இந்திய வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு அபராதம் விதித்த ஐசிசி - பின்னணி என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நடத்தை விதிகளை மீறியதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு போட்டிக்கான சம்பளத்தில் 15% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நடத்தை விதிகளின் பிரிவு 2.9-ஐ அர்ஷ்தீப் சிங் மீறியதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அந்த பிரிவின்படி, "ஒரு சர்வதேச போட்டியின்போது மற்ற வீரர்களை நோக்கி நியாயமற்ற மற்றும் ஆபத்தான முறையில் பந்து அல்லது வேறு எந்த கிரிக்கெட் உபகரணத்தையும் எறிவது விதிமீறல் ஆகும்."
டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் 11வது ஓவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தன்னை நோக்கி வந்த பந்தை தடுத்து கையில் எடுத்த அர்ஷ்தீப் அதனை எறிந்தபோது அது டேரில் மிட்செலின் பேடில் பட்டது.
15% அபராதத்தோடு அர்ஷ்தீப் சிங்கிற்கு 1 டீமெரிட் புள்ளியும் சேர்க்கப்பட்டது.
"போர் எப்போது முடியும் என்பதை இரான் தீர்மானிக்கும்" - புரட்சிகர காவல் படை
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) எதிர்வினை ஆற்றியுள்ளது.
இரானுடன் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் எனக் கூறிய டிரம்ப் தேதி எதையும் குறிப்பிடவில்லை.
போர் எப்போது முடியும் என்பதை இரான் முடிவு செய்யும் என புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் 'ஒரு லிட்டர் எண்ணெய் கூட இந்தப் பிராந்தியத்திலிருந்து ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படாது' என ஐஆர்ஜிசி தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக பதற்றம் நிலவுவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. உலகின் 20% எண்ணெய் இந்த நீர் வழித்தடம் வழியாக செல்கிறது.
நீதித்துறை பற்றி பாடம் - மன்னிப்பு கேட்ட என்.சி.இ.ஆர்.டி
பட மூலாதாரம், Getty Images
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) புத்தகத்தில் நீதித்துறையின் ஊழல் என்கிற பாடம் இடம்பெற்றதற்கு அவ்வமைப்பு மன்னிப்பு கேட்டுள்ளதோடு அந்த புத்தகம் திரும்பப் பெறப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.
இந்தப் பாடத்திற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து என்.சி.இ.ஆர்.டி மன்னிப்பு கோரி அனைத்து புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டதாக அறிவித்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டி இன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "என்.சி.இ.ஆர்.டி சமீபத்தில் வெளியிட்ட 'சமூகத்தை ஆராய்தல்: இந்தியா மற்றும் அதற்கு அப்பால்' என்கிற எட்டாம் வகுப்பு புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் "நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு' என்கிற தலைப்பில் நான்காவது அத்தியாயம் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த புத்தகம் திரும்ப பெறப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளது.
வணக்கம் நேயர்களே!
இன்று (10-03-2026) இரவு வரையிலும் நேரலைப் பக்கத்தில் முக்கிய செய்திகளை தொகுத்து அளிப்பது மோகன்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு- அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்
பட மூலாதாரம், ANI
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ECA) அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரைப் பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமலானதால் அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் சமையல் எரிவாயு உற்பத்தியை (எல்பிஜி) அதிகரிக்க வேண்டும்.
இந்த உத்தரவின்படி, குறிப்பிட்ட துறைகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம், போக்குவரத்துக்கான சிஎன்ஜி (CNG) உள்ளிட்டவை இந்தத் துறைகளில் அடங்கும்.
“எல்பிஜி தயாரிக்க பயன்படும் ப்ரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.”
“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயற்கை எரிவாயு உற்பத்தியாளர், இறக்குமதியாளர், சந்தைப்படுத்துபவர் அல்லது விநியோகஸ்தர் ஒவ்வொருவரும் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, ஒதுக்கீடு, வழங்கல் மற்றும் நுகர்வு தொடர்பான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு - தமிழ்நாட்டில் ஓட்டல்கள் மூடப்படுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகலாம் என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடசுப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஓட்டல்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். தற்போது பல ஓட்டல்களில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கேஸ் சிலிண்டர்கள் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் படிப்படியாக ஓட்டல்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விநியோகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். கேஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டால், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கும் பெரும் சிரமம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
"தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஓட்டல்கள் செயல்படுகின்றன. ஓட்டல் துறையில் மட்டும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஓட்டல்கள் மூடப்பட்டால், பெருமளவில் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதுடன் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படும்" என அவர் எச்சரித்தார்.
ஓட்டல்கள் வெளியில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்றும், தொழில்துறை கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஓட்டல்களுக்கு சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு மானியம் வழங்கி அனுமதி அளித்தால் அதைப் பயன்படுத்தி சமையல் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் உணவகங்களின் செயல்பாட்டு நேரத்தை குறைப்பதுடன், உணவு வகைகளையும் குறைத்து அத்தியாவசிய உணவுகளை மட்டும் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலை நீடித்தால் உணவகங்களை மூடுவதையே தவிர வேறு வழியில்லை என்றும், வாடிக்கையாளர்கள் இந்த சூழ்நிலையை புரிந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் வெங்கடசுப்பு கேட்டுக்கொண்டார்.
வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் எதிரொலியாக, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று (மார்ச் 10) முதல் உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பெங்களூரு உணவகங்கள் சங்கம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது மார்ச் 9 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் அதை நம்பியுள்ள பிற மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்வார்கள். எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நமது ஹோட்டல் துறையும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “70 நாள்களுக்கு எரிவாயு விநியோகத்தில் பாதிப்பிருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனால், திடீரென எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது உணவக தொழிலுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தைச் சீர்படுத்தவும் அதன்மூலம், உணவக தொழிலுக்கு ஆதரவு தரவும் கேட்டுக்கொள்கிறோம். எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதால் மார்ச் 10 முதல் உணவகங்கள் மூடப்பட்டிருக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் என்ன மாற்றம்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வணிக ரீதியான எல்பிஜி விநியோகம் தடைபட்டால், தங்கள் ஹோட்டல்களை மூட வேண்டியிருக்கும் என்று பெங்களூருவில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும், அதிகப்படியான உற்பத்தியை உள்நாட்டு பயன்பாட்டிற்கு திருப்பிவிடவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் எரிவாயு பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள் முன்பதிவு காலத்தை அமல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வீடுகளுக்கு அல்லாத எரிவாயு விநியோகங்களில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கா எரிவாயு சப்ளை, முதலில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற மிகவும் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, வீட்டு உபயோகம் அல்லாத பயன்பாட்டிற்கு எரிவாயு விநியோகம் தொடர்பான விஷயங்களை மறுஆய்வு செய்ய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று நிர்வாக இயக்குநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற தொழில் துறையினரின் கோரிக்கைகள் பற்றி இந்தக் குழு முடிவு செய்யும்.
வணக்கம் நேயர்களே!
இன்று (10-03-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் முக்கிய செய்திகளை தொகுத்து அளிப்பது சிராஜ்.
இரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் முக்கிய ஆலோசனை
பட மூலாதாரம், Contributor/Getty Images
இரானில் போர் நிலவி வரும் சூழலில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், இரானை விட்டு வெளியேற நில எல்லைகளுக்குச் செல்லும் முன், கண்டிப்பாகத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியத் தூதரகம் தனது ஆலோசனையில் கூறியுள்ளதாவது, "இந்தியக் குடிமக்கள் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்காமல் இரானில் இருந்து வெளியேற எந்தவொரு நில எல்லைக்கும் செல்ல வேண்டாம். நில எல்லையை நோக்கிச் செல்வதற்கு முன் தூதரகத்திடம் இருந்து தெளிவான வழிகாட்டுதல்களைப் பெறுவது மிகவும் முக்கியம்."
இந்தியத் தூதரகம் அவசர உதவிக்கான எண்களையும் வெளியிட்டுள்ளது.
மொபைல் எண்கள்: +98 9128109115, +98 9128109102, +98 9128109109, +98 9932179359
மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in
'மத்திய கிழக்கு போர் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்' - ராகுல் காந்தி
பட மூலாதாரம், ANI
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்விலும் கடும் அமளி காணப்பட்டது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையிலான போர் இந்தியாவிற்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஊடகங்களிடம் பேசுகையில், "மத்திய கிழக்கு நமது பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். பிரதமர் மோதி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் நாடு பெரிய அடியைச் சந்திக்கப் போகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்," எனத் தெரிவித்தார்."
அவர் கூறியதாவது, "எரிபொருள் விலை உயர்வும் பொருளாதார நெருக்கடியும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இல்லையா? இவை பொதுமக்களின் பிரச்னைகள். இவற்றை நாங்கள் முக்கியமானதாகக் கருதுகிறோம், விவாதிக்கவும் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் இதை விவாதிக்க விரும்பவில்லை, ஏனெனில் அது பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும், பிரதமரின் நிலைப்பாடு அம்பலமாகும். அவர் எவ்வாறு சமரசம் செய்துகொண்டார் என்பதும், அவர் எவ்வாறு அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறார் என்பதும் வெளிப்படும். அதனால்தான் அவர்கள் விவாதிக்க மறுக்கிறார்கள்" என்று கூறினார்.
