பெங்களூரூ வெள்ளம்: ஐ.டி. தலைநகர் நீரில் மூழ்கியபோது குடும்பங்கள் உதவிக்கு போராடியது எப்படி?

இந்தியாவின் தகவல்தொழில்நுட்பத்துறையின் தலைநகரமாக விளங்கும் பெங்களூரூவில், சமீபத்தில் பெய்த பருவமழையால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்மட்டம் உயர்ந்ததால் வீடுகளில் சிக்குண்ட குடும்பங்கள் உதவிக்காக போராடியது குறித்து செய்தியாளர் ருத்ரனேல் சென்குப்தா விவரிக்கிறார்.

செப்டம்பர் 5 ஆம் தேதி மாலையில், ருச்சே மிட்டலும், அவரது கணவர் மனீஷும் மழைநீர் வடிவதில் சிக்கல் தோன்றுவதை உணர்ந்தனர்.

தொழில்முனைவரான ருச்சே மற்றும் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநரான அவரது கணவரின் உயர்மட்ட சுற்றுப்புறமான ஒயிட்ஃபீல்டில் உள்ள வீட்டு வளாகம் கடும் மழையால் தண்ணீர் பெருக தொடங்கியது.

டி-செட் என்று அழைக்கப்பட்ட வீட்டு குடியிருப்பில் இருந்த இந்த தம்பதியின் முதல் மாடியில் இருந்த வீடு பாதுகாப்பாக இருந்தது. ஆனால், நோய்வாய்ப்பட்ட மனிஷின் தந்தைக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.

அவர்களின் சுற்றுப்புறத்தில் சற்று வெள்ளம் பெருகுவது அசாதாரணமானது அல்ல. ஆனால், நள்ளிரவில், அவர்களின் வளாகத்தின் தரை தளம் மற்றும் அடித்தள வாகன நிறுத்துமிடம் வெள்ளத்தில் மூழ்கியது. தங்களது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய பலரும், உயரமான தளங்களுக்கு சென்றுவிட்டனர். பலர் வெளியேறி கொண்டிருந்தனர்.

"நள்ளிரவு 2 மணி அளவில் உதவிக்காக அழைக்க தொடங்கினோம். ஆனால், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. உதவ முடியாமல் அவர்கள் இருப்பதையும் கூறவில்லை" என்று தொலைபேசியில் கூறினார் ருச்சே.

உறவினரின் வீட்டுக்கு தங்களின் தந்தையை மாற்ற அவசர ஊர்தி கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கடும் மழையால் வாகன நிறுத்துமிட அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால், அவர்களின் கார்கள் சேதமடைந்திருந்தன.

அப்போதே, இன்னும் மோசமான நிலைமை உருவாகலாம் என்று எண்ணி அங்கிருந்து பலரும் வெளியேறியிருந்தனர். ஆனால், பல குடும்பங்கள் அங்கேயே தங்கியிருந்தன. மின்சாரம் ஓரளவு சீராக வந்தாலும், கழிவுநீர் மாசுபாட்டால் குழாய் நீர் ஏறக்குறைய நிறுத்தப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் இந்த தம்பதி உதவியை தேட ஆரம்பித்தனர். அந்த வளாகத்தில் தனி வீட்டில் வாழ்ந்து வந்த நுண்ணுயியல் நிபுணரான மருத்துவர் சீமந்தினி தேசாய், தெலைபேசி அழைப்பை கேட்டு எழுந்தார். "உங்கள் வீடு வெள்ளத்தில் மூழ்கி கொண்டிருக்கிறது" என்று அருகில் வாழ்ந்த நண்பர் ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.

சில மணிநேரங்களுக்கு முன்பு, அவரது கணவரான மருத்துவர் சதீஷ் ருத்ரப்பாவை, விமான நிலையத்தில் கொண்டுவிட சீமந்தினி சென்றிருந்தார்.

அழைப்பு கிடைத்தவுடன், அவர் செய்த முதல் வேலை, தன் மகனை இரண்டு மாடியுடைய வீட்டுக்கு அனுப்பி, நான்கு பூனைகள், ஒரு சேவல் மற்றும் ஒரு கோழியை மீட்டு, அவர்களின் வீட்டின் இரண்டாவது மாடிக்கு கொண்டு சென்றது.

"பின்பு, நான் காவல்துறை நண்பரை அழைத்தேன். அவர் வந்து ஒரு நண்பராக என்னை காப்பாற்றுவதாகவும், ஆனால், அந்த குடியிருப்பு வளாகம் முழுமைக்கும் உதவும் நிலையில் தாம் இல்லை என்றும் அவர் கூறினார்" என்று சீமந்தினி கூறினார்.

ஆனால், "அது மட்டும் போதாது" என்று சீமந்தினி கூறிவிட்டார். காரணம், அவரது வீடு இருந்த வளாகத்தில் உள்ள வீடுகளில், படுத்த படுக்கையாக 85 வயது மூதாட்டி இருந்தார். மேலும், அவரது வீட்டின் இடதுபுறத்தில் இருந்த வீடுகளில் 92, 88 மற்றும் 80 வயதுடைய மூன்று மூத்த குடிமக்கள் இருந்தனர், அவர்களுக்கு முதலில் உதவி மிகவும் தேவை என்று அவர் நம்பினார்.

பின்பு, அவரது வளாகத்தின் எல்லைச்சுவர் இடிந்து விழுந்து, நீர் உள்ளே வர தொடங்கியது. அவரது வீடும் வெள்ளத்தில் மூழ்க தொடங்கியது. அவருடைய கை மணிக்கட்டு வரை தண்ணீர் பெருகியது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு நண்பரை அழைக்க, அவர் உள்ளூர் நகர நிர்வாகத்தின் தொலைபேசி எண்களை வழங்கினார். ஆனால், அவர்களிடம் இருந்து எந்த பதிலையும் அவர் பெறவில்லை.

இறுதியில், பேரிடர் நிலைமைகளின்போது செயல்படும் சிறப்பு குழுவான, தேசிய பேரிடர் நிவாரண படையின் (என்டிஆர்ஃஎப்) ஆய்வாளர் ஒருவர் அவருடைய அழைப்புக்கு பதிலளித்து, உதவி செய்வதாக உறுதியளித்தார்.

1990-களில் தகவல் தொழில்நுட்பத்துறை பெரிய வளர்ச்சி கண்டபோது பெங்களூரூவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒயிட்ஃபீல்டில் அதிக கட்டுமானங்கள் நடைபெற்றன.

பெங்களூரூ-வின் பல ஏரிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பிற்கு கீழே இப்பகுதி உள்ளதால், வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, இங்குள்ள நீர்நிலைகளின் மீதும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

"இரண்டாயிருத்து பதினேழாம் ஆண்டு எங்கள் வளாகத்தில் சிலர் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து வருவதை நான் கண்டறிந்தேன். இதே போல ஏழு, எட்டு சமூகங்களில் நிகழ்ந்தன. அது முதல் அந்த நிலங்களை திருப்பி அளிக்க வேண்டும் என்று நான் கூறி வந்தேன். அதுவே, எச்சரிக்கை மணியாக அமைந்துவிட்டது", என்று ருச்சே கூறினார்.

இரண்டாயிரத்து பதிமூன்றாம் ஆண்டு திருமணம் முடிந்தவுடன், இந்த தம்பதி ஒயிட்ஃபீல்டிலுள்ள வீட்டில் குடியேறியது. அந்த இடத்தின் பசுமை மற்றும் நீர் மறுசுழற்சி, தண்ணீரை சூடாக்க சூரிய எரிசக்தி ஆகிய புதுப்பிக்கதக்க எரிசக்தி சிறப்புகளால் அவர்கள் கவரப்பட்டனர்.

"இது போன்று நிகழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை" என்கிறார் ருச்சே.

செப்டம்பர் 6ம் தேதி காலையில் இந்த தம்பதிக்கு ஓர் அவசர ஊர்தி கிடைத்தது. அந்த வாகனம் வந்தபோது, என்டிஆர்ஃஎப் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவின் உதவியும் வந்து சேர்ந்தது. வயதானோரையும், அதிக பாதிப்புக்குள்ளானோவோரையும் படகு மூலம் வெளியேற்ற அந்த குழு உதவியது.

அவர்களின் வீட்டு வளாகத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக ருச்சே தெரிவித்தார். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் பாதுகாப்பாக வெளியற்றப்பட்டன.

ருச்சே-க்கும் உதவி கிடைத்தது. அவரது விலங்குகளோடு ஓரிடத்தில் தங்குவதற்கு நன்பர் ஒருவர் அவருக்கு உதவினார்.

அவரது மகன், வீட்டு உதவியாளர் மற்றும் சில நகைகள் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் வீட்டின் உரிமை ஆவணங்கள் ஆகியவற்றோடு அவர் வெளியேறி இருந்தார். கடைசியாக மலேசியாவில் இருந்து அவரது கணவரிடமிருந்து அழைப்பு வந்தது.

"நடப்பவற்றை அவரிடம் சொன்னபோது, அவர் முதலில் சொன்னது, 'கடவுளே! என் நோயாளிகளின் எம்ஆர்ஐ ஸ்கேன் அறிக்கைகள் அங்கு உள்ளன, அவற்றை வெளியே கொண்டு வர முடிந்ததா? என்பதுதான்" என்று ருச்சி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: