டாஸ்மாக் கடைகளில் தினமும் விற்பனையாகும் மது பாட்டில்களை திரும்பப்பெறுவது சாத்தியமா? சாதக பாதகங்கள் என்ன?

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவதைப் பற்றி தமிழக அரசு ஆலோசித்து அறிக்கை தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 5,400 டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் சராசரியாக விற்பனையாகும் சுமார் 10 லட்சம் பாட்டில்களை திரும்பப் பெற முடியுமா, அப்படி பாட்டில்களை பெறுவதால் என்ன பயன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒன்று கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், விற்பனையின்போது 10 ரூபாய் அதிகப்படியாக வசூலித்துக்கொண்டு, மதுபாட்டிலை திரும்பக் கொடுப்பவர்களுக்கு அந்தத் தொகையைத் திருப்பித் தரலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி, மே 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை, விற்பனை செய்யப்பட்ட 29.31 லட்சம் பாட்டில்களில், 18.50 லட்சம் பாட்டில்களை மது அருந்துவோர் திருப்பி அளித்துள்ளனர். இந்த முறையால் சுமார் 63 சதவீத பாட்டில்கள் மீண்டும் கடைகளுக்கு வந்து சேர்ந்தன என அரசுத் தரப்பு தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏன் மதுபாட்டில்களை திரும்பப் பெறக்கூடாது என நீதியரசர்கள் கேட்டபோது, தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்து.

எனவே, மாநிலம் முழுவதும் பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான சாத்தியங்களை ஆலோசித்து அறிக்கையாக ஜூலை 15ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தமிழகம் முழுவதும் எப்படி பாட்டில்களை பெறுவது என டாஸ்மாக் நிர்வாகம் ஆழமான யோசனையில் இறங்கியுள்ளது.

வரவேற்கும் ஆர்வலர்கள்

டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் நகர்வு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்வதால், புதிய பாட்டில்கள் செய்ய செலவாகும் இயற்கை வளத்தை மிச்சப்படுத்தலாம் என்கிறார் சுற்றுசூழல் ஆர்வலர் டி. அருள்செல்வம்.

''கண்ணாடி பாட்டிலை மறுசுழற்சி செய்வதால் அரசுக்கு தயாரிப்பு விலை குறையும், அது லாபமாகவும் மாறும். அதோடு, புதிய புதிய பாட்டில்களை உருவாக்குவதற்குப் பதிலாக பழைய பாட்டில்களை மறுசுழற்சி செய்வதால், இயற்கை வளங்களைச் சுரண்டுவதும் குறையும்.

டாஸ்மாக் பாட்டில்கள் எவ்வாறு ஒவ்வொரு கடைகளுக்கும் கொண்டு சேர்க்கப்படுகிறதோ, அதேபோல, பாட்டில்களை மீண்டும் பெற்று மாவட்ட அளவில் மறுசுழற்சி மையங்கள் அமைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இந்தத் திட்டம் செயல்பட்டால், வனவிலங்குகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கண்ணாடி பாட்டில்கள் காலங்காலமாக குப்பையாகத் தேங்கி நிற்பது தடுக்கப்படும். இயற்கை வளமும் பாதுகாக்கப்படும்,'' என்கிறார் அருள்செல்வம்.

மேலும், "தமிழத்தில் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டால், அண்டை மாநிலங்களில் இருந்தும் மறுசுழற்சி செய்வதற்கான தொழில்வாய்ப்புகள் ஏற்படும்," என்கிறார் அவர்.

"அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட, சர்வேதேச அளவிலான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறியீடு 2022 (Environmental Performance Index-2022) வெளியிட்ட பட்டியலில் இந்தியா 180 ஆவது இடத்தில் இருக்கிறது. இதில், கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், இந்த அறிக்கையில் மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 180தான். இந்த நிலையில், தமிழகம் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முயன்றால், அது பிற மாநிலங்களையும் ஊக்குவிக்கும்,'' என்கிறார் அருள்செல்வம்.

அரசே செய்ய வேண்டும்

"தொடக்கத்தில் பாட்டில்களை சேகரித்து, மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவருவது சிக்கலாகத் தெரிந்தாலும், சுற்றுச்சூழலின் பாதுகாப்பைக் கருதி இந்த மாற்றத்தை ஏற்படுத்தினால், வருங்காலத்திற்குப் பெரிதும் பயனளிக்கும்" என்கிறார் தமிழக அரசின் சுற்றுசூழல் துறை இயக்குனராகச் செயல்பட்ட எஸ்.பாலாஜி.

''டாஸ்மாக் கண்ணாடி பாட்டில்களை அரசே திரும்ப வாங்கிக்கொண்டு மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒருவிதம் என்றால், உடைந்த கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சிக்குக் கொண்டு செல்வது மற்றொருவிதம். தற்போது பேப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களைச் சேகரிக்கும் நபர்கள் எப்படி நாம் வசிக்கும் இடங்களில் பழைய பொருட்களைச் சேகரிக்கிறார்களோ, அதுபோல கண்ணாடி பாட்டில்களை சேகரித்து மறுசுழற்சிக்குக் கொண்டு சேர்ப்பதை அரசு ஊக்குவிக்கவேண்டும். உதாரணமாக, டாஸ்மாக் பாட்டிலை திருப்பிக் கொடுப்பவருக்கு ஐந்து ரூபாய் கொடுக்கலாம். ஏதாவதொரு வடிவில் முதலில் ஊக்குவிப்பு தேவை. பின்னர் அதுவே பழக்கமாக மாறிவிடும்,'' என்கிறார் பாலாஜி.

சுற்றுசூழலைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் பாராட்டப்படவேண்டிய செயல்தான். அதேநேரம், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்பப் பெறுவது டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலும் பணிச்சுமையைக் கூட்டும் என்கிறார் தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சம்மேளனம்(சிஐடியு) பொதுச்செயலாளர் திருச்செல்வன்.

டாஸ்மாக் ஊழியர்களை நினைத்துப்பாருங்கள்

''வனப்பகுதிகளில் பாட்டில்கள் வீசப்படுவது தொடர்பான வழக்கு இது. இதில், தமிழகம் முழுவதும் அதேபோல பாட்டில்களை பெறலாமே என நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளதை ஏற்க முடியாது. ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தில் சோதனை முறையில் டாஸ்மாக் கடைகளில் திரும்பி வாங்கப்பட்ட பாட்டில்களை டெண்டர் விடாமல் அடுக்கி வைத்துள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள 5,400 கடைகளில் தினமும் விற்பனையாகும் சுமார் 10 லட்சம் பாட்டில்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பாட்டில்கள் மீண்டும் கடைகளுக்கு வந்தால், அவற்றை நாங்கள் எப்படிக் கையாள்வது? இதற்கும் டாஸ்மாக் ஊழியர்களைப் பயன்படுத்துவார்கள். ஏற்கெனவே எங்களுக்குப் பணிச்சுமை அதிகம். அதோடு, மதுபாட்டிலின் விலையை விட பத்து ரூபாய் அதிகம் பெற்று, திருப்பிக் கொடுப்பது என்பதில் மதுகுடிப்பவர்களிடம் வாக்குவாதம் ஏற்படும். இதில் டாஸ்மாக் ஊழியர்களின் கருத்துகளைக் கேட்டுத்தான் முடிவு செய்யவேண்டும்,'' என்கிறார் திருச்செல்வன்.

''மதுகுடிப்பவர்கள் பயன்படுத்திய பாட்டிலை நாங்கள் தொடர்ந்து கையாண்டால், எங்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடு பற்றியும் யோசிக்கவேண்டும். தினமும் எச்சிலுடன் இருக்கும் பாட்டில்களை தொட்டு அடுக்கி வைக்கும் வேலையைச் செய்வதால் எங்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும்,'' என்றும் கூறுகிறார் திருச்செல்வன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: