

    வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்களுக்கு நாட்டின் எல்லையில் உரிய மருத்துவப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்துவது, பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எந்தளவு பயன் அளித்துள்ளது என்பதை ஆராய்வது, கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்கான நேரத்தைக் குறைப்பது, கடும் நோயால் தாக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டங்களை அமல்படுத்துவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட புதிய அன்றாட வாழ்க்கை முறைக்கு மாறுவது, தற்காப்பு நடவடிக்கைகளை சமூக அளவில் அமல்படுத்துவதில் சுகாதார அமைச்சும் சமூகமும் இணைந்து செயல்படும் சூழ்நிலையை ஏற்படுத்துவது ஆகிய ஆறு விஷயங்களை சாத்தியமாக்குவது மிக அவசியம் என நூர்ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

  8. தமிழ்நாட்டில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழ்நாட்டில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இன்று மேலும் 76 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை தமிழ்நாட்டில் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596ஆக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 178 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 635ஆக உயர்ந்துள்ளது.

    ஆகவே தற்போது கொரோனா நோய்க்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 940ஆக உள்ளது.

    இன்று உயிரிழந்தவருடன் சேர்த்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா நோய் தாக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வீடுகளில் 22,254 பேரும் அரசின் தனிமைப்படுத்தும் விடுதிகளில் 145 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதுவரை தமிழ்நாட்டில் 53,045 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

    கொரோனா நோய் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் 1917 பேர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

    இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 76 பேரில் 55 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

    சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்த 25க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    சென்னையில் மட்டும் ஒட்டு மொத்தமாக இதுவரை 358 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  9. சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பிரதமர் லீ

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பிரதமர் லீ சியன் லூங் தொலைக்காட்சி மூலம் சிங்கப்பூரர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார். சிங்கப்பூரில் ஊரடங்கை தற்போது கொரோனா வைரஸ் தொற்றை முறியடிப்பதற்கான திட்டம் என்று குறிப்பிடுகிறார்கள்.

    இந்தத் திட்டம் ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் லீ அறிவித்தார். முன்னதாக இத்திட்டம் மே 4ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அடுத்த ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நடைமுறைகள் மேலும் கடுமையாகும் என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் பணியிடங்களும் குறைக்கப்படும் என்றார்.

    வைரஸ் தொற்றை துடைத்தொழிக்கும் சிங்கப்பூர் அரசின் திட்டத்துக்கு இதுவரை நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும், சிங்கப்பூரர்களைப் போலவே அந்நியத் தொழிலாளர்களும் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் பிரதமர் லீ உறுதியளித்தார்.

    "வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும். அவர்கள் தாயகத்தில் வசிக்கும் தங்களுடைய குடும்பத்தாருக்கு பணம் அனுப்புவது உறுதி செய்யப்படும்," என்றும் பிரதமர் லீ மேலும் தெரிவித்தார்.

    இதற்கிடையே, சிங்கப்பூரில் புதிதாக 1,111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 9,125ஆக அதிகரித்துள்ளது.

  10. ரேபிட் டெஸ்ட் கிட் சோதனைகள் நிறுத்தி வைப்பு

    இந்திய மாநிலங்கள் இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் சோதனை முடிவுகளில் பல மாற்றங்கள் தெரிவதால் மாநிலங்கள் ரேபிட் டெஸ்ட் கிட்களை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் இதுகுறித்த ஆலோசனைகள் இரண்டு நாட்களில் வழங்கப்படும் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

  11. மருத்துவ பணியாளர்கள் போராட்டம்

    பெருவில் மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் தரப்படுவதில்லை என மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் மாஸ்குகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கோருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி பெருவில் 16,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    லத்தின் அமெரிக்க நாடுகளில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக பெருவில்தான் கொரொனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  12. இந்தியாவில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

    இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18601ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3252 பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். எனவே இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் சராசரி 17.48சதவீதமாக உயர்ந்துள்ளது என இன்று செய்தியாளார்களை சந்தித்த சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  13. எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் வாழ்கிறோம்? - ராஜ்கிரண்

    ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க மறுத்து சிலர் மாநகராட்சி அதிகாரிகளை தாக்கியதும், அதை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்தும் நடிகர் ராஜ்கிரண் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்ட நடிகர் ராஜ்கிரண், நடந்த சம்பவங்கள் தொடர்பாக வருந்தியுள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், ''எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில்நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது,மிகுந்த வேதனையும், மன உளைச்சலும் ஏற்படுகிறது..."

