வீரப்பன் அண்ணன் மாதையன்: 34 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னணி என்ன?

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு வனத்துறையை உலுக்கிய படுகொலை சம்பவம் அது.

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம். சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் கொங்குருபாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரம் உள்பட மூன்று பேர் வீரப்பனால் கொல்லப்படுகின்றனர். சந்தனக் கட்டைகளை கடத்தும் பணியில் இருந்த வீரப்பன் கும்பலைத் தடுக்க முற்பட்ட காரணத்தாலேயே இந்தப் படுகொலை நடக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக அதாவது 87 ஆம் ஆண்டு மே மாதம் தந்தக் கடத்தல் வழக்கில் பத்து மாத சிறைத் தண்டனையை நிறைவு செய்துவிட்டு வீரப்பனின் அண்ணன் மாதையன் என்கிற கூச மாதையன் விடுதலையாகிறார். 'அவர் விடுதலையான தகவல் எதுவும் வீரப்பனுக்குத் தெரியாது' என்கின்றனர், இதன் பின்னணியை அறிந்தவர்கள்.

இதன் காரணமாக கொலைச் சம்பவம் நடந்த இடத்திலும் மாதையன் இல்லை. இதற்காக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் (பங்களாபுதூர் காவல்நிலைய குற்ற எண்-192/1987)அவரது பெயர் இல்லை. 1989 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி தனது எதிரிகளான ஐயண்ணன், அய்யன்துரை, குணசேகர், தனபால், முத்துக்குமார் ஆகிய ஐந்து பேரை வீரப்பன் கொலை செய்கிறார். இந்த வழக்கில் அடுத்த 2 நாள்களில் மாதையன் கைது செய்யப்பட்டு மைசூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பிறகே சத்தியமங்கலம் வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் மாதையன் பெயர் சேர்க்கப்படுகிறது. வீரப்பனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பின்புலமாக இருந்த ஒரே காரணத்துக்காக மாதையன் பெயர் சேர்க்கப்பட்டது.

விளைவு, 34 ஆண்டுகள் நீண்ட நெடிய சிறைவாசம்; தொடர் மனஅழுத்தம்; இதயவால்வு பாதிப்பு எனத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி காலை 7 மணியளவில் மாரடைப்பால் சேலம் சிறையிலேயே மாதையன் இறந்துவிட்டார்.

யார் இந்த மாதையன்?

'' சிறைத்துறை அதிகாரிகளோடு இணக்கமான நட்பில் மாதையன் இருந்ததால் அவருக்குத் தேவையான உதவிகளும் கிடைத்து வந்தன. பரோலில் சென்றாலும் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார். தனது முன்விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக அவர் போராடி வந்தார். ஆனால், போதிய நிதியை திரட்ட முடியவில்லை. பரோலில் ஒவ்வொரு முறை வெளியில் வரும்போதெல்லாம், எங்கே சென்றாலும் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. அதனால், 'வெளியில் வந்து சுதந்திரமாக நடமாட வேண்டும்' என்பதுதான் அவருடைய கடைசி விருப்பமாக இருந்தது'' என்கிறார், வீரப்பன் தொடர்பான புத்தகங்களை எழுதிய மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியன்.

தொடர்ந்து பேசுகையில், '' மாதையனின் உறவினர்கள் பலரும் வரிசையாக இறந்துவிட்டனர். 2000 ஆம் ஆண்டில் மாதைய்யனின் மகன் மணிவண்ணன் சென்னையில் விபத்தில் மரணமடைந்தார், 2004 ஆம் ஆண்டு வீரப்பன் மரணம், 2018-ல் தங்கை முத்தம்மாள் மரணம், 2019 ஆம் ஆண்டு இரண்டாவது மருமகன் காசநோயால் மரணம் போன்றவை மாதையனுக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்தது. இதனால் மிகவும் மனம் சோர்ந்து போய் இருந்தார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தீபாவளி, பொங்கல் என விழா காலங்களில் பரோலில் வரும்போதெல்லாம் உறவினர்களை சந்தித்தார். கடந்த 2 ஆண்டுகளாக இதயவால்வு பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்'' என்கிறார்.

வீரப்பனை திசைமாற்றிய மாதையன்

வீரப்பனின் வாழ்வில் மாதையனின் பங்கு குறித்து விவரிக்கும் சிவசுப்ரமணியன், '' வீரப்பனுடன் பிறந்தவர்கள் அண்ணன் மாதையன், முத்தம்மாள், அர்ஜூனன், மாரியம்மாள் ஆகியோர். வீரப்பனின் காட்டு வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு வகித்தவர் மாதையன். குறிப்பாக, 'வீரப்பனை வேறு பாதைக்கு திசைதிருப்பியது மாதையன்தான்' என்பது மேட்டூர் செங்கப்பாடியில் உள்ள மக்களின் கருத்தாக உள்ளது. அதனால் அவர்களுக்கு மாதையன் மீது சற்று கோபமும் இருந்துள்ளது.

கைதிகளின் நன்னடத்தையை சிறைத்துறை அதிகாரிகள் விசாரிப்பதாக இருந்தால் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக உள்ளூரில் விசாரிப்பார்கள். 'குறிப்பிட்ட கைதி வெளியில் வந்தால் யாருக்காவது சிக்கல் வருமா?' என்பது அதில் முக்கியமானது. அந்தவகையில் செங்கப்பாடி மக்கள் யாரும் மாதையனுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரியவில்லை. இதற்கு உள்ளூரில் அவர் செய்த சில பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம்'' என்கிறார்.

தொடர்ந்து மாதையனின் குடும்பம் குறித்துப் பேசியவர், ''மாதையனின் மனைவி மாரியம்மாளுக்கு மேட்டூரில் உள்ள மூலக்காடு என்ற கிராமம்தான் சொந்த ஊர். செங்கப்பாடியில் 1990 ஆம் ஆண்டுகளில் வீரப்பனுக்குச் சொந்தமான வயல் ஒன்று இருந்தது. 'அந்த வயல் கொள்ளையடித்த பணத்தில் வாங்கப்பட்டதால் அதனைப் பறிமுதல் செய்ய வேண்டும்' என காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதினார். இதனால் கோபமடைந்த மாதையன், அந்தக் காட்டில் இருந்த மோட்டார் உள்பட அனைத்தையும் நொறுக்கிவிட்டார். இதன்பிறகு அந்த இடத்துக்கு மாரியம்மாள் செல்லவில்லை. அதேநேரம் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் மாரியம்மாளும் 93 ஆம் ஆண்டில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரையில் சிறையில் இருந்தார். தற்போது மூத்த மகளின் வீட்டில் அவர் வசிக்கிறார்'' என்கிறார்.

சிக்கலைக் கொடுத்த ஆதாயக் கொலை

''மாதையன் மீதான வழக்குகள் என்ன?'' என்றோம். '' தமிழ்நாட்டில் வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கு மட்டும்தான் அவர் மீது உள்ளது. கர்நாடகாவில் 4 கொலை வழக்குகளும் யானை வேட்டையாடியதாக 3 வழக்குகளும் உள்ளன. வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் அவருக்குத் தொடர்பில்லை. காரணம், சம்பவ இடத்திலும் இல்லை. இந்த வழக்கில் ஏழு குற்றவாளிகளை அடையாளம் காட்டிவிட்டு மற்றும் பலர் எனக் குறிப்பிட்டுள்ளனர். 1988 ஏப்ரல் மாதம் சிபிசிஐடி கைகளில் இந்த வழக்கு வருகிறது. கர்நாடக காவல்துறையின் உதவியோடு சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியபோது, 'வீரப்பனை அனைத்து வகையிலும் இயக்கியது கூச மாதைய்யன்' என்ற தகவல் கிடைக்கிறது. தவிர, மாதையனை ரேஞ்சர் சிதம்பரம் சிறைக்கு அனுப்பியுள்ளார் என்பதால், அவரைக் கொல்ல வேண்டும் என வீரப்பனை இவர் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சிதம்பரத்தைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் அவர் கழுத்தில் இருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலி, சம்பளப் பணம் 1,300 ரூபாய், கடிகாரம், மோதிரம், வனக் காவலர் சையது மகபூப்பிடம் பையில் இருந்த 400 ரூபாய், கிளார்க் உதயராஜிடம் இருந்த 437 ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்தது, தடை செய்யப்பட்ட ஆயுதத்தைக் கையில் வைத்திருந்தது எனக் கூடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவாகிறது. வெறும் கொலையோடு முடிந்திருந்தால் மாதையன் வெளியில் வந்திருப்பார். பணத்தை எடுத்ததால் இது ஆதாயக் கொலையாக மாறிவிட்டது. அதனால்தான் முன்விடுதலையில் சிக்கல் ஏற்பட்டது. எதிர்பாராத நெருக்குதலால் நடக்கும் கொலைகளை அரசு மன்னிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, போதை, ஆயுதக்கடத்தல் போன்றவற்றுக்கு தண்டனைத் தளர்வுகள் இல்லை. அதனாலேயே செய்யாத தவறுக்காக 34 ஆண்டுகள் மாதையன் சிறைப்பட நேர்ந்தது'' என்கிறார்.

அதென்ன 'கூச' மாதையன்?

''அதென்ன 'கூச' மாதையன்'' என்றோம். '' மேட்டூரை ஒட்டியுள்ள பெண்ணாகரம் உள்பட பல பகுதிகளில் மாதையன், அய்யன்துரை, பெருமாள், சின்னத்தம்பி என்ற பெயரில் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை அடையாளப்படுத்திக் காட்டும் வகையில் ஊர் பெயருடன் சேர்த்து அழைப்பது வழக்கம். ஒரு சிலரை பெற்றோர் அடையாளத்துடன் விளிப்பது வழக்கம். கூசன் என்பது மாதைய்யனின் அப்பா முனுசாமியின் பெயர். கூச்சம் இல்லாமல் அனைவருடனும் பழகக் கூடியவர். வசைபாடினாலும் கோவித்துக் கொள்ள மாட்டார் என்பது பொருள். அதன் காரணமாக 'கூசன் மகன்' மாதைய்யன் என்பது காலப்போக்கில் 'கூச' மாதைய்யன் என்பதாக மருவிவிட்டது. காவல்துறை ஆவணங்களிலும் 'கூச' மாதைய்யன் என்றே இருக்கிறது'' என்கிறார்.

இதையடுத்து, மாதையனின் விடுதலை தொடர்பாக தொடர்ந்து சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த வழக்குரைஞர் ச.பாலமுருகனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். '' 1989 ஆம் ஆண்டில் சந்தனக் கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதையன், நான்காண்டுகள் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். 93 ஆம் ஆண்டு சிறைத் தண்டனை நிறைவடைந்த பிறகு தமிழ்நாட்டில் நிலுவையில் இருந்த வழக்கில் அவரைக் கைது செய்தனர். 93 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தமிழ்நாடு சிறையிலேயே இருந்தார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆயுள் தண்டனை என்பது குறைந்தது 14 ஆண்டுகள்தான். இதனைக் கழித்தவர்களை விடுதலை செய்கின்றனர். அதேநேரம், முன்விடுதலையில் மனித உரிமை சார்ந்த கொள்கை முடிவுகள் எதுவும் அரசுக்கு இல்லை'' என்கிறார்.

"நீதிக்குக் கிடைத்த தோல்வி"

தொடர்ந்து பேசிய பாலமுருகன், '' சிறைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சில அரசாணைகளை வெளியிடுகின்றனர். அதன்படி, முன்விடுதலைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற பட்டியலை தயார் செய்கின்றனர். இதில், 'வனக்குற்றமும் ஆயுத தண்டனைச் சட்டமும் சேர்ந்து வந்ததால் முன்விடுதலைக்கு மாதையன் தகுதியில்லை' என முடிவு செய்துவிட்டனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அரசு பரிசீலிக்கவே இல்லை. அவர் வீரப்பனின் சகோதரர் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் வெளியில் விடவில்லை. சாதிரீதியாக பலம் வாய்ந்தவர்கள், அரசியல் லாபி செய்கிறவர்கள் எல்லாம் விடுதலையாகிச் சென்றுவிடுகின்றனர். இதற்கு மேலவளவு படுகொலை வழக்கு உள்பட பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும்'' என்கிறார் பாலமுருகன்.

'' மாதையனுடன் சேர்த்து ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறையில் உள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். ஆட்சிக்கு வந்ததும் பரிசீலிப்பதாக கூறினார். இதன் தொடர்ச்சியாக மாதையனின் விடுதலை தொடர்பாக அரசு பரிந்துரையை அனுப்பியும் ஆளுநர் மாளிகையில் கையொப்பமாகவில்லை என்ற தகவல் கிடைத்தது. ஆனால், இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. அதிக காலங்கள் மாதையன் சிறையில் இருந்தார். இங்கு மனிதஉரிமை ஆர்வலர்கள் மட்டுமே தனித்துப் போராட வேண்டிய நிலை. இரண்டு ஆயுள் தண்டனைக்கும் மேல் சிறைவாழ்வை அனுபவித்த மாதையனை விடுவிக்காததை நீதிக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் பார்க்கிறோம்'' எனக் குறிப்பிட்ட பாலமுருகன்,

ஞானப்பிரகாசத்தின் நிலை என்ன?

'' சிறைவாழ்வில் நோக்கமே, தண்டனைக் காலம் முடிந்து இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான். இவ்வளவு தாமதம் செய்ததற்கு பதிலாக அரசு அவரை தூக்கிலேயே போட்டிருக்கலாம். ஆயுள் தண்டனை என்ற பெயரில் மாதையனுக்கு மரண தண்டனையை கொடுத்துவிட்டனர். இனிவரும் காலங்களில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வீரபாரதி வழக்கில் நீதியரசர் நாகமுத்து கொடுத்த தீர்ப்பில், முன்விடுதலைக்குத் தகுதியுள்ளவர்களை பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் அவ்வாறு தகுதியில்லாதவர்களை 14 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது பரிசீலனை செய்யுங்கள் எனக் குறிப்பிட்டார். மாதையன் விவகாரத்தில் இந்த இரண்டுமே நடக்கவில்லை. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழுவையும் அரசு அமைத்தது. ஆனால், அதன் பரிந்துரைகள் வெளியில் வரவில்லை'' என்கிறார்.

மேலும், '' வீரப்பன் தொடர்பான வழக்கில் ஞானப்பிரகாசம் என்பவர் பெங்களூரு சிறையில் நீண்டகாலம் தவிக்கிறார். அவருக்கு முற்றிய நிலையில் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அவரும் விரைவில் மரணமடையும் நிலையில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் சிலர் தவறு செய்திருக்கலாம், சிலர் அப்பாவியாகவும் இருக்கலாம். ஆனால், நெடிய சிறைவாசத்தின் மூலம் தங்களின் குடும்பத்தினருடன் சேர முடியாத அவலநிலையில் தவிக்கின்றனர்'' என்கிறார்.

முன்விடுதலை துயரம் நீங்குமா?

மாதையன் மரணம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சிறைத்துறை தொடர்பான வழக்குகளைக் கையாளும் அரசு வழக்குரைஞர் வீ.கண்ணதாசன், '' சிறையில் நோய் மற்றும் வயது காரணமாக இறப்பு நேரிடுவது என்பது இயல்பான ஒன்றுதான். மாதையன் மரணத்தை மையமாக வைத்து கைதிகள் விவகாரத்தில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. சிறைவாசிகள் முன்விடுதலையில் பல்வேறு கூறுகளை ஆராய்ந்துதான் அரசு முடிவெடுக்க முடியும். குறிப்பாக, தண்டனைக் கைதியான பிறகு சட்டத்தின் அடிப்படையில்தான் அரசு செயல்பட முடியும். தமிழ்நாடு அரசுக்கு நீதியசரசர் ஆதிநாதன் குழு பரிந்துரைகளை கொடுத்த பிறகு தண்டனைக் குறைப்புக்கான வாய்ப்புகள் உருவாகும்'' என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: