நீட் விலக்கு மசோதா: "ஆளுநரின் காலவரம்பற்ற தாமதத்தால் தேனீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக"

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், திமுகவினரும் பங்கேற்கமாட்டார்கள் என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இருவரும் ஆளுநரை வியாழக்கிழமை ராஜ்பவனில் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது இந்த தகவலை செய்தியாளர்களிடம் கூறினார் தங்கம் தென்னரசு.

இன்று மாலை நடைபெற இருக்கும் தேனீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவையும் புறக்கணிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பும் விஷயத்தில் காலவரம்பற்ற தாமதம் செய்வதால் அது மக்களின் உணர்வுகளையும், கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவுகளையும், தமிழ்நாடு சட்ட மன்றத்தின் மாண்பையும் பாதிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தங்கம் தென்னரசு கூறினார்.

தேனீர் விருந்து புறக்கணிப்பு ஏன்?

"நீட் தேர்வு தமிழ்நாட்டு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறிப்பதோடு, தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு உள்ள உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது. எனவே 12ம் வகுப்புத் தேர்தவு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று கோரிக்கை இருந்து வருகிறது. இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் செப்டம்பர் 13ம் தேதி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவை உள்துறை ஒப்புதலுக்கு - ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் 142 நாள்களாக வைத்திருந்தார் ஆளுநர். பல தரப்பில் இருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதை தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பினார். மீண்டும் இந்த மசோதா சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மார்ச் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து இந்த மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கும்படி வலியுறுத்தினார். அப்போது முதல்வரிடம் பேசிய ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி அதற்கு ஒப்புதல் அளித்து அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைப்பதைத் தவிர தமக்கு வேறு வழியில்லை என்பதை ஆளுநர் ஒப்புக்கொண்டார்.

பிரதமரை சந்தித்த பிறகும்...

அதன் பிறகு, சமீபத்தில் டெல்லி சென்றபோது பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மசோதாவை உடனடியாக அனுப்பிவைக்க ஆளுநருக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இத்தனைக்கும் பிறகும் மசோதா ஆளுநர் மாளிகையிலேயே இருக்கிறது.

வரும் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான காலம் நெருங்குகிறது. ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்து, ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து பிறகு குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டால்தான் அது சட்டமாகும். எனவே, முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நானும், அமைச்சர் மா.சுப்ரமணியனும் ஆளுரை சந்தித்து, இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறிப்புப் பேசினோம். ஆனால், இதனை குறிப்பிட்ட காலத்துக்குள் அனுப்புவது குறித்து அவர் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை, சட்டமன்றத்தின் மாண்மை பாதிப்பதால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம். முதல்வர் பங்கேற்கமாட்டார்" என்று தெரிவித்தார் தங்கம் தென்னரசு.

அதிமுக பங்கேற்கும் - ஜெயக்குமார்

இதனிடையே இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், "இந்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். இது தமிழ் கலாச்சாரம். முதன்முதலில் இவ்வாறு நடத்தப்படுகிறது. இதில், தமிழ் பற்றாளர் என்ற முறையில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

பாரதியார் இந்திய விடுதலைக்காக குரல் கொடுத்த மகாகவி. அவருடைய சிலை திறப்பை புறக்கணிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. அதை ஏன் செய்யவில்லை?

முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி அரசியலமைப்பை தாண்டி செயல்பட்டதால்தான் ஜெயலலிதா அவர் அளித்த தேநீர் விருந்துகளை புறக்கணித்தார். இந்த தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்ளும்" என தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :