அமெரிக்கர்கள் இடையே மிகவும் குறைந்த டிரம்பின் செல்வாக்கு - புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வந்த ஜப்பான் கப்பல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
புதன்கிழமை அன்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வந்துள்ளது. முன்னர் பாரசீக வளைகுடாவில் இடைமறிக்கப்பட்ட இந்தக் கப்பலில் மூன்று ஜப்பான் ஊழியர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் தற்போது ஜப்பானை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ஹோர்மூஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் கப்பல்கள், குறிப்பாக ஜப்பானின் கப்பல்கள் பாதுகாப்பாகவும் தடையில்லாமலும் பயணிப்பதை இரான் உறுதி செய்ய வேண்டும் எனப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சர்வதேச கூட்டங்களிலும் ஜப்பான் கோரி வருகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய குடிமக்களின் பாதுகாப்பு என்கிற கோணத்தில் காணும்போது இதனை நேர்மறையான முன்னேற்றமாக ஜப்பான் அரசு பார்க்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மேற்கு வங்கம் இரண்டாம் கட்ட தேர்தல்: மதியம் 3 மணி வரை 78.68% வாக்குப்பதிவு
பட மூலாதாரம், ANI
மேற்கு வங்கத்தில் 142 இடங்களுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகளின்படி மதியம் 3 மணி அளவில் 78.68% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
சுமார் 3.2 கோடி வாக்காளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்கின்றனர். இதில் சுமார். 1.6 கோடி ஆண் வாக்காளர்கள், 1.5 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 792 திருநர் சமூக வாக்காளர்கள் அடங்குவர்.
மொத்தம் 41,001 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பிடிஐ செய்தி முகமையின்படி, இன்று காலை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பவானிபூர் வாக்குப்பதிவு மையத்திற்கு ஒரே நேரத்தில் வந்தடைந்தனர்.
ஹமாஸ் உளவு பிரிவு தலைவரைக் கொன்றதாக இஸ்ரேல் தகவல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
வடக்கு காஸாவில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் உளவுப் பிரிவின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் உளவுப் பிரிவின் நடவடிக்கைகள் குழு தலைவரான இயத் அஹமது அப்துல் ரஹ்மான் ஷம்பாரி என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இஸ்ரேலிய ராணுவ செயல்பாடுகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில் அவர் முக்கியப் பங்கு ஆற்றியதோடு அந்தப் பகுதியில் பணியிலிருந்த படைகளுக்கு நேரடி அச்சுறுத்தலாக கருதப்பட்டார்," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலைத் திட்டமிட்டதில் அவரும் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணக்கம் நேயர்களே!
நேரலைப் பக்கத்தில் இன்று (29-04-2026) இரவு வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது மோகன்.
அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கப்பல்களை விடுவிக்க இரான் கோரிக்கை
பட மூலாதாரம், Michael M. Santiago/Getty Images
படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபைக்கான இரானின் தூதர் அமீர் சயீத் இர்வானி.
அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தனது கப்பல்களை விடுவிக்குமாறு, இரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான இரானின் தூதர் அமீர் சயீத் இர்வானி, செவ்வாய்க்கிழமை அன்று ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தனது கடிதத்தில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்குமாறும், அமெரிக்கா பறிமுதல் செய்துள்ள இரானிய வணிகக் கப்பல்கள் மற்றும் டேங்கர்களை உடனடியாக விடுவிக்குமாறும் இர்வானி வலியுறுத்தினார்.
இரானிய கப்பல்கள் பறிமுதல் செய்யப்படுவதை 'கடற்கொள்ளை' என்று இர்வானி விவரித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், "சர்வதேச சட்டத்தின்படி, இந்த அப்பட்டமான நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க இரானுக்கு முழு உரிமை உண்டு" என்றும் இர்வானி கூறியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஒரு அறிக்கையில், அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால், இரானின் எண்ணெய் சேமிப்புத் திறன் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். இது இரானின் எண்ணெய் விநியோகப் பாதைகளை சேதப்படுத்தும் மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
மேற்கு வங்க தேர்தல்- காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குகள் பதிவு
பட மூலாதாரம், X/@CEOWestBengal
மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, 18.39% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிடிஐ செய்தி முகமையின் படி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார்.
"மத்திய படைகளும் தேர்தல் பார்வையாளர்களும் பாஜகவின் கட்டளைப்படி செயல்படுகிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், இந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி, "மம்தா பானர்ஜி இன்று ஒரு வேட்பாளர், வாக்குச்சாவடிக்குச் செல்ல அவருக்கு உரிமை உண்டு, ஆனால் அவர் ஏன் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டி வந்திருக்கிறார்? நானும் வாக்குச்சாவடிக்குச் செல்கிறேன், ஆனால் எனது பாதுகாவலர்களுடன் மட்டுமே செல்கிறேன். அவரும் அதையே செய்ய வேண்டும். அச்சத்தைப் பரப்புவதற்காக அவர் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டி வந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
பிடிஐ செய்தியின் படி, பராநகரின் வார்டு எண் 72-இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இயந்திரம் ஐந்து முறை மாற்றப்பட்டும், வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கவில்லை என்று வாக்காளர்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.
ஹூக்ளி மாவட்டம், கானாகுல், ராஜ்ஹதி-1 பஞ்சாயத்து, ராம்சந்திராபூர் பகுதியில் உள்ள 147 ஆம் எண் வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எஃப் (ISF) ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. போலி வாக்குச்சாவடி முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், X/@CEOWestBengal
படக்குறிப்பு, இரண்டாம் கட்டத் தேர்தலில் மொத்தம் 1448 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களில் 220 பேர் பெண்கள் ஆவர்.
பட மூலாதாரம், X/@CEOWestBengal
படக்குறிப்பு, இரண்டாம் கட்டத்தின் 142 தொகுதிகளில் மொத்தம் 3.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
பட மூலாதாரம், X/@CEOWestBengal
படக்குறிப்பு, 2021-இல், இந்த 142 இடங்களில், திரிணாமுல் காங்கிரஸ் 123 இடங்களையும், பாஜக 18 இடங்களையும், ஐ.எஸ்.எஃப் 1 இடத்தையும் வென்றன.
அமெரிக்கர்கள் இடையே மிகவும் குறைந்த டிரம்பின் செல்வாக்கு - புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
பட மூலாதாரம், Kevin Dietsch/Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செல்வாக்கு, அவரது தற்போதைய பதவிக்காலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
பிரிட்டிஷ் செய்தித்தாளான 'தி கார்டியன்'-இல் வெளியிடப்பட்ட ராய்ட்டர்ஸ்-இப்சோஸின் புதிய கருத்துக்கணிப்பில் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்கர்களின் கோபத்துக்கு முதன்மைக் காரணம், அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த டிரம்பால் இயலாததே ஆகும். மேலும், இரானுக்கு எதிரான அவரது போரை மக்கள் விரும்பவில்லை, இது அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
நான்கு நாட்கள் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், வெறும் 34 சதவிகித அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்பின் பணிகள் சிறப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், ஏப்ரல் 15 முதல் 20 வரை நடத்தப்பட்ட முந்தைய கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 36 சதவிகிதமாக இருந்தது.
பணவீக்கம் தொடர்பான தனது நடவடிக்கைகளுக்கு டிரம்ப் வெறும் 22 சதவிகித ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். முந்தைய கணக்கெடுப்பில் இது 25 சதவிகிதமாக இருந்தது.
நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களில், அமெரிக்க நாடாளுமன்றக் காங்கிரஸில் தாங்கள் பலவீனமடையக்கூடும் என்று குடியரசுக் கட்சி ஆதரவாளர்களிடையே கவலையும் அதிகரித்து வருகிறது.
78 சதவிகித குடியரசுக் கட்சியினர் இன்னும் டிரம்பை ஆதரித்தாலும், 41 சதவிகித கட்சி உறுப்பினர்கள் அவர் பணவீக்கத்தைக் கையாளும் விதத்தில் அதிருப்தி கொண்டுள்ளனர்.
இரானுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா
பட மூலாதாரம், Tasos Katopodis/Getty Images
இரானுடன் தொடர்புடைய 35 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்கள் இரானின் ‘மறைமுக வங்கி அமைப்பின்’ ஒரு பகுதி என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நபர்கள் 'பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்' என்றும், 'பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இரானின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள்' என்றும் அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையின்படி, "இந்த வலையமைப்புகள் சட்டவிரோத எண்ணெய் விற்பனை மூலம் பணம் ஈட்டியுள்ளன, ஏவுகணை மற்றும் ஆயுத உதிரிபாகங்களை வாங்கியுள்ளன, மேலும் இரானுடன் தொடர்புடைய போராளிகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளன."
இந்த வலையமைப்புகள் இரானின் ராணுவம் மற்றும் புரட்சிகர காவல் படைக்கு உலகின் நிதி அமைப்பை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
இதற்கு முன்பும் கூட, இரான் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 142 தொகுதிகளில் மொத்தம் 3.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர் (கோப்புப் படம்)
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதி கட்டமாக 142 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.
இரண்டாம் கட்டத் தேர்தலில் மொத்தம் 1,448 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களில் 220 பேர் பெண்கள். இந்தத் தொகுதிகளில் மொத்தம் 3.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
கொல்கத்தா, ஹவுரா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், நதியா, ஹூக்ளி மற்றும் கிழக்கு வர்த்தமான் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களிப்பதைக் காண முடிந்தது.
2021ஆம் ஆண்டில், இந்த 142 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 123 இடங்களை வென்றிருந்தது, அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி 18 இடங்களையும், இந்திய மதச்சார்பற்ற முன்னணி 1 இடத்தையும் பெற்றன.
மேற்குவங்கத்தில் 152 இடங்களுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும்.
வணக்கம் நேயர்களே!
நேரலைப் பக்கத்தில் இன்று (29-04-2026) பிற்பகல் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது சிராஜ்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்-இல் இருந்து விலகல்
பட மூலாதாரம், AFP via Getty Images
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் ஆகியவற்றிலிருந்து அமீரகம் விலகுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் ஆகியவற்றிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இந்த அமைப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருந்தது.
இந்த முடிவு தங்களது "நீண்டகால உத்தி, பொருளாதார தொலைநோக்குப் பார்வை மற்றும் மாறிவரும் எரிசக்திப் போக்கு" ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுக்களின் கீழ் உள்ள எந்தக் கடமைகளிலிருந்தும் விடுபட்டிருப்பது, நாட்டிற்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என்று அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1967-ல் ஒபெக் அமைப்பில் இணைந்தது. அது வெளியேறுவதால், அந்த எண்ணெய் குழுமத்தில் 11 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள்.
இந்த முடிவு ஓபெக் (OPEC) அமைப்புக்கு விழுந்த ஒரு பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.
எம்எஸ்டி ஃபைனான்சியல் நிறுவனத்தின் எரிசக்தி ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் சவுல் கவோனிக் கூறுகையில், இது அந்த கூட்டணியின் "முடிவின் தொடக்கம்" என்று குறிப்பிட்டார்.
"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியேறுவதால், ஓபெக் தனது உற்பத்தித் திறனில் சுமார் 15 சதவீதத்தை இழக்கிறது; அதோடு அதன் விதிகளுக்கு மிகச் சரியாகக் கட்டுப்பட்டு நடந்த உறுப்பினர்களில் ஒருவரையும் இழக்கிறது."
மத்திய கிழக்கில் நடக்கும் போர், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு எண்ணெய் விநியோகத்தில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
சமீபத்திய ஓபெக் தரவுகளின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆண்டுதோறும் 2.9 மில்லியன் பேரல் எண்ணெயை உற்பத்தி செய்கிறது. ஓபெக் அமைப்பின் மிகப்பெரிய உற்பத்தியாளரான செளதி அரேபியா ஆண்டுதோறும் 9 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்கிறது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எம்.பி.க்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
பட மூலாதாரம், ANI
உடல்நலம் குன்றிய தனது தந்தையைச் சந்திப்பதற்காக, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சிறையில் உள்ள மக்களவை உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத்திற்கு ( இன்ஜினியர் ரஷீத்) டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒரு வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது .
லைவ் லா தகவலின்படி, நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் மது ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தக் காலகட்டத்தில் ரஷீத் மருத்துவமனையில் உள்ள தனது தந்தையைப் பார்க்கலாம் அல்லது வீட்டிலேயே இருக்கலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. அவர் வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்.
1,000-க்கும் மேற்பட்ட ஹெஸ்பொலா இலக்குகளை அழித்ததாக கூறும் இஸ்ரேல்
பட மூலாதாரம், Getty Images
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெஸ்பொலா இலக்குகளை அழித்துவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
இருப்பினும், இந்தத் தளங்களை எப்போது அழித்தது என்பதை இஸ்ரேலிய ராணுவம் வெளியிடவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக, இஸ்ரேலிய ராணுவம் வெடி பொருட்களை காட்டும் சில புகைப்படங்களுடன் ஒரு ‘எக்ஸ்’ பதிவை வெளியிட்டுள்ளது.
இந்த இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஆயுதங்களைத் தங்கள் வீரர்கள் மீட்டெடுத்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 2-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, வேலூரில் அதிகபட்சமாக 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அரியலூரில் குறைந்தபட்சமாக 24.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. மலைப் பிரதேசங்களில் பொருத்தவரை கொடைக்கானலில் குறைந்தபட்சமாக 11.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
அதிக உயர்ந்தபட்ச வெப்பத்துடன் அதிக ஈரப்பதம் இருப்பதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அசௌகரியமான வானிலை நிலவ வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கத்திற்கு மத்தியில் ஹோர்மூஸ் நீரிணையை கடந்த ரஷ்ய சொகுசு கப்பல்
பட மூலாதாரம், Reuters
ரஷ்ய அதிபர் புதினின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவருடன் தொடர்புடைய ஒரு சொகுசு கப்பல், ஹோர்மூஸ் நீரிணை தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த போதிலும் அதை கடந்து சென்றுள்ளது.
142 மீட்டர் (465 அடி) நீளமுள்ள ‘நார்ட்’ என்ற இந்த கப்பல், தடைகளுக்கு உட்பட்ட ரஷ்ய பணக்காரர் அலெக்ஸி மோர்தாஷோவுக்கு தொடர்புடையது.
இந்த கப்பல், கடந்த வார இறுதியில் துபாயிலிருந்து ஓமான் நாட்டின் மஸ்கட் நகரத்திற்கு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சமீப மாதங்களில் இந்த நீரிணையை கடந்து சென்ற சில தனியார் கப்பல்களில் இதுவும் ஒன்றாகும்.
இரான் அதிஉயர் தலைவர் உயிருடன் உள்ளாரா? - அமெரிக்க வெளியுறவு செயலாளர் அளித்த பதில்
பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, மொஜ்தபா காமனெயி
இரானில் அதிகாரம், 'கடும்போக்கு சிந்தனை' கொண்டவர்களின் கைகளிலேயே இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரூபியோ கூறுகையில், "மதரீதியாக கடும்போக்கு சிந்தனை கொண்ட தனிநபர்கள், இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) அதிகாரிகளாக மட்டுமல்லாமல், இரானிய அரசியலிலும், அவர்களைச் சுற்றியுள்ள ஆலோசனைக் குழுக்களிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்." என்றார்.
இந்தப் பேட்டியின்போது, இரானின் புதிய அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி உயிருடன் இருப்பதாக அவர் கருதுகிறாரா என்று ரூபியோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மார்கோ ரூபியோ, "ஆம்; அவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எங்களிடம் உள்ளன, ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அவர் உயிருடன் இருப்பதாக இரானும் தொடர்ந்து கூறி வருகிறது," என்று தெரிவித்தார்.
ஆயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு அதிஉயர் தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா காமனெயி-யின்எந்தவொரு காணொளி அல்லது ஒலிப்பதிவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும், ஊடகங்களில் அவரது எழுத்துப்பூர்வமான செய்திகள் மட்டுமே வெளியாகியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
'பொருளாதார அணு ஆயுதம்' - இரானைக் குறிப்பிட்டு மார்கோ ரூபியோ கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மார்கோ ரூபியோ (கோப்புப் படம்)
ஹோர்மூஸ் நீரிணையை "பொருளாதார அணு ஆயுதம்" எனக் குறிப்பிட்ட அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, இரான் அதனை உலகுக்கு எதிராகப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "உலக எரிசக்தியின் 20 முதல் 25 சதவிகிதத்தை தன்னால் முடக்க முடியும் என இரான் பெருமையாக கூறுகிறது. இரானுக்கு அணு ஆயுதங்கள் கிடைத்தால் கற்பனை செய்து பாருங்கள், அது ஒட்டுமொத்த உலகத்தையும் பணயம் எடுத்துவிடும்." என்றார்.
இந்த மோதலுக்குப் பிறகு இரான் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உலகம் புரிந்துகொள்ளும் என நம்புவதாகவும் மார்கோ ரூபியோ தெரிவித்தார். அணு ஆயுதத்தால் அடைய விரும்பும் இலக்குகளை தற்போது எண்ணெய் மூலம் இரான் நிறைவேற்றி வருகிறது என்றும் கூறினார்.
"மோதலுக்கு முன்பாக இரான் எதிர்கொண்ட பிரச்னைகள் அப்படியே தான் இருக்கின்றன அல்லது மோசமடைந்துவிட்டன. ஆனால் தற்போது அதனிடம் முன்பு இருந்ததைவிட பாதி எண்ணிக்கையிலான ஏவுகணைகள் மட்டுமே உள்ளன, எந்த தொழிற்சாலைகளும் இல்லை. அதன் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது," என்றும் அவர் தெரிவித்தார்.
இரானில் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை பற்றி பேசிய அவர், "இரானிய மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோமே தவிர, தெருக்களில் 30,000-இல் இருந்து 40,000 பேர் கொல்லப்படுவதை அல்ல." என்றார்.
"இரானின் புதிய முன்மொழிவில் டிரம்புக்கு திருப்தி இல்லை" என தகவல்
பட மூலாதாரம், Getty Images
இரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்நாடு அனுப்பிய புதிய முன்மொழிவு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு திருப்திகரமாக இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.
அந்த முன்மொழிவில் இரானின் அணுசக்தி திட்டம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பதே டிரம்பின் அதிருப்திக்குக் காரணம் என, அதிகாரிகளை மேற்கோள்காட்டி ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இந்த முன்மொழிவு பற்றி டிரம்ப் தனது மூத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் காரலின் லெவிட் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இரானுக்கு ஆதரவு பெறும் நோக்கில் கடந்த இரண்டு நாட்களில் பாகிஸ்தான், ஓமன் மற்றும் ரஷாவுக்குச் சென்றுள்ளார்.
இரான் மற்றும் அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையில், இரான் தனது முன்மொழிவை போன் மூலம் அனுப்பலாம் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
வணக்கம் நேயர்களே!
நேரலைப் பக்கத்தில் இன்று (28-04-2026) பிற்பகல் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது மோகன்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி கூறியது என்ன?
பட மூலாதாரம், Sajjad HUSSAIN / AFP via Getty Images
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே ஏற்பட்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) 'வரலாற்றுச் சிறப்புமிக்கது' என்று பிரதமர் நரேந்திர மோதி வர்ணித்துள்ளார்.
முன்னதாக, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் நியூசிலாந்து உறவுகளில் ஒரு 'வரலாற்று மைல்கல்' என்று குறிப்பிட்டிருந்தார்.
நியூசிலாந்து பிரதமரின் பதிவை எக்ஸ் தளத்தில் மறுபதிவு செய்த பிரதமர் நரேந்திர மோதி, "இன்று இந்தியா-நியூசிலாந்து கூட்டாண்மையில் ஒரு வரலாற்றுத் தருணம் பதிவாகியுள்ளது," என்று எழுதியுள்ளார். "இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நமது வளர்ச்சிப் பங்களிப்பிற்கு முன்னோடியில்லாத வேகத்தை அளிக்கும். இது இரு நாடுகளையும் இணைக்கும் ஆழமான நம்பிக்கை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் லட்சியத்தைக் காட்டுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமது விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், கைவினைஞர்கள், ஸ்டார்ட்அப்கள், மாணவர்கள் மற்றும் புத்தாக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் பயனடைவார்கள். இது வளர்ச்சிக்கான புதிய பாதைகளைத் திறக்கும், வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் நமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும்," என்று பிரதமர் நரேந்திர மோதி மேலும் கூறியுள்ளார்.
விவசாயம், உற்பத்தி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நியூசிலாந்தின் '20 பில்லியன் டாலர் முதலீடு' ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே திங்கள்கிழமை தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் சார்பில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து தரப்பில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.