கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ஆர்சிபி

பட மூலாதாரம், Getty Images
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் நான்காவது சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது ஆர்சிபி. கடைசி ஓவரில் வெற்றி பெற 18 ரன்கள் தேவை என்ற நிலையில் அதை அந்த அணி கடைசி பந்தில் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.
டபிள்யூபிஎல் தொடரின் நான்காவது சீசன் ஜனவரி 9 அன்று நவி மும்பை டிஒய் பாடில் ஸ்டேடியத்தில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், முன்னாள் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதல் போட்டியில் மோதின.
டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த ஆர்சிபி அணி மும்பைக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தது. அமீலியா கெர் நேட் சிவர்-பிரன்ட் என முன்னணி வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் கூட 20 ரன்கள் தான் எடுத்தார். இருந்தாலும் சஜனா சஜீவன், நிகோலா கேரி கூட்டணி அந்த அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றது. அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு வீராங்கனை ஜி.கமலினி 32 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ஆர்சிபி, கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடியால் நல்ல தொடக்கம் பெற்றது. 3 ஓவர்களிலேயே அந்த அணி 40 ரன்கள் எடுத்தது. ஆனால், ஐந்தாவது ஓவரில் இருந்து விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழத் தொடங்கின. ஆனால், கடைசி கட்டத்தில் நடீன் டி கிளார்க் தனி ஆளாகப் போராடினார்.
கடைசி ஓவரில் வெற்றி பெற அந்த அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளுமே டாட் பால்களாக முடிந்திருந்தன. ஆனாலும், கடைசி 4 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி ஆர்சிபி அணியை வெற்றி பெறவைத்தார் டி கிளார்க். அவர் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சிலும் அவர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார்.


















