You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தெலங்கானாவில் போராட்டம் தீவிரம் - ஒருவர் பலி, 14 பேர் காயம்
இந்திய அரசு அறிவித்திருக்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனுடன், அரசியல்வாதிகள் முதல் முன்னாள் ராணுவ அதிகாரிகள் வரை, பலரும் அந்த திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த வாரம் செவ்வாய்கிழமையன்று, ராணுவத்தில் குறுகிய கால பணி அடிப்படையில் ஆள்சேர்க்கை நடத்துவதற்காக அக்னிபத் என்ற புதிய திட்டத்தை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். ஆனால் மோதி அரசின் இந்த திட்டத்துக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த திட்டத்துக்கு பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் எதிர்ப்பு கடுமையாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் வேலூரிலும் ராணுவ பணியில் சேர ஆர்வம் மிகுந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் செகந்திராபாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் சுரேகா அபூரி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ பகுதியில் ஒருவர் பலியானார். ஆனால், அவர் எப்படி உயிரிழந்தார் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.
அக்னிபத் திட்டம் என்றால் என்ன?
- இத்திட்டத்தின் கீழ் சுமார் 40 ஆயிரம் இளைஞர்கள் 90 நாட்களுக்குள் தேர்வு செய்யப்படுவார்கள்.அவர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
- ஆட்சேர்ப்பு வயது 17.5 ஆண்டுகள் முதல் 21 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
- இந்த ஆண்டு மட்டும் சேர்க்கைக்கான வயதுத் தகுதி வரம்பு 23 வயதுடையவர்கள் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி 10வது அல்லது 12வது தேர்ச்சி
- ஆள்சேர்ப்பு நான்கு ஆண்டுகளுக்கு இருக்கும்.
- முதல் ஆண்டு சம்பளம் மாதம் 30 ஆயிரம் ரூபாய், நான்காம் ஆண்டு மாதம் 40 ஆயிரம் ரூபாய்.
- நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சேவையின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, 25 சதவீத வீர்கள் ராணுவ பணியில் முறைப்படுத்தப்படுவார்கள்.
இதற்கிடையே, கிழக்கு மத்திய ரயில்வேயின் கூற்றுப்படி, போராட்டங்கள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் 3.45 மணி வரை 164 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 64 ரயில்களின் பயணம் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
பிகார், உத்தர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பல இடங்களில் ரயில் பெட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை 300க்கும் அதிகமான ரயில் சேவைகள் இந்த போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ரயில்வே என்பது தேசத்தின் சொத்து, அதை எந்த வகையிலும் பாதிக்காமல் இருப்பது அனைவரின் பொறுப்பு என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறுபுறம், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தங்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்காது என்று கூறுகின்றனர். ஏற்கெனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய எதிர்காலம் கேள்விக்குரியதாகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த திட்டம் குறித்து தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்தும் மாறுபட்டுள்ளது.
ஒரு பிரிவினர், இளைஞர்கள் மற்றும் ராணுவத்தினருக்கான சிறந்த திட்டம் இது என்றும், இளைஞர்களின் எதிர்காலத்துடன் அரசு விளையாடுவதாக வேறு பிரிவினரும் கூறுகின்றனர். சிலர் தேசிய பாதுகாப்பிற்கு இத்திட்டம் அச்சுறுத்தலாக அமையலாம் என்றும் அச்சம் வெளிப்படுத்துகின்றனர்.
திட்டத்திற்கு ஆதரவான வாதங்கள்
உத்தராகண்ட் ஆளுநரும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதியுமான லெஃப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங், அக்னிபத் திட்டத்தை இளைஞர்களுக்கான சிறந்த வாய்ப்பு என்று அழைக்கிறார்.
"என் வாழ்நாள் முழுவதும் ராணுவத்தில் தான் கழிந்தது. எனது தந்தையும் ராணுவத்தில் இருந்துள்ளார். நானே 40 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். அக்னிபத் திட்டம் மற்றும் அக்னிவீர் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ராணுவ சேவையில் உள்ள பல அதிகாரிகள், ஜவான்கள், ஜேசிஓக்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமும் நான் பேசியுள்ளேன், நமது பாதுகாப்புப் படையில் இளைஞர்களின் எண்ணிக்கையை இது அதிகரிக்கும். அவர்களின் திறமைகள் அதிகரிக்கும் என்பதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு," என்கிறார் குர்மீத் சிங்.
அதே நேரத்தில், ராஜீய நிபுணரான பிரம்ம செலானி, அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவாக பல ட்வீட்களை செய்துள்ளார்.
