You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தி வயர்' மீது பாஜக புகாரின் பேரில் போலிச் செய்தி வெளியிடுவதாக வழக்குப் பதிவு
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும், மேற்கு வங்கத்தில் அக்கட்சியின் இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியாவின் புகாரின் பேரில், 'தி வயர்' என்ற செய்தி இணையதளம் மீது தில்லி போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அமித் மாளவியா, தன்னைப் பற்றியும் சமூக ஊடக நிறுவனமான 'மெட்டா' (பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) பற்றியும் 'போலி செய்திகளை' வெளியிடுவதாகக் கூறி 'தி வயர்' மீது மோசடி குற்றம் சாட்டியுள்ளார்.
எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகும் இதுவரை தி வயர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் வரவில்லை.
மறுபுறம், 'தி வயர்' தனது முன்னாள் ஆலோசகரான தேவேஷ் குமார் ஒரு செய்தியில் புனையப்பட்ட விவரங்களை முன்வைத்ததாகக் குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் போலீஸார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
அமித் மாளவியா போலீசில் அளித்த புகாரில், தேவேஷ் குமாரின் பெயர் இல்லை.
இந்தப் புகாரில், 'தி வயர்' நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், சித்தார்த் பாட்டியா, எம்.கே.வேணு, துணை ஆசிரியர் மற்றும் செயல் செய்தி தயாரிப்பாளரான ஜான்வி சென், 'தி வயர்'-ன் உரிமையாளர் நிறுவனமான 'பவுண்டேஷன் ஃபார் இன்டிபென்டன்ட் ஜர்னலிசம்' மற்றும் பலர் மீது ஏமாற்றி, போலியான ஆவணங்களை தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமித் மாளவியா வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் 'தி வயர்'-ன் பல்வேறு செய்திகளின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனது தரப்பை முன்வைத்தார். இதில் அவர் கூறுகையில், 'த வயர்' நிறுவனம் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி இந்த மாதம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தொடர்பான பல போலியான செய்திகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
விவரம் என்ன?
செய்தித் தளமான 'தி வயர்' அக்டோபர் மாதத்தில் மெட்டா தொடர்பான தொடர் செய்திகளை வெளியிட்டது.
மெட்டாவின் 'XCheck List' அல்லது 'Cross Check' திட்டத்தின் மூலம் அமித் மாளவியாவுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது. இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி, மெட்டாவின் பல்வேறு தளங்களில் வெளியிடப்பட்ட அரசுக்கும் பாஜகவுக்கு எதிரான எந்த வகையான பதிவையும் மாளவியா நீக்கியிருக்கலாம் என்று தி வயர் அறிக்கை கூறுகிறது.
அமித் மாளவியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது கட்சியான பாஜகவுக்கு எதிரான நூற்றுக்கணக்கான பதிவுகளை பல்வேறு மெட்டா தளங்களில் இருந்து அகற்றியதாக இந்த அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த அறிக்கைகள் மெட்டாவிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாக 'தி வயர்' கூறியது. ஆரம்பத்தில், 'தி வயர்' அதன் ஆதாரங்கள் உறுதியானவை என்று கூறி, தன் நிலையில் உறுதியாக இருந்தது. ஆனால் மெட்டாவின் தகவல் தொடர்புத் தலைவர் ஆண்டி ஸ்டோன் அத்தகைய ஆதாரம் எதுவும் இல்லை என்று மறுத்தார்.
'தி வயர்' தனது கருத்தை நிரூபிக்கவும் தனது மற்றும் தனது கட்சியின் பிம்பத்தை உடைக்கவும் மெட்டாவின் உள் மின்னஞ்சல் ஒன்றை மேற்கோள் காட்டியதாகவும், அது உண்மைக்குப் புறம்பானது என்றும் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னர் 'தி வயர்' இந்த சர்ச்சைக்குப் பிறகு அது தொடர்பான தனது செய்தியை வாபஸ் பெற்று அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளது.
'டெக் ஃபாக்' என்ற செயலி குறித்து 'தி வயர்' ஒரு போலி செய்தியை முன்பு வெளியிட்டதாக மாளவியா மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் இடுகைகளை நிறுத்த பாஜக இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறது என்று கூறப்பட்டதாகவும் பின்னர் பொய்யானது மற்றும் இட்டுக்கட்டப்பட்டது என்பதால் அது நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஒரு ட்வீட்டில், "எனது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, 'தி வயர்' மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடிவு செய்தேன். கிரிமினல் வழக்குகள் போடுவது மட்டுமின்றி, போலி ஆவணங்கள் தயாரித்து என் நன்மதிப்பை கெடுத்ததற்காக சிவில் வழக்கும் தொடுப்பேன்" என்று மாளவியா குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், "தி வயர்' மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்கள் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் கிரிமினல் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்பது தெளிவாகிறது. என்னைச் சிக்க வைப்பதற்காகப் பொய்யான ஆதாரங்களை வெளியிட்டார்கள்." என்று அவர் குற்றம் சாட்டினார்.
சட்டப்பூர்வ தீர்வைத் தவிர வேறு வழியில்லை என்று மாளவியா கூறினார்.
மன்னிப்பு கேட்ட 'தி வயர்'
அமித் மாளவியாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, சித்தார்த் வரதராஜன் ஆங்கில நாளிதழான தி இந்துவிடம், "முதலில் வெளியிடப்பட்ட செய்தி, 'தி வயர்' ஆலோசகர் தேவேஷ் குமார் அளித்த விவரங்களின் அடிப்படையிலானது என்று கோரப்பட்டது" என்றார்.
இதற்கு 'தி வயர்' மன்னிப்புக் கேட்டதுடன், உள் செயல்முறைகளை மேலும் மேம்படுத்த ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார். 'தி வயர்' தற்போது மெட்டா தொடர்பான அனைத்துச் செய்திகளையும் திரும்பப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் 'தி வயர்' மன்னிப்பு கேட்டது, "பத்திரிகையாளர்கள் தங்கள் செய்திகளுக்காக ஆதாரங்களை நம்பியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் பெறும் தகவலைச் சரிபார்க்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்" என்றும் அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது.
"தொழில்நுட்பம் தொடர்பான சான்றுகள் மிகவும் சிக்கலானவை மற்றும் மோசடி எப்போதும் எளிய முயற்சியால் பிடிபடாது. அதுதான் எங்களுக்கு நடந்தது" என்று தன் தரப்பு வாதத்தை முன்வைத்தது 'தி வயர்'.
மேலும், அந்த அறிக்கையில், "எந்தவொரு பதிப்பக நிறுவனத்துக்கும் கிடைத்த தகவல் தவறானதாக இருக்க வாய்ப்புண்டு. பதிப்பகம் பிடிவாதமாக இருக்கிறதா அல்லது உண்மையை ஒப்புக்கொள்கிறதா என்பதே ஒழுக்கத்திற்கான சோதனை. நாங்கள் தவறான தகவலைப் பெற்றோம் என்பதை உணர்ந்ததும், உண்மையை ஒப்புக்கொண்டோம்" என்று குறிப்பிடப்பட்டது.
"இந்தத் தகவலை 'தி வயர்' -க்கு அளித்தவர் வேறொருவரின் அழுத்தத்தின் பேரில் எங்களை ஏமாற்றினாரா அல்லது தனது சொந்த விருப்பத்தின் பேரில் செயல்பட்டாரா என்பது வரும் காலங்களில் நீதித்துறை மூலம் தீர்மானிக்கப்படும். ஆனால், 'தி வயர்' புகழுக்குக் களங்கம் ஏற்படுத்த சதி நடந்துள்ளது என்பது தெளிவாகிறது. இதைத் தவிர, நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை" என்கிறது அந்த போர்ட்டல்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்