  14. அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப வன்முறைகளும் இதனால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

  15. அமெரிக்காவில் கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்களும் – மருத்துவ பணியாளர்களும்

    அமெரிக்காவில் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    இந்த போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் மேற்கத்திய நகரமான டென்வரில் காரில் சென்று கொண்டிருந்தபோது இரு மருத்துவ பணியாளர்கள், இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவர்களின் காரை மறித்து நின்றனர்.

    புகைப்படக் கலைஞர் அலிசன் மெக் க்லாரனால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  16. சிங்கப்பூரில் உள்ள தமிழக தொழிலாளர்களின் நிலை என்ன?

    கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 1,426 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது முதல் நேற்றுதான் ஒரே நாளில் மிக அதிகமான நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதையடுத்து சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8,014ஆக அதிகரித்துள்ளது.

    இவர்களில் பெரும்பாலானவர்கள் அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்கு விடுதிகளில் வசிப்பவர்கள். அண்மைய சில தினங்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரில் இத்தொழிலாளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

    சிங்கப்பூரில் ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக வங்கதேசம் மற்றும் சீனத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

  17. முதலமைச்சர் பழனிசாமி வேதனை

    முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் குறிப்பில் "கொரோனாவிலிருந்து நம்மைக் காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

  18. ஊரடங்கை மீறியவர்கள் மீது 2 லட்சத்து 60 ஆயிரம் வழக்குகள்

    தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை மீறியதாக மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 566 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக 2 லட்சத்து 45 ஆயிரத்து 97 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    ஊரடங்கை மீறி சாலைகளில் வலம் வந்தவர்களிடமிரு்து 2 லட்சத்து 19 ஆயிரத்து 248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒரு கோடியே 36 லட்சத்து ஆயிரத்து 694 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையைப் பொறுத்தவரை நேற்று காலை முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் தொடர்புடைய 126 இருசக்கரவாகனங்கள், 11 ஆட்டோக்கள், 1 இலகுரக வாகனம்எனமொத்தம் 138 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    பள்ளி, கல்லூரிகட்டணங்களை வசூலிக்கக்கூடாது

    இதற்கிடையில் தமிழக அரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில், தனியார்பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை 2020-21ஆம் ஆண்டிற்கான கட்டணத்தையோ, பழைய பாக்கியையோ இந்த ஊரடங்கு காலத்தில் கட்ட வேண்டுமென மாணவர்களின் பெற்றோரை வலியுறுத்தக்கூடாது எனகூறப்பட்டுள்ளது.

  19. ஈஸ்டர் தாக்குதல் முதலாம் ஆண்டு அஞ்சலி, ஊரடங்குக்கு மத்தியில் நினைவு கூரப்பட்ட ஈஸ்டர் நினைவு தினம்

    இலங்கையில் ஊரடங்குக்கு மத்தியில் முதலாம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு நடந்த ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 250 பேர் பலியானார்கள்.

  20. 'மோசமான சூழல் இனிமேல்தான் வரப்போகிறது'

    கொரோனா வைரஸ் தாக்கத்தின் மிக மோசமான விளைவுகள் இனி மேல்தான் வரப்போகிறது என்று நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அவர் எதன் அடிப்படையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார் என்பது தெரியவில்லை. ஆனால், ஆஃப்ரிக்கா முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தப்போகும் எதிர்கால தாக்கம் குறித்து டெட்ரோஸ் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

    செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "எங்களை நம்புங்கள் இன்னும் மோசமான சூழல் வரவுள்ளது என்றும், இது ஒரு வைரஸ். ஆனால் பலருக்கு இதுபற்றிய போதிய புரிதல் இல்லை," என்றும் தெரிவித்துள்ளார்.