குஜராத்தில் கள்ளச்சாராயத்திற்கு 42 பேர் பலியானது எப்படி? பிபிசி கள ஆய்வு

    • எழுதியவர், ராக்ஸி கக்டேகர் சாரா
    • பதவி, பிபிசி குஜராத்தி, படோடில் இருந்து

குஜராத்தின் படோட் மாவட்டத்தில் உள்ள ரோஜிட் கிராமத்தில் பெண்கள் கதறி அழுதுகொண்டிருந்தனர். இந்த கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிலர் மனதில் வேதனையுடன் இருந்தனர். சிலர் போலீஸ் வாகனங்கள், மீடியா கேமராக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் குழுக்கள் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உடல்கள் திறந்த டிராக்டர்களில் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, வரிசையாக வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டன.

ரோஜிட் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இது மறக்க முடியாத காட்சி. கள்ள சாராயத்தை தடுக்கத்தவறிய உள்ளூர் நிர்வாகத்தையும், போலீசாரையும் இந்த கிராம பெண்கள் கடுமையாக வசைபாடுகின்றனர்.

படோட் மாவட்டத்தின் பிற கிராமங்களிலும் கள்ள சாராயம் குடித்து மக்கள் இறந்துள்ளனர். ஆனால் ரோஜிட் கிராமத்தில்தான் உயிரிழப்பு அதிகம். அகமதாபாத் மாவட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களில் குறைந்தது எட்டு பேர் இறந்துள்ளனர்.

மது இல்லாமல் சாக்கடை சுத்தம் செய்வது எப்படி?

30 வயதான வாஷாராம் வகேலா, ஒரு துப்புரவுத் தொழிலாளி. அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை கள்ள சாராயம் குடித்தபிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் தனது மனைவி சோனல் மற்றும் மூன்று குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார். மூத்த குழந்தைக்கு 11 வயதுதான் ஆகிறது.

பிபிசியிடம் பேசிய அவரது மனைவி சோனல், தான் ஒரு நாளைக்கு 150-200 ரூபாய் மட்டுமே சம்பாதிப்பதாகவும், இப்போது தனது மூன்று குழந்தைகளை வளர்ப்பது இயலாத காரியம் என்றும் கூறினார்.

இந்த சிறிய கிராமத்தில் தினமும் வேலை கிடைப்பது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.

வகேலாவின் சகோதரி காமுபென்,இந்த சோகத்திற்கு உள்ளூர் காவல்துறைதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். கிராமத்தில் கள்ளச்சாராய வியாபாரத்தை தடுக்க காவல்துறை தவறிவிட்டது என்கிறார் அவர். தனது சகோதரர் சாக்கடையை சுத்தம் செய்வார் என்றும் சாக்கடையை சுத்தம் செய்ய மது அருந்துவது அவசியம் என்றும் இந்த வேலையை செய்யாவிட்டால் குடும்பத்தை எப்படி நடத்துவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

காமுபென் தனது அண்ணி சோனலுக்கு வேலை தரப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

"இந்த குற்றத்திற்கு அரசு பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும். அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கு வேலை கிடைக்கச்செய்ய வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

20 ரூபாய் சாராயத்தால் மரணம்

வாஷாராம் வகேலாவின் வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு வீட்டில் தீபக் வகேலாவும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்துள்ளார். தீபக் தனது மனைவி மனிஷா மற்றும் இரண்டு பெண்களை விட்டுச் சென்றுள்ளார்.

பிபிசியிடம் பேசிய அவரது மனைவி மனிஷா, தனக்கும் தன் பெண்களுக்கும் இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்று கூறினார்.

தனது கணவரைப் பற்றி விவரித்த மனிஷா, 'ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் வீடு திரும்பியபோது, அருகில் உள்ள இடத்தில் இருந்து 20 ரூபாய்க்கு வாங்கிய சாராயத்தை குடித்திருந்தார். இரவில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் சொன்னார்.ஆனால் எங்களால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.அடுத்த நாள் நாங்கள் பண்ணை வேலைக்குச் சென்றோம். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் வாந்தி எடுக்க ஆரம்பித்தார். பார்ப்பதற்கு சிரமமாக இருப்பதாக அவர் கூறினார். நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், சில மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்துவிட்டார்,"என்று கூறினார்.

விஷ சாராயம் அருந்தியவர்களின் வீடுகளில் ஏறக்குறைய இதே நிலைதான் இருந்தது. மருத்துவமனைகள் மற்றும் கிராமங்களுக்கு இடையே ஆம்புலன்ஸ்கள் சென்று கொண்டிருந்தன. மருத்துவமனை ஊழியர்கள் எப்படியாவது மக்களைக் காப்பாற்றவேண்டும் என்று முயற்சி செய்தனர்.

பெரும்பாலான நோயாளிகள் பர்வாலாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பாவ்நகர் அல்லது அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் போலீசார் என்ன செய்தனர்?

இந்த சம்பவத்தில் இதுவரை 42 பேர் இறந்துள்ளனர் மற்றும் 97 பேர் பவநகர் மற்றும் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பவநகரில் உள்ள சர் டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் வென்டிலேட்டரில் இருப்பதாக பாவ்நகர் ஐஜி அசோக் யாதவ் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட 3 எப்ஐஆர் அறிக்கைகளில் 11 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க குஜராத் காவல்துறை, மாநிலம் தழுவிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

படோட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கரண்ராஜ் வகேலாவிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால் அது முடியவில்லை.

அகமதாபாத்தில் , நரோல் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து எடுக்கப்பட்ட மெத்தனால் மக்களின் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக குஜராத் காவல்துறை தலைமை இயக்குநர் ஆஷீஷ் பாட்டியா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர ஐபிஎஸ் சுபாஷ் திரிவேதி மற்றும் டிஐஜி நிர்லிப்த் ராய் (மாநில கண்காணிப்பு பிரிவு) உள்ளிட்ட சில அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை குஜராத் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. தனது குழு ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தும் என்று சுபாஷ் திரிவேதி கூறியுள்ளார்.

கிராம மக்கள் கூறுவது என்ன

ரோஜிட் கிராமத்தின் தலைவர் ஜிகர் துங்ரானியிடம் பிபிசி பேசியது. மார்ச் மாதம் சட்டவிரோத மதுபானம் தொடர்பாக பர்வாலா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

"ஒரு 15 வயது சிறுவன் கடையில் இருந்து மதுவை வாங்கிக்குடிப்பதைப்பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தேன்.ஆனால் இங்கு மதுபானம் தயாரிக்க மெத்தனால் பயன்படுத்தப்படுவது எனக்குத்தெரியாது.அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த சோகத்தை தவிர்த்திருக்கலாம்."என்றார் அவர்.

மது விற்பனையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு உள்ளூர் போலீசார் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை நடத்த அனுமதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

தாலுகா அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மது விற்பனை குறித்த பிரச்னையை எழுப்பியதாகவும், ஆனால் அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் படோட் சட்டமன்ற எம்எல்ஏவும் காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ் கோஹில் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விஷயத்தை விரிவாகப் புரிந்து கொள்ள, உள்ளூர் பாஜக தலைவரும் முன்னாள் படோட் எம்எல்ஏவுமான லால்ஜி மெரிடமும் பிபிசி பேசியது.

"இதற்கு காரணமானவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகின்றனர். எனது காலத்தில் இதுபோன்ற விற்பனை இடங்கள் இருக்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பதவிக்காலம் தொடங்கிய பிறகுதான் இவை அனைத்தும் நடந்தன,"என்று அவர் கூறினார்.

அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?

குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெகதீஷ் தாக்கூர், எதிர்க்கட்சித் தலைவர் சுக்ராம் ராட்வா, செயல் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, ஹிதேந்திர பிதாடியா மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க வந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் தாக்கூர், மதுபான மாஃபியாவுக்கு சுதந்திரம் அளித்ததற்கு மாநில அரசுதான் பொறுப்பு என்று கூறினார்.

மதுபான மாஃபியாக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை பாஜக தேர்தல் நிதியாக பயன்படுத்துவதாகவும், காவல்துறை மற்றும் உள்ளூர் பாஜக தலைவர்களின் துணையுடன் இந்த சட்டவிரோத இடங்கள் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதே சமயம், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஊடகங்களிடம் பேசுகையில், சட்டவிரோத மதுபானம் விற்று கிடைக்கும் பணம் எங்கு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: