You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்தி மட்டுமே' அலுவல் மொழி' - புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பின் பின்னணி என்ன?
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தி மற்றும் ஆங்கிலம் என்று இருந்த அனைத்து அலுவல் பதிவு, கோப்புகள் இனி வருங்காலத்தில் இந்தியில் மட்டுமே இருக்கும் என்று ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
"வழக்கமாக ஜிப்மர் மருத்துவமனையில் பெயர் பலகை, பதிவு உட்பட அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளும் இருக்கும். ஆனாலும் சில இடங்களில் குறைபாடு இருப்பதாகவும், அதிகமாக ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதாக மத்திய ஆய்வின் போது அறிக்கை கொடுக்கப்பட்டது. ஆகவே இதனை கட்டாயமாக அனைத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்," என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், மத்திய அரசின் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்) செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த நிறுவனத்திற்கு புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலத்தவர்கள் உயர் சிகிச்சை பெற வருகின்றனர். இதற்கிடையே மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவலர் ரீதியான பயன்பாட்டிற்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பதிவு/சேவை புத்தகங்கள்/சேவை கணக்குகளில் உள்ள பொருள் மற்றும் தலைப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இனி வரும் காலங்களில் அனைத்துப் பதிவு/சேவைப் புத்தகங்கள்/சேவைக் கணக்குகள் முடிந்தவரை இந்தியில் மட்டுமே இருக்கும்," என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
'இந்தி மட்டுமே' என்ற ஜிப்மர் அறிக்கை வலுக்கும் எதிர்ப்பு
ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி தனது டிவிட்டரில், "ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்னையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை," என்று பதிவிட்டுள்ளார்.
'இந்தி மட்டுமே' - திடீர் அறிக்கை காரணம் என்ன?
இந்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் திடீரென வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கைக்குக் காரணம் என்ன என்பது குறித்து அறிய இயக்குநரைத் தொடர்பு கொண்டு பேச பிபிசி தமிழ் முயன்றது.
அப்போது ஜிப்மர் நிர்வாகம் தரப்பில் பிபிசிக்கு விளக்கமளித்த, ஜிப்மர் மக்கள் தொடர்பு அதிகாரி மருத்துவர் ராஜேஷ் நாச்சியப்பா கணேஷ், "அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற குழுவினர் ஜிப்மர் நிறுவனத்திற்கு ஆய்வு செய்ய வந்தனர். அவர்கள் இந்தியா முழுவதிலும் இந்த ஆய்வை மேற்கொள்வதாக தெரிவித்தனர். ஜிப்மர் நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. அதன் பொருட்டு இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளோம். ஆகவே நாடாளுமன்ற குழு ஆய்வு செய்வதற்கு முன்பாக "preparatory meeting" (ஆயத்த கூட்டம்) என்ற பெயரில் ஆய்வு நடத்த ஜிப்மர் நிறுவனத்திற்கு வருகை தந்தனர். அப்போது அவர்கள் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளனர். அந்த வழிகாட்டுதலின்படி கொடுக்கப்பட்ட அனைத்தையும் கட்டாயமாக நடைமுறைபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்," என்கிறார் அவர்.
இதனால் இந்தி மொழி தெரியாத ஜிப்மர் ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதே என்று பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த அவர், "மருத்துவ நிர்வாகம் தரப்பில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவித்துள்ளோம். ஆனால் எங்களால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாது. அரசாங்கம் பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்த மட்டுமே எங்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்திய நாடு பல மொழிகள் பேசக்கூடிய நாடு கண்டிப்பாக இதுபோன்ற சிக்கல்களை கலந்தாலோசித்துப் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவு எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது," என்றார் ராஜேஷ் நாச்சியப்பா கணேஷ்.
ஜிப்மரில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதாக மத்திய குழு அறிக்கை
"ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து பதிவு மற்றும் படிவங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளும் இருக்கும். ஆனாலும் சில இடங்களில் குறைபாடு இருப்பதாகவும், அதிகமாக ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஆய்வுக் குழு அறிக்கை கொடுத்துள்ளது. எங்களிடம் கட்டாயமாக செயல்படுத்தியாக வேண்டும் என்று அறிவுறுத்தியதால் மத்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் இதைச் செய்கிறோம். இதில் எந்தெந்த பதிவுகள் மற்றும் படிவங்களில் இந்த முறை மாற்றப்பட இருக்கிறது என்பது அந்த உத்தரவை அமல்படுத்தும் போது மட்டுமே தெரியவரும்.
மேலும் சட்ட வரைமுறைகளை மேற்கொள்காட்டி கட்டாயமாக இந்தியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். அடுத்தகட்டமாக முக்கிய ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தருவோம். அதற்குள் அனைத்தையும் அவர்கள் அறிவுறுத்தியபடி செயல்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கான புத்தகங்களை இந்தியில் வாங்க வலியுறுத்தல்
இதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மருத்துவ நிர்வாகம் தரப்பில் நாடாளுமன்ற குழுவிடம் கூறியது என்ன என்று கேள்வி எழுப்பினோம்.
அதற்குப் பதிலளித்த ஜிப்மர் மக்கள் தொடர்பு அதிகாரி, "இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தையும் அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.
மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிக்கு அனைத்துமே இந்தியில் இருந்தால், நோயாளிகள் சிரமப்படுவார்கள்.
இங்கு பணிபுரியும் இந்தி பேசக்கூடிய நபர்களுக்கே இந்தியில் படிவங்கள் இருந்தால் அவர்களாலேயே அலுவல் பணி செய்ய முடியாது.
இந்தியா முழுவதிலும் இருந்து இங்கே உள்ளனர். அனைவருக்கும் பொதுவான மொழியாக ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது இந்தியில் எழுதும் போது அதனால் ஏற்படும் பாதிப்புகள்.
அதுமட்டுமின்றி என்னென்ன வாங்க வேண்டும். அதில் இந்தி மொழி சார்ந்து இருக்க வேண்டும் இங்குள்ள நூலகத்தில் புத்தகம் வாங்குகிறோம் என்றால், மருத்துவ படிப்புகள் அனைத்துமே ஆங்கிலத்தில்தான் நடத்துகிறோம். ஆனால் 50 சதவீதத்திற்கு மேல் இந்தி புத்தகங்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்தியில் மருத்துவ புத்தகம் கிடையாது. அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை தெரியப்படுத்தியுள்ளோம்," என்று ஜிப்மர் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் நாச்சியப்பா கணேஷ் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்