You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் மழை - பள்ளிகளுக்கு விடுமுறை - படத்தொகுப்பு
தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் பிற மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்திருந்த நிலையில், எதிர்பார்த்தது போலவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை மேலும் இரு தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மழை நிலவரத்தை பிரதிபலிக்கும் சில புகைப்படங்களின் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்.
வடகிழக்கு பருவமழையையொட்டி அரக்கோணம், சென்னை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 அணிகள் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இதில் 13 அணிகள் அரக்கோணத்திலும் மற்ற இரு அணிகளில் தலா ஒன்று சென்னை மற்றும் நீலகிரியில் உள்ளதாகவும் என்டிஆர்எஃப் படையணியின் கமாண்டன்ட் அருண் தியோகம் தெரிவித்துள்ளார்.
மழை தொடர்ந்து பெய்த போதிலும் சென்னை நகரில் புறநகர் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக, வடகிழக்கு பருவ மழை ஆயத்தப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மழை வெள்ளம் தீவிரமாகும்போது அதன் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விவரித்தார். இது தொடர்பான காணொளியையும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்த கூட்டத்தைத்தொடர்ந்து அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில், "வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும், கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்ற பாதிப்புகள் நேராத வகையில் தடுக்க வேண்டும், மண்டல அளவில் பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும், நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும், மின்சாரம் சார்ந்த விபத்துகளைத் தடுக்க வேண்டும்," என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சென்னை நகரில் மழை நீர் தேங்கிய சாலைகளில் சூப்பர் சக்கர் எனப்படும் தண்ணீர் உறிச்சி சாதனத்துடன் கூடிய லாரி உதவியுடன் தண்ணீரை உறிச்சி எடுக்கும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்.
இதேவேளை, தொடர் மழை காரணமாக சென்னை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அதனால் அந்த பாதையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களும் அதன் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் சுரங்கப்பாதையின் மேல் பகுதி வழியாக செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகரில் மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 044-25619206, 044-25619207, 044-25619208 ஆகிய தொலைபேசி உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இத்துடன் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று அரசு கூறியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்