You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக ஜார்கண்ட்டில் செய்வது என்ன? முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பதவிக்கு ஆபத்தா?
ஜார்கண்டில் எழுந்துள்ள புதிய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அன்று, ஆளும் கூட்டணி அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் சோரனுக்கு தங்கள் ஆதரவு இருப்பதாக உறுதியளித்தனர். காங்கிரஸ் தலைவரும் ஜார்கண்ட் சுகாதாரத் துறை அமைச்சருமான பன்னா குப்தா நேற்று, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி வலிமையோடு நிற்கிறது எனக் குறிப்பிட்டார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.
மேலும் நேற்றைய சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறியவர், "இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக பிரச்னையின் அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நாளை மீண்டும் சந்திப்பு நிகழும்," என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தில் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜார்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஹேமந்த் சோரனை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
என்ன நடந்தது?
வியாழக்கிழமையன்று தலைமை தேர்தல் ஆணையம் ஆளுநருக்கு சோரனை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்தாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரன் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "இந்த விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்தோ அல்லது ஆளுநரிடம் இருந்தோ எந்தவித தகவலும் இதுவரை வரவில்லை," என்று கூறப்பட்டிருந்ததாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது. ஹேமந்த் சோரன், தேர்தல் ஆணைய அறிக்கை, ஜார்கண்டில் எதிர்க்கட்சியாக இருக்கும் 25 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவால், ஆட்சியைக் கலைப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார். கடந்த பிப்ரவரி மாதத்தில், பாஜக ஆளுநரிடம் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்யுமாறு மனு அளித்தனர். அந்த மனுவை, ஆளுநர் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியதாகவும் மே மாதத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பந்து டிர்கி நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது கட்சியின் தலைமை கூட்டணியில் இருக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு ஆதரவளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார். மேலும், "அரசு பெரும்பான்மையில் தான் இயங்கும். ஜாமுமோ-காங்கிரஸ் கூட்டணியிடன் பெரும்பான்மை உள்ளது," என்றவர் பாஜக இந்தக் கூட்டணி அரசைக் கலைக்கவே தொடர்ந்து முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.
ஜார்கண்ட் சட்டமன்றத்தில் 81 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்தவர்கள். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளார்.
அதோடு, மத்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை இதுகுறித்த தனது அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகருக்கு அனுப்பப்படும்.
ஹேமந்த் சோரன், தற்போது பர்ஹைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இது நடந்தால் அவர் அந்தப் பதவியில் நீடிக்க மாட்டார்.
மற்றொரு ட்வீட்டில், சோரன், "துரதிர்ஷ்டவசமாக, உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பிரதமரும் நாட்டின் பழங்குடியினத் தலைவரும், பழங்குடி சமூகமான எங்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதைக் கூட சரியானதாகக் கருதவில்லை. அவர்களுடைய பார்வையில், நாங்கள் பழங்குடிகள் இல்லை, காட்டில் வசிக்கும் மக்கள் தான்," என்று தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவை குறிவைத்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசும் பாஜகவும் ஒரு தீயவட்டத்தை உருவாக்கினாலும் பரவாயில்லை. நான் ஒரு பழங்குடியின் மகன். நான் ஜாட்கண்ட் மகன். நாங்கள் அச்சப்படக் கூடியவர்கள் இல்லை, போராடக்கூடியவர்கள்," ட்வீட் செய்துள்ளார்.
ஹேமந்த் சோரனின் மற்றொரு ட்வீட்டில், "பழங்குடியின மக்களை காட்டில் வசிக்கும் மக்கள் என்று அழைப்பது எந்தவிதத்தில் பயமுறுத்தும்! நாங்கள் பழங்குடிகள், எங்களுடைய டி.என்.ஏ-வில் பயம் என்பதே இல்லை," என்று குறிப்பிட்டார்.
ஆட்சி மீதும் நாற்காலி மீதும் தனக்குப் பசி இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், ராஜ் பவனில் தனக்கு எதிராக சதி நடப்பதாக ஹேமந்த் சோரன் குறிப்பிட்டர். அதுகுறித்து "கடந்த 5 மாதங்களாக என்னை பதவியிலிருந்து நீக்க ராஜ்பவனில் சதி நடக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்