You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாநிலங்களவையில் நரேந்திர மோதி: "எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சியை கலைத்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக"
ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து எவ்வளவு அதிகமாக சேற்றை வாரி வீசினாலும் அதை விட அதிகமாக தாமரை சிறப்பாக மலரும் என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இன்றைய உரையின்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுகவினரை பார்த்துப் பேசிய மோதி, "தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் அரசை காங்கிரஸ் கலைத்தது. அதனுடன்தான் இப்போது நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள்," என்று கூறினார்.
இந்தியாவில் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி 90 முறை ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் கட்சி. அதுவும் 50 முறை அந்த பிரிவை பயன்படுத்தி அரை சதம் அடித்தவர் இந்திரா காந்தி என்று மோதி குறிப்பிட்டார். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் சரத் பவார் அரசை மகாராஷ்டிராவிலும், என்.டி. ராமாராவ் அரசை ஆந்திராவிலும் கலைத்தது காங்கிரஸ் கட்சிதான் என்று பிரதமர் மோதி கூறினார்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை பதிலளித்துப் பேசினார்.
ஆனால், அவர் உரையைத் தொடங்கும்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஆளும் கட்சிக்கும் அதானி குழுமத்துக்கும் இடையிலான உறவு தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் கோஷமிட்டு பிரதமரை உரையாற்ற விடாமல் அமளியில் ஈடுபட்டன.
இருப்பினும் தமது உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோதி, நீங்கள் எவ்வளவு அதிகமாக சேற்றை வாரி வீசுங்கள். அதை விட அதிகமாக தாமரை சிறப்பாக மலரும் என்று உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி, தமது பேச்சைத் தொடர்ந்தார்.
"காங்கிரஸ் கட்சி இந்தியாவின் கிட்டத்தட்ட 6 தசாப்தங்களை வீணடித்தது. காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி தொடர்பான அனைத்து பணிகளையும் தாமதப்படுத்துவது மட்டுமே கலாசாரம் ஆக இருந்தது," என்று பிரதமர் கூறினார்.
"பயனாளிகள் திட்டங்கள் மூலம் பெரிய அளவில் இந்த தேசத்தின் மக்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறோம். கர்நாடகாவில், நாங்கள் (பாஜக) சுமார் 1 கோடியே 70 லட்சம் 'ஜன்தன்' கணக்குகளைத் தொடங்கியுள்ளோம்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் எல்பிஜி இணைப்புகளை வழங்கினோம். நிரந்தர தீர்வுகளைத் தேடுவதில் பாஜக கவனம் செலுத்துகிறது. எந்த நிலையிலும் தீர்வைத் தராமல் ஓடி விட மாட்டோம்," என்று நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர்
அவரது பேச்சின் பிற முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
உண்மையான மதசார்பின்மை அரசு என்பது அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதாகும். அதை நாங்கள் செய்து வருகிறோம்.
நாட்டில் 110 வளரும் வாய்ப்புள்ள மாவட்டங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவற்றின் வளர்ச்சியில் தொடர் கவனம் செலுத்தி செயல்திறன் மதிப்பாய்வு செய்ததன் காரணமாக இந்த மாவட்டங்களில் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் மேம்பட்டுள்ளன. இதன் மூலம் 3 கோடிக்கும் அதிகமான பழங்குடியினர் பயனடைந்துள்ளனர்.
நவீன இந்தியாவை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு, அளவு மற்றும் வேகத்தின் முக்கியத்துவத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புரிந்து கொண்டுள்ளது. ஆனால், அவர்களின் (காங்கிரஸ் கூட்டணி ஆட்சி) ஆட்சியில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன.
அவர்கள் (காங்கிரஸ்) 'கரீபி ஹடாவோ' (வறுமை ஒழிப்போம்) என்று கூறி 4 தசாப்தங்களாக எதுவும் செய்யவில்லை. ஆனால், நாட்டின் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.
கடந்த 3-4 ஆண்டுகளில் சுமார் 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஜன்தன் கணக்கு இயக்கத்தை தொடங்கினோம். கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 48 கோடி ஜன்தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
பெண்கள் நல திட்டங்கள்
இந்த அரசாங்கம், 11 கோடி கழிவறைகளை உருவாக்கி எங்கள் தாய், சகோதரிகளுக்கு மரியாதை கொடுத்திருக்கிறோம். அதற்காக பெருமைப்படுகிறேன். எங்கள் மகள்கள் படிப்பை பிரச்னையின்றி தொடர பள்ளியில் அவர்களுக்காக தனி கழிவறை கட்டினோம்.
அரசு அறிமுகப்படுத்திய முத்ரா யோஜனாவின் முக்கிய பயனாளிகளாக பெண்கள் உள்ளனர்.
எங்கள் மகள்களுக்காக ராணுவத்தின் கதவுகளைத் திறந்துள்ளோம். நாட்டைக் காக்க அவர்கள் சியாச்சினில் பணியாற்றுவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம்.
நாட்டு மக்கள் காங்கிரசை திரும்ப திரும்ப நிராகரித்து வருகின்றனர். மக்கள் அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து தண்டித்து வருகிறார்கள்.
இந்தியாவின் விவசாயத் துறையின் முதுகெலும்பு சிறு விவசாயிகள். அவர்களின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் மோதி பேசினார்.
சுமார் 1 மணி நேரம் 24 நிமிடங்களுக்கு பிரதமர் பேசிய பிறகு இருக்கையில் அமர்ந்தபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்றனர்.
காங்கிரஸ் விமர்சனம்
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதமர் நரேந்திர மோதி தயாராக இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் உணர்த்துகின்றன என்று காங்கிரஸ் எம்.பி ஆதிர்ரஞ்சன் செளத்ரி குற்றம்சாட்டினார்.
அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் பிரதமர் பதில் அளிக்கவில்லை என்று கூறிய அவர், ஊடகங்களை சந்தித்தால் அசெளகர்யமான கேள்விகளுக்கு பதிலளிக்க நேரிடும் என்பதால் அவற்றை பிரதமர் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்