அவையில் நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் தொடங்கின, ஆனால் அமளி காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துருக்கி நோக்கி வந்த இரான் ஏவுகணை வீழ்த்தப்பட்டது
பட மூலாதாரம், Getty Images
இரான் ஏவிய இரண்டாவது ஏவுகணை, துருக்கியின் வான்வெளிக்குள் நுழைந்தபோது நேட்டோவின் வான்வழி மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அதை சுட்டு வீழ்த்தின என துருக்கி தெரிவித்துள்ளது.
அந்த ஏவுகணையின் சிதிலங்கள் காலியான நிலப்பரப்பில் விழுந்ததாகவும், இதில் எவருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.
கடந்த வாரமும் துருக்கி வான்வெளியை நோக்கி வந்த ஓர் இரானிய ஏவுகணை, நேட்டோ பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இரானின் புதிய அதி உயர் தலைவருக்கு புதின் வாழ்த்து
பட மூலாதாரம், Sputnik
இரானின் புதிய அதி உயர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனேயிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.
"இரானிய இஸ்லாமியக் குடியரசின் உச்ச தலைவராக நீங்கள் நியமிக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று கிரெம்ளின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் புதின் தெரிவித்துள்ளார்.
இரான் ரஷ்யாவின் ஒரு "நம்பகமான கூட்டாளியாகத் தொடரும்" என்றும் ரஷ்ய அதிபர் உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர், "இரான் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், இந்த உயரிய பதவியில் உங்களது செயல்பாடுகளுக்கு நிச்சயமாக பெரும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் தேவைப்படும். உங்கள் தந்தையின் பணிகளை நீங்கள் கண்ணியத்துடன் தொடர்வீர்கள் என்றும், இந்த கடுமையான சோதனையை எதிர்கொள்ள இரானிய மக்களை ஒன்றிணைப்பீர்கள் என்றும் நான் நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் கடும் பாதிப்புகளை காட்டும் படங்கள்
லெபனானின் பெய்ரூட் நகரத்தின் தெற்கு புறநகர் பகுதிகளில், இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பிறகு திங்கள்கிழமை காலை கருமையான புகை மேகங்கள் எழுந்தன.
மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கடந்த ஒரு வாரத்தில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.
பட மூலாதாரம், Reuters
பட மூலாதாரம், Reuters
பட மூலாதாரம், Reuters
இரானியக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் - ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கூறியது என்ன?
பட மூலாதாரம், ANI
இந்தியாவிற்குள் இரானியக் கப்பலுக்கு அடைக்கலம் அளித்தது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் பேசினார்.
இருப்பினும், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட இரானியக் கப்பலான 'ஐர்ஐஎஸ் தேனா' குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
திங்கள்கிழமை மாநிலங்களவையில் பேசிய ஜெய்சங்கர், "பிப்ரவரி 28 அன்று, இப்பகுதியில் இருந்த மூன்று இரானியக் கப்பல்களுக்கு அடைக்கலம் அளிக்குமாறு இரானிய அரசாங்கம் எங்களைக் கேட்டுக் கொண்டது. மார்ச் 1 அன்று அதற்கு நாங்கள் ஒப்புதல் அளித்தோம். மார்ச் 4 அன்று, 'ஐஆர்ஐஎஸ் லாவன்' கொச்சி துறைமுகத்திற்கு வந்தது. அதிலிருந்த அனைத்து மாலுமிகளும் எங்களது பாதுகாப்பில் உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் இது சரியான செயல் என்று நாங்கள் கருதினோம்" என்றார்.
மேலும் ஜெய்சங்கர் கூறுகையில், "தற்போதைய சூழ்நிலையில் இரானியத் தலைமையைத் தொடர்பு கொள்வது கடினமாக உள்ளது, ஆனால் நான் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் அப்பாஸ் அரகச்சியைத் தொடர்பு கொண்டு பேசினேன், எதிர்காலத்திலும் நாங்கள் தொடர்பில் இருப்போம்" என்றார்.
நீலகிரி: கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டப்பகுதிக்கு அருகிலுள்ள தேவர்சோலை காரக்குன்னு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ரவி (வயது 60), அப்பி என்கிற லிங்கராஜ் (வயது 60) ஆகியோர், மார்ச் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தேவர்சோலை பஜார் பகுதிக்குச் சென்றுள்ளனர். இரவு இருவரும் வீடு திரும்பவில்லை. இன்று காலையில் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் இருவரையும் தேடியபோது, இருவரும் தேயிலைத்தோட்டப் பகுதியில் இறந்துகிடந்தனர்.
இருவரையும் காட்டுயானை தாக்கியதற்கான அடையாளங்கள் தெரியவந்தது. தகவலறிந்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ், கூடலூர் காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார், வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் 3 அரசுத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தபோது, இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காரக்குன்னு கிராம மக்கள் அவர்களை முற்றுகையிட்டனர்.
காட்டு யானையைத் துரத்தியபின் அகழி வெட்டுவது, இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக டிஎஃப்ஓ தேவராஜ் உறுதியளித்த பின்பே, இருவரின் உடலையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
வளைகுடா நாடுகள், இஸ்ரேல் மீது இரான் தொடர்ந்து தாக்குதல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
இரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் பஹ்ரைனில் தான் அதிக அளவிலான மக்கள் காயமடைந்துள்ளனர்.
பஹ்ரைன் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 32 பேர் காயமடைந்ததாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 2 மாத குழந்தையும் அடங்கும்.
வளைகுடா நாடுகளில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியாவில் புதிய தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
முக்கிய எண்ணெய் வயலை நோக்கிச் சென்ற டிரோன்களை இடைமறித்து அழித்ததாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது. முன்னதாக ஒரு டிரோன் அமெரிக்கா தூதரகத்தை தாக்கியிருந்தது.
தங்களின் நிலைகள் மீதான இஸ்ரேலிய-அமெரிக்க தாக்குதல்கள் தொடர்ந்தால் பிராந்திய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படும் என இரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்திய அணி சாம்பியன் - கோலி, ரோஹித் சர்மா கூறியது என்ன?
பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty
இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றிருப்பதை முன்னாள் கேப்டன்களான விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் பாராட்டியுள்ளனர்.
விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நாங்கள் மீண்டும் சாம்பியன்கள். ஆமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நாங்கள் ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றோம். வீரர்கள் அழுத்தத்திற்கு மத்தியில் போட்டி முழுவதும் சிறந்த உத்வேகத்தைக் காட்டினர், இந்த திறமையான அணியை யாராலும் நெருங்க முடியவில்லை." என்று கூறியுள்ளார்.
வெற்றிக்காக முழு நிர்வாகத்தையும் ஊழியர்களையும் கோலி வாழ்த்தினார்.
தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இந்திய அணியைப் பாராட்டிய ரோஹித் சர்மா, "முழு அணியும் சிறந்த முயற்சியைக் காட்டியது. வாழ்த்துகள்" என்று எழுதியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, டி20 உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
முன்னதாக, 2004 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலும், 2007 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனியின் தலைமையிலும் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது.
கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தொட்டது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 110 அமெரிக்க டாலரைக் கடந்தது.
எண்ணெய் மற்றும் விநியோகத்திற்கு உலகின் மிக முக்கியமான வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரால் இந்த நீரிணை மூடப்பட்டது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 18% உயர்ந்து ஒரு பேரல் 108.68 டாலராக இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க கச்சா எண்ணெயின் விலை மேலும் உயர்ந்து ஒரு பேரல் 110 டாலராக உள்ளது.
2022 பிப்ரவரியில் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்திய பிறகு மிகப்பெரிய கச்சா எண்ணெய் விலை உயர்வாக இது உள்ளது.
"இரான் உடனான போரை நிறுத்துவது பரஸ்பர முடிவாக இருக்கும்" - டிரம்ப் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
இரான் உடனான போரை நிறுத்துவது என்பது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து தான் மேற்கொள்ளும் "பரஸ்பர" முடிவாக இருக்கும் என டிரம்ப் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இருவரும் பேசி வருவதாகக் கூறிய டிரம்ப், சரியான நேரத்தில் முடிவை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்த முடிவெடுத்தாலும் இஸ்ரேல் போரைத் தொடருமா என்கிற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், அந்த சாத்தியத்தை நிராகரித்ததோடு, "அது தேவைப்படும் என நான் நினைக்கவில்லை." என்றும் தெரிவித்தார்.
இரானின் புதிய அதிஉயர் தலைவராக மொஜ்தபா காமனெயி நியமிக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த டிரம்ப், "என்ன நடக்கும் எனப் பார்ப்போம்." எனத் தெரிவித்தார்.
முன்னதாக மொஜ்தபாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப், "காமனெயி மகனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது." எனக் கூறியிருந்தார்.