You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீதா குப்புசாமி: உருவமோ நிறமோ உங்களின் அடையாளம் அல்ல - தொழில் முனைவோராக உயர்ந்த 'உயர மாற்றுத் திறனாளி'
- எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பவானி தேவபுரத்தைச் சேர்ந்தவர் கீதா குப்புசாமி. உயரம் குறைவாக இருக்கும் 31 வயது மாற்றுத்திறனாளி. உயரம் குறைவாக இருப்பதால் சமூகத்தில் பல்வேறு கேலி, கிண்டல்களை சந்தித்த இவர் இன்று மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...
உங்களை பற்றி சொல்லுங்கள்?
என் பெயர் கீதா குப்புசாமி. சொந்த ஊர் ஈரோடு. பி.காம் மற்றும் Diploma In (Co-op) படித்து முடித்திருக்கிறேன். அப்பா மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர். அம்மா ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சமையல் பணியில் உள்ளார். உடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி, ஒரு தங்கை. தம்பியும் என்னை போலவே உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி. தங்கைக்கு திருமணம் முடிந்து வேறு ஊரில் இருக்கிறார். நான் இப்போது ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் அமராவதி நகரில் அரசு இ சேவை மையம் நடத்தி வருவதுடன், புதிதாக கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறேன்.
உயரம் குறைவு என்பதால் சமூகத்தில் என்ன அழுத்தம் இருந்தது?
சிறுவயதில் இருந்தே உயரம் குறைவு பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். 2 அடி உயரம் தான் இருக்கிறாய், உன்னால் என்ன செய்து விட முடியும் என்று நினைப்பார்கள். உயரம் குறைவு தான் என்றாலும் எனக்கு கனவுகள் பெரிதாக இருக்கின்றன. பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பும், தனியார் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் கஷ்டப்பட்டு முடித்தேன். படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்ல முடிவெடுத்தேன். நிறைய இடங்களில் உயரத்தை காட்டி வேலையை நிராகரித்தார்கள். பிறகு அம்மா வேலை பார்க்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலேயே கணக்காளர் பணியில் சேர்ந்தேன்.
உங்களின் பொருளாதாரம் குடும்பத்திற்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது?
மிகவும் உதவியாக இருக்கிறது. எங்கள் 3 பேரையும் படிக்க வைக்க அப்பா மிகவும் சிரமப்பட்டார். நான் படித்து முடித்து வேலைக்கு சேர்ந்ததும் என்னுடைய வருமானம் என் குடும்பத்திற்கு பேருதவியாக இருந்தது. என் தங்கையின் திருமணத்தையும் என்னால் நடத்தி வைக்க முடிந்தது.
இப்போது தொழில்முனைவோராக இருக்கும் தருணம் எப்படி இருக்கிறது?
மகிழ்ச்சியாக இருக்கிறது. தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நான் கனவு. தினமும் செல்லும் வேலையை விட்டு விட்டு முதலில் நான் அரசு இ சேவை மையத்தை நடத்த தொடங்கினேன். என்னை போன்று பல மாற்றுத்திறனாளிகள் வேலை இல்லாமல் சிரமப்படுவதை பார்த்தேன். பிறகு இப்போது தோழியுடன் இணைந்து சிறிய அளவில் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். இங்கு 5 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் 5 பேருமே மாற்றுத்திறனாளிகள் தான்.
ஏன் மாற்றுத் திறனாளிகளை மட்டும் வேலைக்கு தேர்வு செய்திருக்கிறீர்கள்?
ஏனென்றால் நானும் மாற்றுத்திறனாளி தானே. என்னுடைய கடின சூழல்களை நான் தன்னந்தனியாவே கடந்து வந்திருக்கிறேன். சிறிய வயதில் என்னை வெளியே அனுப்பமாட்டார்கள். ஆனால் தொடர்ந்து போராடி வெளியே வந்திருக்கிறேன். இவர்களும் கஷ்டப்படக் கூடாது என்று வேலைக்கு தேர்வு செய்திருக்கிறேன். என்னிடம் வேலை பார்ப்பவர்களில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், கால் சரியாக நடக்க வராமல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆகியோர் இருக்கிறார்கள். இந்த சமூகம் அவர்களிடத்தில் உள்ள குறையை பார்க்கிறது. நான் அவர்களின் திறமையை மட்டும் பார்க்கிறேன்.
உங்களுடைய கனவு என்ன ?
என்னை போன்று ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக உயர வேண்டும். மாற்றுத்திறனாளி நலனுக்கு பல்வேறு புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும். அது தான் என்னுடைய கனவு.
இன்றைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
உங்களுடைய உருவமோ நிறமோ உங்களின் அடையாளம் அல்ல.. திறமை மட்டுமே உங்களின் அடையாளம்.
உங்களுடைய கனவுகளை யாருக்கும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். கனவுகளை வெல்ல ஒவ்வொரு நாளும் உங்களுடைய உழைப்பை கொடுங்கள். கேலிகளையும் கிண்டல்களையும் உங்களுக்கான உரமாக வைத்துக்கொண்டு முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டால் ஒரு நாள் நிச்சயம் உங்களுடைய கனவு நனவாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்