You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜஸ்தானில் பதற்றம்: தலையை வெட்டி இளைஞர் கொலை, வீடியோ பதிவு செய்து மிரட்டல்
- எழுதியவர், மோஹர் சிங் மீனா
- பதவி, பிபிசி ஹிந்தி
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், செவ்வாய்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒருவர் வாளால் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உதய்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்ட போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
"இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள பீமில் இருந்து பிடிக்கப்பட்டுள்ளனர்" என்று காவல்துறை டி.ஜி. எம்.எல்.லாதர் கூறினார்.
உதய்பூர் ஆட்சித்தலைவர் தாரா சந்த் மீனா மற்றும் எஸ்பி மனோஜ் குமார் மற்றும் 12 காவல் நிலையங்களின் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
உதய்பூர் மாவட்ட ஆட்சியர் தாராசந்த் மீனா அமைதி காக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, உதய்பூரின் சில பகுதிகளில் தீ வைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன என்று செய்தி முகமையான ANI தெரிவிக்கிறது.
எஸ்பி மனோஜ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஒரு கொடூரமான கொலை. சில குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சில குற்றவாளிகளை போலீஸ் குழுக்கள் தேடி வருகின்றன. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
உதய்பூர் போலீசார் சொல்வது என்ன?
நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் கொலை நடந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி "அனைத்து ஆவணங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தற்போது நடப்பு நிலைமையை நாங்கள் சமாளித்து வருகிறோம். எல்லாவற்றையும் பரிசீலித்து ஆட்சியருடன் ஆலோசித்து வருகிறோம்," என்றார்.
நூபுர் ஷர்மாவுக்கு எதிராக பதிவை எழுதியவரைக் கொல்லுமாறு முஸ்லிம் ஒருவர் தூண்டிவிடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
கொலைசெய்யப்பட்ட கன்ஹையா லால் தேலி
கன்ஹையா லால் தேலி, உதய்பூரின் தான்மண்டி காவல் நிலையப் பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார்.
செவ்வாய்கிழமை மதியம் துணி தைக்க வந்திருப்பதாக்கூறி இவரின் கடைக்கு வந்தவர்கள் அவரை கடையில் இருந்து வெளியே இழுத்து வந்து வாளால் வெட்டினர்.
இதில் கன்ஹையா லால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
ஒருவர் வாளால் வெட்ட மற்றொருவர் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்.
இந்து அமைப்புகளின் கோபம்
இந்த சம்பவத்தையடுத்து இந்து அமைப்புகள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது. நகரின் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. காலவரையற்ற கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கேலாட், அமைதி காக்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"உதய்பூரில் நடந்த இளைஞரின் கொடூரமான படுகொலைக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். குற்றவாளிகள் அனைவர் மீதும் (இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள்) கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவல்துறை குற்றத்தின் வேர் வரை செல்லும். அமைதி காக்குமாறு அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொரு நபரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்."என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்வதன் மூலம் சூழலைக் கெடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வீடியோவைப் பகிர்வதால், சமூகத்தில் வெறுப்பைப் பரப்பும் குற்றவாளியின் நோக்கம் வெற்றியடையும்"என்றும் முதலமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்