நீட் விலக்கு மசோதா: தமிழ்நாடு ஆளுநரின் நிலைப்பாடு சரியா? முன்னாள் நீதிபதிகள் கருத்து என்ன?

    • எழுதியவர், எம்.மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளும் திமுகவுக்கும் மாநில ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்திருக்கிறது. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்துகிறது.

ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? அவரை திரும்பப் பெற வைப்பதற்கு தமிழக அரசால் முடியுமா? ஆளுநர் தரப்பு கூறும் அரசியலமைப்பின் 200 மற்றும் 168ஆவது விதிகள் என்ன கூறுகின்றன?

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார் என்று திமுக தரப்பில் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியின் தரப்பு பிபிசிக்கு விளக்கம் அளித்திருந்தது.

"அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்கிய அதிகாரங்களின்படி பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும் கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அதை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி வைப்பார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதா அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை" ஆளுநர் தரப்பு கூறியிருந்தது.

இதையடுத்து இந்த மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் தமது பரிசீலனையில் உள்ளது தொடர்பாக பிபிசி தமிழிடம் ஆளுநர் ஆர்.என். ரவியும் பேசியிருந்தார்.

ஆளுநரின் விளக்கம் சரியா?

இந்த நிலையில், ஆளுநரின் இந்த விளக்கம் "தவறு" என்று பிபிசி தமிழிடம் கூறினார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.

"சட்டப்பேரவை நிறைவேற்றிய ஒரு மசோதாவை ஆளுநர் காலவரம்பின்றி தன்னிடம் வைத்திருக்கலாம் என அரசியல் சட்டம் அனுமதியளிக்கவில்லை" என்கிறார் அவர்.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பே மேலானது என்பதுதான் அரசியல் சட்டத்தின் சாராம்சம்" என்கிறார் அவர்.

இதே போன்ற கருத்தையே தெரிவித்தார் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.

"ஆளுநர் என்பவர் மாநில அரசுடன் இணக்கமாகச் செயல்பட வேண்டுமே தவிர, மாநில அரசின் முடிவுக்கு எதிராகச் செயல்பட முடியாது" என்றார் அவர்.

அரசியலமைப்பின் 200ஆவது பிரிவு என்ன கூறுகிறது?

ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக அண்மையில் அளித்த நோட்டீஸில், "தமிழ்நாடு ஆளுநர் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் அரசியலமைப்பின் 200ஆவது பிரிவின்படி ஆற்றாமல் அரசியலமைப்பு முறைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருகிறார். அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும் ஒத்திசைவுப் பட்டியல் மூன்றின் கீழ் வரும் மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காமலும் இருக்கிறார்" என்று கூறப்பட்டிருந்தது.

இது பற்றி ஆளுநரிடம் பிபிசி தமிழ் நேரடியாக கேட்டபோது, "பண மசோதா மட்டுமே ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டிய மசோதா. ஏனைய அனைத்து மசோதாக்களும் ஆளுநரின் பரிசீலனைக்கு உட்பட்டவையே" என்று அவர் பதிலளித்தார்.

ஆனால் இந்த நிலைப்பாடு ஏற்படையதல்ல என்கிறார் கற்பக விநாயகம்.

"அரசியலமைப்பின் 200ஆவது பிரிவின்படி இரண்டாவது முறையாக விளக்கம் கேட்பதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒப்புதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியது ஆளுநரின் கடமை" என்கிறார் கற்பக விநாயகம்

"அரசியலமைப்பு 200இல் கூறப்பட்டுள்ள ''As soon as possible" என்பது 'விரைந்து அனுப்ப வேண்டும்' என்பதையே குறிக்கும்," என்கிறார் அரி பரந்தாமன்.

"அரசியல் சட்டம் தொடர்பாக அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்படும்போது தற்போது 200 என இருக்கும் இந்த விதி, 175-ஆக இருந்தது. அதில் ஆறு வாரங்களுக்குள் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் மசோதாவை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கால அளவு அதிகமாக இருப்பதாகக் கருதியே 'As soon as possible' என்பது சேர்க்கப்பட்டது. இதற்காக அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களைப் பார்த்தால் இது புரிந்து விடும். அதனால் 'காலவரம்பற்றது' என்று இதைக் கருத முடியாது " என்று அரி பரந்தாமன் கூறினார்.

அரசியலமைப்பின் 200ஆவது விதி, சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்படும்போது, அவர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

பிபிசி தமிழுக்கு ஆளுநர் அளித்த பேட்டியில் அரசியலமைப்பு விதி 168இன்படி, சட்டப்பேரவையுடன் ஒருங்கிணைந்த அங்கம்தான் ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அரி பரந்தாமனிடம் கேட்டபோது, "அரசியலமைப்பின் 168ஆவது விதியில் அப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைதான். 'ஆளுநர்' பேரவையின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பேரவையின் முடிவை அவர் தடுக்க முடியாது" என்றார்.

ஆளுநரை வாபஸ் பெற வைக்க மாநில அரசால் முடியுமா?

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையில் ஏப்ரல் 4ஆம் தேதி திமுக எம்.பிக்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பினார்கள். இரு முறை திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநரை திரும்பப் பெற வைப்பதற்கு மாநில அரசால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க முடியுமா என்று நீதிபதி அரி பரந்தாமனிடம் கேட்டோம்.

"அரசியலமைப்பில் அதற்கு வழியில்லை" என்று அவர் பதிலளித்த அவர், "சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் இயற்றலாம். அதை வைத்து ஆளுநரை நீக்கி விட முடியாது. அது அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுப்பதற்கு வேண்டுமானால் பயன்படலாம்," என்கிறார் அரி பரந்தாமன்.

திமுக Vs ஆளுநர்: மோதலின் பின்னணி

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது முதலே திமுகவுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியபோதும், அதை மீண்டும் சபாநாயகருக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்த தமிழக அரசு மீண்டும் சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி கூட்டப்பட்டது. அதே மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி ஆளுநரை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் மசோதாவை ஆளுநர் தமது அலுவலகத்திலேயே நிறுத்திவைக்க முடியாது என்றும் அதை அவர் குடியரசுத் தலைவருக்கே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் விதிகள் கூறுவதாக சட்ட நிபுணர்களை மேற்கோள்காட்டி திமுக தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக அனுப்பி வைத்த மசோதாவையும் ஆளுநர் தன்வசமே வைத்துள்ளதால், அவரது செயல்பாடுகளை விமர்சித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் திமுக பல தளங்களில் குரல் கொடுத்து வருகிறது. சமீபத்தில் டெல்லி வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தபோது அவரிடம் அளித்த மனுவிலும் ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :