You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில், ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பிள்ளைகளைப் பறிகொடுத்தப் பெற்றோர் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து கலங்கி இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவர். தோல்வி அடைந்ததன் விரக்தியே இவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் காரணமாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் பிரச்னை குறித்தும் கவனம் செலுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுத்தேர்வு முடிவு:
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 2 நாள்கள் முன்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. தேர்வு முடிவுகளில் 10-ம் வகுப்பில் 90.07 சதவீதம் பேரும், 12-ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வில் தோல்வியால் விபரீதம்
10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்தாலும், மதிப்பெண் குறைவாக பெற்றதாலும் விரக்தியடைந்த மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 25-க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வட மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகம்
இந்த தற்கொலை சம்பவம் பெரும்பாலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் மனநல ஆலோசகராகவும், நல்வழிபடுத்துவராகவும், தன்முனைப்பாளரகவும் நடந்து கொள்ள வேண்டும், அதேபோல் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நிச்சயம் அதிக நேரம் செலவிட வேண்டும் என்கிறார், குழந்தைகள் உரிமைக்கான செயற்பாட்டாளர் தேவநேயன் மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது;
"கொரோனா காரணமாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த இடைவெளி விழுந்து விட்டது. இணைய வழி கல்வி என்பது முற்றிலும் பயனளிக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போது கணக்கு பாடத்தில் தான் அதிக பேர் தேர்ச்சி பெறாமல் இருக்கிறார்கள்.
மாணவர்களின் பின்புலத்தை ஆசிரியர்கள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் ஆனால், நடைமுறையில் அவ்வாறு கிடையாது. தற்போதைய சூழலில் கல்வி என்பது மதிப்பெண் அடிப்படையிலேயே உள்ளது. அதை கண்டிப்பாக மாற்ற வேண்டும். தனிநபரின் திறன் மேம்பாட்டுக்காக இந்த கல்வி பயன்பட வேண்டும்.
ஒருநாள் இரவில் மனப்பாடம் செய்துவிட்டு மறுநாள் காலை மனப்பாடம் செய்ததை எழுதுவதால் அந்த மாணவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது. குழந்தைகளுக்கு வாழ்க்கை திறன் கல்வியை நிச்சயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் படிப்பில் பின்தங்கிய மாணவர்களிடம் ஆசிரியர்கள் உறவாட வேண்டும். மாணவர்கள் தங்களது வாழ்க்கை திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும், தோல்வியை எதிர்கொள்வதற்கும், தாங்கிக் கொள்வதற்கும், சவால்களை ஏற்றுக் கொள்வதற்கும் ஆசிரியரின் பங்கு அதிகம் உள்ளது. எனவே ஆசிரியர்கள் அறம்சார்ந்த பயிர் செய்ய வேண்டும்.
குழந்தைகளின் தனித்திறமையை தெரிந்துகொள்வதற்கு பெற்றோர்களுக்கு தற்போது நேரமில்லை. குழந்தைகளிடம் தாராளமாக நேரத்தை செலவு செய்தால் குழந்தைகளின் தனித்திறமையை பெற்றோர்களால் தெரிந்துகொள்ள முடியும். தன் பிள்ளைகளிடம் என்ன தனி திறமை இருக்கிறது என்பதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும். அந்த திறமையில் தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும்" என்றார்.
அமைச்சர் வேண்டுகோள்
"10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் தவறான முடிவு எடுக்க வேண்டாம்" என, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் கூறி தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்