"பல நாடுகளில் அவற்றின் ராணுவ பலம் என்பது பெரும்பாலும் அவற்றில் குறுகிய கால பணியில் உள்ள வீரர்களையே சார்ந்துள்ளது. புதிய வீரர்களுக்கான ஆள்சேர்ப்பு விதிகள் மூலம், இந்திய ராணுவம் இன்னும் சில அடிப்படை சீர்திருத்தங்களை நோக்கி நகர வேண்டும். மேலும் சைபர் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது," என்று பிரம்ம செலானி தெரிவித்தார்.
"குறுகிய காலத்திற்கு படை வீரர்களை இந்தியா நியமிப்பதால் ஏராளமான இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, அமெரிக்க ராணுவத்தில் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சிக்குப் பிறகு மட்டுமே புதிய வீரர்களை களப் பணியில் சேர்க்க முடியும்," என்று அவர் கூறுகிறார்."குறுகிய கால மற்றும் இளம் வீரர்களை பணியமர்த்தினாலும், எந்த சீர்திருத்தத்தையும் எதிர்க்க இந்திய ஜனநாயகம் வாய்ப்பளிக்கிறது. புதிய ஆள்சேர்ப்பு விதிகள் ராணுவத்தில் உள்ள வீரர்களின் சராசரி வயதை 32ல் இருந்து 25 ஆக குறைக்க உதவும். ஜவான்கள் நிரந்தர பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் காவல்துறை மற்றும் பிற சேவைகளில் சேரலாம்."
இந்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங், "ராணுவத்தில் சேர விரும்பினால், அதற்கான செயல்முறை அப்படியே இருக்கும். தகுதி பெறுவோருக்கு உடல் தகுதி, மருத்துவ தகுதி சோதனை நடத்தப்படும். ராணுவத்தில் சேருவது சுற்றுலாவுக்கு வருவது போன்றதல்ல. ராணுவத்தில் சேருவது கடினமான பணிதான். அதில் சேர விரும்பும் எவரும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். நீங்கள் கடினமான இடங்களில் பணியமர்த்தப்படலாம். அந்த வகையில் ராணுவ பணிக்கான செயல்முறையில் எந்த மாற்றமும் இருக்காது. அதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை," என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், "இப்போதுதான் அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது செயல்வடிவம் பெறட்டும். இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை அதன் செயலாக்கத்தை வைத்துப் பார்ப்போம். எல்லா திட்டங்களிலும் முன்னேற்றங்கள் நடக்கின்றன," என்று கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி தமது ட்விட்டர் பக்கத்தில், "அக்னிபத் ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து அக்கறை கொண்ட இளைஞர்களை நானும் புரிந்து கொள்கிறேன். இந்தியாவிற்கு அதிநவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு இளம் ஆயுதப்படை தேவை என்பதே உண்மை. இந்திய ஆயுதப்படைகள், வேலைவாய்ப்பு உத்தரவாதம் திட்டம் போல அமைந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பாஜக எம்பி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அதிகபட்ச வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் அதிகரிப்பது குறித்து ட்வீட் செய்துள்ளார், மேலும் இது பாராட்டத்தக்க முடிவு என்று கூறியுள்ளார்.
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "இந்த ஆண்டு உச்ச வயது வரம்பு 21லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அரசு எடுத்துள்ள முடிவு இளைஞர்களுக்கு பயனளிக்கும். அக்னிவீரராக மாற இளைஞர்களிடையே உற்சாகம் பெருகும்," என்று கூறியுள்ளார்.
முப்படை தளபதிகள் அக்னிபத் திட்டத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ், ஜூன் 24ஆம் தேதி முதல் விமானப்படை புதிய நியமனங்களை தொடங்கும் என்று விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் செளத்ரி கூறியுள்ளார்.
இதேவேளை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அக்னி வீரர்களுக்கான பயிற்சி தொடங்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு மத்தியில் அவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் இந்தத் திட்டம் பாதுகாப்புத்துறையில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
திட்டத்திற்கு எதிரான வாதங்கள்
ஆனால், இந்த திட்டத்தில் குறைபாடு இருப்பதாக சில முன்னாள் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்திய அரசின் அக்னிபத் திட்டம் குறித்து, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவின் கூட்டாளியுமான கேப்டன் அமரிந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தி நிறுவனமான பிடிஐக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'ராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அக்னிபத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார். 'அரசாங்கம் ஏன் இவ்வளவு பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று தான் யோசிப்பதாகவும்' அவர் கூறினார்.
ஒரு ராணுவ வீரருக்கு நான்கு வருட வேலை என்பது மிகக் குறுகிய காலம் என்பது தமது கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி சங்கர் பிரசாத், "ஒரு வகையில் இது வேலை வாய்ப்புகளுக்கு நல்ல திட்டம். இதனால் அரசுக்கு நிதி ரீதியாக பலன் கிடைக்கும். செலவும் ஓரளவு குறையும்" என்றார்.
"ஆனால் மறுபுறம், இது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். நான்கு ஆண்டுகளுக்கான ஆட்சேர்ப்பு திட்டம், ஆறு மாத கால பயிற்சியை உள்ளடக்கியது. மீதமுள்ள மூன்றரை வருடங்களில் சுமார் இரண்டு ஆண்டுகள் பணிக்கு செல்வதாக இருந்தாலும், வீரர்களின் வருடாந்திர விடுப்பு போன்றவற்றை கணக்கிட்டால் மேலும் ஆறு மாதங்கள் கடந்து விடும். ஆக எஞ்சியுள்ள இரண்டரை வரும் மட்டுமே ஒரு அக்னி வீரரின் களப்பணிக்காலம். இந்தியாவுக்கு மேற்கு, வடகிழக்கு எல்லைகள் உள்ளன. நாட்டிற்குள்ளும் சில இடங்களில் கிளர்ச்சி உள்ளது. இவற்றையெல்லாம் சமாளிக்க பயிற்சி பெற்ற மற்றும் ஊக்கம் பெற்ற வீரர்கள் தேவை."
"சில வருடங்களுக்கு முன்பு இந்திய ராணுவம் எல்லை கோட்டிற்கு அப்பால் சில பணிகளைச் செய்தது. இந்த அக்னிவீரர்களால் அத்தகைய நடவடிக்கைகளில் போதிய அனுபவமின்றி வேலை செய்ய முடியுமா? இரண்டாவதாக, நம்மிடம் உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் இருந்தால், இந்த கையாளும் தொழில்நுட்ப ரீதியிலான பயிற்சியை அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.
உபகரணங்களை கற்றுக்கொள்வது எப்படி. அடிப்படை இராணுவப் பயிற்சி இப்போது ஒன்பது மாதங்களை உள்ளடக்கியது. ஆனால், அக்னி வீரர்களுக்கான பயிற்சிக்காலம் ஆறு மாதங்கள் என சொல்கிறார்கள். அந்த பயிற்சி முடிந்ததும் அவர்கள் ராணுவ பிரிவுகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுவார்கள் என்பது பற்றிய தெளிவு இல்லை என்கிறார் சங்கர் பிரசாத்.
மறுபுறம், காங்கிரஸ் எம்பி தீபேந்தர் சிங் ஹூடா, இந்த திட்டம் நாட்டின் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று விவரித்தார்."அக்னிபத் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் ஆபத்தானது. இதை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன். முதலில் விவசாயிகளுக்காக போராடினேன். இப்போது நான் அதை ராணுவ வீரர்களுக்காக செய்வேன். தேசிய பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பக்தி உணர்வுகளை இந்த அரசை விளையாட விட மாட்டேன்," என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, அரசின் நிதி நிலை மோசமடைந்து வருவதாகவும், பணத்தை மிச்சப்படுத்தவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
"நாட்டின் பொருளாதார நிலை மோசமாகி வருகிறது, எனவே இந்த பணத்தை சேமிக்க ராணுவத்தில் சேர விரும்பும் அடுத்த தலைமுறை இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறது அரசு," என்கிறார் அவர்.
ராணுவ வீரர்களை வேலைக்கு அமர்த்த முடியாது என பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.ராணுவ வீரர்களை பணியமர்த்த முடியாது, 21 வயதில் அவர்களை எப்படி முன்னாள் ராணுவ வீரர்களாக்குவது? இக்கட்டான சூழ்நிலையில் நாட்டைக் காக்கிறார்கள். அரசியல்வாதிகள் ஓய்வு பெறுவதில்லை, ராணுவ வீரர்களும், மக்களும் ஓய்வு பெறுவதில்லை. எங்களுக்கு வாடகை வீரர்கள் வேண்டாம். அக்னிபத். திட்டத்தை திரும்ப பெற வேண்டும்,'' என்றார் ஆதிர் ரஞ்சன் செளத்ரி.
பிகாரில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஜேடியுவின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங்கும் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.
அக்னிபத் திட்டத்தின் முடிவால் பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி, விரக்தி மற்றும் இருண்ட எதிர்காலம் (வேலையின்மை) பற்றிய அச்சம் தெளிவாகத் தெரிகிறது. மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த முடிவு நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்